திங்கள், 29 டிசம்பர், 2014

மரண தண்டனை நிறைவேற்றத்தை நிறுத்த முடியாது: பாகிஸ்தான் திட்டவட்டம்

பாகிஸ்தானில் பயங்கரவாதிகளுக்கு அளிக்கப்பட்ட மரண தண்டனைகளின் நிறைவேற்றத்தை நிறுத்த முடியாது என அந்நாடு திட்டவட்டமாகத் தெரிவித்தது.
இதுதொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவுத் துறையின் செய்தித் தொடர்பாளர் தஸ்நீம் அஸ்லாம் தனது சுட்டுரை வலைதளத்தில் பதிவு செய்துள்ள கருத்தில், பயங்கரவாதிகளுக்கு அளிக்கப்பட்ட மரண தண்டனையை நிறைவேற்றுவது எந்த சர்வதேச சட்டத்தையும் மீறும் செயலாக கருத முடியாது எனக் குறிப்பிட்டுள்ளார்.
"உலக நாடுகளின் கருத்துக்கு பாகிஸ்தான் மதிப்பளிக்கிறது. பாகிஸ்தான் தற்போது மிகவும் அசாதாரணமான சூழலைக் கண்டு வருகிறது. இதனை எதிர்கொள்ள அசாதாரணமான முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது.

உலக நன்மையைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது, அமைதி நிலவும் பாகிஸ்தான் என்பது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். நாடுகளின் கடமைகள் தொடர்பாக, ஐ.நா. மனித உரிமை சாசனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதை பாகிஸ்தான் நன்றாக அறிந்துள்ளது. பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றும் நடவடிக்கை எந்த சர்வதேச சட்டத்தையும் மீறும் செயல் அல்ல. மரண தண்டனை நிறைவேற்றத்தை மறுபரிசீலனை செய்ய இயலாது' என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெஷாவர் பள்ளித் தாக்குதல் எதிரொலியாக, மரண தண்டனை நிறைவேற்றத்துக்கு பாகிஸ்தான் சுயமாக விதித்துக் கொண்ட தடை விலக்கிக் கொள்ளப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, இதுவரை 6 பயங்கரவாதிகள் தூக்கிலிடப்பட்டனர். 55 பயங்கரவாதிகளின் கருணை மனுக்களை அந்நாட்டு அதிபர் நிராகரித்ததையடுத்து, அவர்கள் எந்நேரமும் தூக்கிலிடப்படும் நிலை உள்ளது.
இதுதவிர, மரண தண்டனை விதிக்கப்பட்ட 500-க்கும் மேற்பட்டோர் விரைவில் தூக்கிலிடப்படவிருப்பதாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் கடந்த வாரம் அறிவித்தது.
இந்நிலையில், பயங்கரவாதிகளை தூக்கிலிடுவதை நிறுத்த வேண்டும் எனவும், மரண தண்டனை நிறைவேற்றத் தடையை மீண்டும் கொண்டு வர வேண்டும் எனவும் பாகிஸ்தானை ஐ.நா. பொதுச் செயலர் பான் கி-மூன் கேட்டுக் கொண்டார்.
இது தொடர்பாக, அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீஃபுடன் அவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். "உங்களுடைய இக்கட்டான நிலையை நாங்கள் உணர்கிறோம். ஆயினும்கூட, மரண தண்டனை நிறைவேற்றங்களுக்கான தடையை மீண்டும் அமல்படுத்த வேண்டும்' என பான் கி-மூன் கேட்டுக் கொண்டார்.
ஐரோப்பிய யூனியனும் இந்த விவகாரம் தொடர்பாக தனது அதிருப்தியைத் தெரிவித்தது.
இதையடுத்து, பாகிஸ்தான் வெளியுறவுத் துறையின் செய்தித் தொடர்பாளர் கருத்து வெளியிட்டார் என்பது குறிப்பிடத் தக்கது. dinamani.com

கருத்துகள் இல்லை: