தமிழ்நாட்டில்
2012-ல் 34 தலித் பெண்கள் மட்டுமே பாலியல் வன்முறைக்கு
ஆளாகியிருக்கிறார்கள் என்று தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ளது.
ஆனால், ‘எவிடன்ஸ்’அமைப்பு தமிழ்நாடு முழுக்க நடத்திய ஆய்வில் 124
தலித்பெண்கள் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டி ருக்கிறார்கள் என்று
ஆதாரப்பூர்வமான தகவலை வெளியிட்டு அதிர்ச்சியூட்டிள்ளது. இதில்,
பாதிக்கப்பட்ட 29 சதவீதம் பெண்கள் பாலியல் வண்புணர்ச்சிக் குள்ளாக்கப்
பட்டிருக்கிறார்கள். அதுவும், 124 வன்கொடுமை சம்பவங்களில் 1 சம்பவத்தில்
மட்டுமே தண்டனை கிடைத்துள்ளது என்கிற ‘எவிடன்ஸ்’அமைப்பின் ஆய்வு... இதற்கு
ஆதாரமாக சுமார் 6500 பக்கங்கள் கொண்ட ஆவணங்களை சேகரித்துள்ளது!அதிர்ச்சியில் உறையவைக்கும் தலித்பெண் வன்கொடுமைகள் சில...
வன்(பெண்)கொடுமை-1
3.11.2010 அன்று மாலை 4.00 மணி. சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டை
அருகிலுள்ள கல்லங்குடி ஊராட்சிமன்றத்தலைவி பூமயில் ரேஷன் கடைக்கு
சென்றிருக்கிறார். அப்போது, அங்குவந்த ராஜேஸ்வரி என்பவரும் பூமயிலுக்கும்
பிரச்சனை உண்டானது. அதற்குப்பிறகு, நடந்ததது என்ன? தலித் பெண்ணான
ஊராட்சிமன்றத்தலைவி பூமயிலின் வாக்குமூலம் இதுதான், “தலித் சமூகத்தைச்
சேர்ந்த பாண்டிமீனா செய்யவேண்டிய மக்கள் நலப்பணியாளர் வேலையை இந்த
ராஜேஸ்வரி செஞ்சதால சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடமும் தேவக்கோட்டை வட்டார
வளர்ச்சி அலுவலரிடமும் புகார் கொடுத்தேன். இதனால, கோபமான ராஜேஸ்வரி, ‘நான்
யாரோட பெயர்ல மக்கள் நலப்பணியாளரா இருந்தா உனக்கென்னடி?’ன்னு
சண்டைபோட்டதோடு சாதி ரீதியாவும் இழிவா பேசி செருப்பால என்னை
அடிச்சுட்டாங்க.
அதுமட்டுமில்ல,
என்னோட சேலையையும் உருவி ஜாக்கெட்டை கிழிச்சி எல்லார் முன்னா லையும்
அவமானப்படுத்திட்டாங்க. இந்தக்கொடுமையைப்பார்த்த பெரியவர் காந்தி, சவுண்டி,
சிலையப்பன், அமுதா, குணசேகரன் ஆகிய ஊர்மக்கள் ராஜேஸ்வரியை தடுத்து
நிறுத்தி என்னை காப்பாற்றினாங்க. இந்த ராஜேஸ்வரிமீது தேவக்கோட்டை தாலுகா
காவல்நிலையத்தில் புகார் கொடுத்தேன். குற்ற எண் 337/2010 பிரிவுகள் 323,
355, 506(2), 379 இந்திய தண்டனை சட்டம் மற்றும் தாழ்த்தப்பட்டோர் மற்றும்
பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு சட்டம் 1989 பிரிவு 3(1) (10)படியும்
வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கு. ஆனா, எந்த நடவடிக்கையும் எடுக்கப்படல”
என்கிறார் கண்கலங்கியபடி.
’எவிடன்ஸ்’ கதிர்:
வன்(பெண்)கொடுமை-2
தர்மபுரி
மாவட்டம், பாலக்கோடு வட்டம், மகேந்திர மங்கலம் காவல்நிலை எல்லைக்குட்பட்ட
கிராமத்தில் வசித்துவருகிற 16 வயது தலித் சிறுமி
நிவேதிதா(பெயர்மாற்றப்பட்டுள்ளது)வின் பெற்றோர்கள் இறந்துபோய்விட்டனர்.
இதனால், தன்னுடைய தாத்தா-பாட்டி வீட்டில் தங்கி எட்டு கிலோமீட்டர் தொலைவில்
உள்ள மல்லுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு
படித்துவந்தார். கடந்த 9-7-2010 அன்று பேருந்தில் பள்ளிக்கூடம்
சென்றுகொண்டிருந்தார். வழியில் ஆலமரம், விழுந்திருந்ததால் பள்ளிக்கு நான்கு
கிலோமீட்டருக்கு முன் அனைத்து பயணிகளும் பேருந்திலிருந்து
இறக்கிவிடப்பட்டனர்.
இதனால்,
மல்லுப்பட்டி கிராமத்திலுள்ள பள்ளிக்கு தனது சக மாணவியுடன் நடந்து
சென்றுகொண்டிருந்தார். அப்போது, அந்தப்பள்ளியின் தலைமை ஆசிரியர்
பன்னீர்செல்வம் தன்னுடைய மாருதி காரில் வர, மாணவிகள் இருவரும் தலைமை
ஆசிரியரைப்பார்த்து வணக்கம் வைத்தனர். ‘எதுக்கு நடந்துப்போகணும்? என்கூடவே
ஸ்லுக்கு வந்துடுங்களேம்மா’ என்று அக்கறையாக பேசி அழைக்க... நிவேதிதா
காரில் ஏரியதும் நிவேதிதாவின் சகப்பள்ளித்தோழி காரில் ஏறுவதற்குள் கார்
வேகமாக பறந்தது. தலைமை ஆசிரியர் பன்னீர்செல்வம் நிவேதிதாவிடம் பாலியல்
ரீதியான துன்புறத்தலில் ஈடுபட வீட்டுக்கு வந்து நடந்ததைச் சொல்லி
அழுதிருக்கிறார். மகேந்திரமங்கலம் காவல்நிலையத்தில் நிவேதிதா இதுபற்றி
புகார்கொடுக்க தலைமை ஆசிரியர் பன்னீர்செல்வம் மீது வழக்குப்பதிவு செய்தது.
ஆனால், அவர்மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
வன்(பெண்)கொடுமை-3
கோயம்புத்தூர்
மாவட்டம், பொள்ளாச்சி வட்ட கிணத்துக்கடவு காவல்நிலய எல்லைக்குட்பட்ட
வீரப்பகவுண்டனூர் கிராமத்தை சேர்ந்தவர் தெய்வநாயகி(பெயர்
மாற்றப்பட்டுள்ளது). கணவர் இறந்து போனதால், கூலிவேலை செய்து தன்னுடைய
இரண்டு பிள்ளைகளை படிக்கவைத்தார். ஆனால், 7-8-2011 அன்று இரவு தனக்கு
நேர்ந்ததாக அவர் காவல் நிலையத்தில் கொடுத்தப்புகார் மிகக் கொடூரமானது.
“டீக்கடை வெச்சிருக்குற பொன்னுசாமி, பாலதண்டபாணி, உத்தரமூர்த்தி, ராஜன்,
சுரேஷ் ஆகிய அஞ்சுபேரும் என்னை கைகால்களை கட்டிப்போட்டு தப்பா
நடந்துக்கிட்டாங்க. வலிதாங்க முடியாம திமிரிய என்னை அடிச்சு
காயப்படுத்திட்டாங்க. இதுல, பொன்னுசாமியும் பாலதண்டாயுதபாணியும், ‘இவள
உயிரோட விட்டா நமக்கு ஆபத்து...கொண்ணுடுவோம்’ன்னு சொல்லி என்கழுத்துல
சேலையை தூக்குக்கயிறாக்கி சுருட்டி மரக்கிளையில கட்டித் தூக்குபோட்டு
கொல்லப்பார்த்தாங்க.
என்
நல்ல நேரம் அந்த மரக்கிளை முறிஞ்சி நான் கீழ விழுந்துட்டேன். சத்தம்கேட்டு
அக்கம்பக்கத்துல உள்ளவங்க ஓடிவர்றதுக்குள்ள கொலைகும்பல் தப்பி
ஓடிப்போயிடுச்சி” என்று திகில் விலகாமல் சொல்லியிருக்கிறார். உடல்மன
ரீதியாக பாதிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு
சேர்க்கப்பட்ட தெய்வநாயகிக்கு மூன்று நாள் கழித்துதான் சுயநினைவே
வந்திருக்கிறது. கிணத்துக்கடவு காவல்நிலையத்தில் புகார் கொடுத்து வன்கொடுமை
தடுப்புச்சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டும் குற்றவாளிகள் கைது
செய்யப்படவில்லை.
கடலூர் மாவட்ட சிதம்பரம் வட்டம் பு.முட்லூர் அருகிலுள்ள சம்பந்தம்
காலனியைச்சேர்ந்த தலித்பெண் சந்தியா மற்றும் காட்டுமன்னார்கோயில்
குணமங்களம் கிராமத்தை சேர்ந்த 21 வயது சுகந்தி, திருநெல்வேலி
அம்பாசமுத்திரவட்டம் ஆழ்வார்குறிச்சி
காவல் எல்லைக்குட்பட்ட கருத்தபிள்ளையூர் கிராமத்தைச்சேர்ந்த 13 வயது
சிறுமி சந்தியா(பெயர் மாற்றப்பட்டுள்ளது), திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி
அருகிலுள்ள மெதூர் கிராமத்தைச்சேர்ந்த தேவி(பெ.மா) என்று தமிழ்நாடுமுழுக்க
வன்கொடுமைக்கு ஆளான, தலித் பெண்களின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.
இதுகுறித்த நீண்ட ஆய்வினை செய்த ‘எவிடன்ஸ்’அமைப்பின் செயல்
இயக்குனர் எவிடன்ஸ் கதிர் நம்மிடம், “இந்தியாவுல கடந்த 2012 ஆம் ஆண்டு
24,923 பாலியல் வண்புணர்சி சம்பவங்கள் நடந்திருக்கு. இதுல, தலித் பெண்கள்
பாலியல் வன்புணர்ச்சி செய்யப்படும் வழக்குகளில் ஐந்து சதவீதத்திற்கும்
குறைவாகவே நீதி கிடைக்கிறது. இதுக்கு, முக்கியக் காரணத்தை ஆராய்ந்து
பார்த்தால் சாதிவெறியும்.. ஆணாதிக்கப்போக்கும்தான் முக்கியப்பங்
காற்றுகின்றன. தமிழகத்தில் 25 மாவட்டங்களில் இந்த ஆய்வை செய்தோம். கடந்த
2009 முதல் ஆகஸ்ட் வரை வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 124 தலித் பெண்கள்
அவர்களது குடும்பத்தினரை நேரடியாக சந்தித்து செய்த ஆய்வில்தான்
இப்படிப்பட்ட அதிர்ச்சிகரமான புள்ளிவிவரங்கள் கிடைத்தன.
மதுரை
மாவட்டத்தில் 23 வழக்குகள், திருநெல்வேலி-13, சிவகங்கை-12, விருதுநகர்
மற்றும் தேனி மாவட்டங்களில் தலா- 11, திண்டுக்கள்-10 தர்மபுரியில்-6,
சேலம் மற்றும் தூத்துக்குடியில் தலா-5, நாமக்கல்-4, கடலூர் மற்றும்
தஞ்சாவூர் தலா-3, புதுக்கோட்டை, நாகப்பட்டின, ஈரோடு, விருப்புரம்
கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் தலா- 2, திருவண்ணாமலை, பெரம்பலூர்,
வேலூர், திருப்பூர், கரூர், கிருஷணகிரி, நீலகிரி, இராமநாதபுரம் ஆகிய
மாவட்டங்களில் தலா-1 வழக்குகள் ஆய்வில் எடுத்துக்கிட்டோம். நான்கு
பாகங்களைக்கொண்ட 54 கேள்விகளை உள்ளடக்கிய படிவத்தின் மூலம் அவர்களின்
பதில்களை நிரப்பியதோடு.. 124 தலித் பெண்களின் புகார் மனுக்கள், முதல் தகவல்
அறிக்கை, குற்றப்பத்திரிகை, காய சான்றிதழ், புகைப்படம், நீதிமன்ற உத்தரவு
உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களையும் திரட்டியிருக்கிறோம். காவல்துறை தலித்
பெண்களின் புகார்கள் என்றால் எவ்வளவு அலட்சியம் காட்டுகிறார்கள் என்பதற்கு
இந்த ஆய்வே சான்று” என்கிறார் வேதனையுடன்.
ஆண் ஆளும் ஆட்சியில் பெண்களின் நிலைமை எப்படி இருக்கிறது என்பதை மக்களுக்கு சுட்டிக்காட்டுகிறது இந்த ஆய்வு! nakkheeran.in
-மனோ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக