மோடியின் படேல் சிலை2014 பாராளுமன்ற தேர்தல் வரை மோடியின் அடையாளமாக காட்டப்பட்டது என்னவென்று நினைவிருக்கிறதா? வளர்ச்சியைத் தவிர்த்த வேறு எந்த சிந்தனையும் இல்லாதவர் அவர் என்பதாகவே மோடியின் பிம்பம் கட்டமைக்கப்பட்டது. அடிப்படைவாதத்தால் வளைக்க முடியாத மக்கள் கூட்டத்திடம் மோடியின் வளர்ச்சி முகத்துக்காக எங்கள் மற்ற பாவங்களை மன்னியுங்கள் என்ற தொனியில்கூட பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது.
படேலுக்கு சிலை வைக்கப் போகும் மோடி
ஆனால் இந்த திட்டத்தில் கொஞ்சமும் இணைக்க முடியாத ஒரு செயலாக அவரது படேல் பாசம் இருந்தது. உலகிலேயே பெரிய சிலையை படேலுக்கு வைக்கப்போகிறேன் என்றார், அதற்காக இரும்பு திரட்டப்போகிறேன் என்றார், படேலுக்காக எல்லோரும் மராத்தான் ஓடுங்கள் என்றார். இந்த ஒரு நடவடிக்கை மட்டும் அவரது அமெரிக்க பாணி பிரமோஷனுக்கு சற்றும் தொடர்பற்றதாக இருந்ததை அன்றைக்கு ஓங்கி ஒலித்த விளம்பர ஒலியில் நாம் கவனிக்கத் தவறிவிட்டோம். இன்றைக்கு ஒரு தீவிர ஆர்எஸ்எஸ்காரரான மோடி காங்கிரஸ் தலைவரான படேலை ஆராதிப்பதற்கான வரலாற்றுக் காரணங்களை முதலில் பரிசீலனை செய்யலாம்.

நாதுராம் கோட்சே தான் யாரையெல்லாம் சுதந்திரப் போராட்ட வீரர்களாக கருதுகிறேன் என்பதை தனது வாக்குமூலத்தில் இப்படி பட்டியலிடுகிறார். “ திலகர், என்.சி.கேல்கர், சி.ஆர்.தாஸ், மதிப்பிற்குரிய சர்தார் படேலின் சகோதரர் விதல்பாய் படேல், பண்டிட் மாளவியா, பாய் பரமானந்த் மற்றும் கடந்த பத்தாண்டுகளாக முக்கிய இந்துசபா தலைவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் பகுதியினருக்கே அதற்கான பெருமை போய்ச்சேர வேண்டும்.” (1993ல் கோபால் கோட்சே வெளியிட்ட நாதுராம் கோட்சேயின் வாக்குமூலமான – நான் ஏன் மகாத்மா காந்தியை கொலை செய்தேன் நூலில் இருந்து). படேலை அவர் குறிப்பிடும் விதத்தை கவனியுங்கள் “மதிப்பிற்குரிய சர்தார் படேல்” ஏனைய நாடறிந்த பெயர் எதையும் அவர் குறிப்பிட்டிருக்கவில்லை. சரி, ஆர்.எஸ்.எஸ்சின் படேல் பாசத்தைப் பார்த்தாயிற்று.
சர்தாரின் ஆர்.எஸ்.எஸ் காதலை கொஞ்சம் விரிவாக பார்க்கலாம்.
1947 டிசம்பர் 29-ம் தேதி பிரதமர் நேரு உள்துறை அமைச்சர் படேலுக்கு எழுதுகிறார் “ அஜ்மீரில் இருந்த 50 ஆயிரம் முஸ்லீம்களில் பத்தாயிரம் பேர் வெளியேறிவிட்டதாகவும் வெளியேற்றம் இன்னமும் தொடர்வதாகவும் அறிகிறேன். அங்கும் இதர பகுதிகளிலும் ஆர்.எஸ்.எஸ் தாக்கும் மனோபாவத்தில் உள்ளது. அவர்கள் விடுக்கும் மிரட்டல்கள் பலரையும் பயமுறுத்துகிறது”. இந்த கடிதத்துக்கு படேலிடமிருந்து முறையான பதிலில்லை. ஆகவே நேரு பஞ்சாயத்திற்காக காந்தியிடம் செல்கிறார். 1948 ஜனவரி 6-ம் தேதி காந்திக்கு அவர் குறிப்பொன்றை அனுப்புகிறார், நகல் படேலுக்கும் செல்கிறது. உள்ளடக்கம் இதுதான் “எனக்கும் சர்தாருக்கும் மனோபாவங்களில் வேறுபாடு உள்ளது என்பது மட்டுமல்ல, பொருளாதார மற்றும் மதவெறி விஷயங்களை எப்படி அணுகுவது என்பதிலும் வேறுபாடு உள்ளது.”
இதற்கான படேலில் பதில், ஆமா அதுக்கு என்ன இப்போ எனும் தோரணையில் இருந்தது. ஜனவரி 12-ம் தேதி அவரது பதில் குறிப்பு இப்படியிருந்தது ”மனோபாவம், பொருளாதார விஷயங்கள் மற்றும் இந்து முஸ்லீம் உறவுகளை பாதிக்கும் விஷயங்களிலும் வேறுபாடு உள்ளது என்பதில் மறுப்பு ஏதுமில்லை”.
நாதுராம் கோட்சேவுக்கு பத்திரிகை நடத்த ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்தவர் சாவர்க்கர். ஜனவரி 20, 1948-ம் தேதி காந்தியைக் கொல்ல முயன்றதற்காக கைது செய்யப்பட்ட மதன்லால் பாவா இரண்டு முக்கியமான தகவல்களை சொல்கிறார். இந்த கொலை முயற்சிக்கு முன்பு தான் சாவர்க்கர் சதனில் சாவர்க்கரை சந்திதத்தாகவும், தன்னுடன் ஆறுபேர் கொண்ட கோஷ்டியும் இச்சதியில் பங்கேற்றதாகவும் அதில் ஒருவர் ராஷ்ட்ரீய அல்லது அக்ரானி மராட்டா எனும் பெயர் கொண்ட மராத்தி பத்திரிக்கையின் ஆசிரியர் எனவும் குறிப்பிடுகிறார். அந்த ஆசிரியர்தான் ஜனவரி 30, 1948-ம் தேதி காந்தியை கொன்ற நாதுராம் கோட்சே.
பிப்ரவரி 20ல் (1948) நேரு படேலுக்கு மிக முக்கியமான கடிதமொன்றை எழுதுகிறார். கேரா எனும் அதிகாரியின் குறிப்பை மேற்கோள் காட்டும் அக்கடிதம் இப்படி இருக்கிறது “ ஜனவரி 20-ம் தேதி நடக்காமல் போனதை போலீசின் அலட்சியத்தை பயன்படுத்தி இப்போது நிறைவேற்றிக்கொண்டார்கள். அவர்கள் பற்றிய விவரங்களும் அவர்களது கூட்டாளிகளது பெயர்களும் போலீஸ் வசம் இருந்தன. அவர்கள் 20ம் தேதி மும்பை திரும்பி மீண்டும் 28 அல்லது 29ல் டெல்லி வந்திருக்கிறார்கள். ஒரு சாதாரண சோதனையில்கூட அவர்களை கண்டு பிடித்திருக்க முடியும். இது அலட்சியமல்ல, அரசு அதிகாரத்தைப் பராமரிப்பதில் மோசமான விருப்பமின்மையோடு இருந்திருக்கிறது”.
இதனை இன்னும் தீவிரமான அலட்சியத்தோடு அணுகுகிறார் படேல். இது தீவிர உணர்ச்சி தந்த அழுத்தத்தில் எழுதப்பட்ட குறிப்பு என பதிலளித்து விசயத்தை 21 பிப்ரவரியிலேயே முடிக்கிறார் படேல். காந்தி கொலைச்சதியை தீவிரமாக விசாரிப்பதாக பாவனை செய்யக்கூட அவர் தயாராக இல்லை என்பது படேலின் பதிலில் தெளிவாக வெளிப்படுகிறது.
இவ்விடயத்தை இன்னும் ஒருமுறை படேலுக்கு அதே பிப்ரவரி 26 அன்று நினைவூட்டுகிறார் நேரு. “பாபுவின் படுகொலை குறித்த விசாரணையில் உண்மையை கண்டுபிடிப்பதில் உண்மையான முயற்சி இல்லாததாகப் படுகிறது. இக்கொலை ஒரு தனிப்பட்ட வேலையல்ல, மாறாக பிரதானமாக ஆர்.எஸ்.எஸ் ஆல் நடத்தப்பட்ட ஒரு விரிவான இயக்கத்தின் ஒரு பகுதி என்றே நான் மேலும் மேலும் கருதுகிறேன். டில்லி போலீசாரில் பலர் ஆர்.எஸ்.எஸ் அனுதாபிகளாக இருப்பது மேலும் ஆபத்தானதாக உள்ளது.”
மோடி - படேல் பாசம்
உலகிலேயே பெரிய சிலையை படேலுக்கு வைக்கப்போகிறேன் என்றார், அதற்காக இரும்பு திரட்டப்போகிறேன் என்றார்
இத்தனை தீவிரமான நினைவூட்டலுக்குப் பிறகும் படேலின் காவி மூளை ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு உடனடி ஊழியம் செய்கிறது. மறுநாளே படேல் இப்படி தீர்ப்பளிக்கிறார் “குற்றவாளிகள் வாக்குமூலத்தில் இருந்து இதில் ஆர்.எஸ்.எஸ் பங்கேற்கவில்லை என தெரிகிறது. பலரும் நினைப்பதுபோல இதன் பின்னால் பெரிய சதி ஏதுமில்லை (27.02.1948 கடிதம்)”.
ஆனால் இவ்வழக்கின் தீர்ப்புக்கு பெரிய ஆதாரமாக கொள்ளப்பட்ட திகம்பர் பட்கே எனும் ஆர்.எஸ்.எஸ்சின் ஆயுத வினியோகஸ்தரின் வாக்குமூலம் கோட்சே சம்பவத்திற்கு முன்பு சாவர்கரிடம் ஆசி பெற்றதாக சொல்கிறது (1948 ஜனவரி 14 மற்றும் 17 தேதிகளில்). இரண்டாம் சந்திப்பில் வெற்றியோடு திரும்பிவாருங்கள் என அவர்கள் தோளில் கைபோட்டுக்கொண்டு ஆசீர்வதித்ததாக குறிப்பிடுகிறார் பட்கே. சாதாரண தையற்காரரான கோட்சேவுக்கு எப்படி ஆயுதம் வாங்கவும் பம்பாய்க்கும் டெல்லிக்கும் விமானத்தில் பறக்கவும் பணம் வந்த்து என்பது பற்றி விசாரணை செய்யப்படவில்லை.
சாவர்கரை தப்பிக்க வைக்க கோட்சே இச்சதியை தான் மட்டுமே செய்ததாக ஒப்புக்கொள்கிறார். மற்ற குற்றவாளிகள் தண்டிக்கப்பட்ட பிறகு, பட்கேயின் வாக்குமூலத்தைக்கொண்டு மட்டும் சாவர்கரை தண்டிக்க முடியாது என சொல்லி அவரை மட்டும் விடுவிக்கிறார் நீதிபதி ஆத்மாசரண். அப்போது நீதிமன்றத்திலேயே சாவர்க்கர் காலில் விழுந்து ஆசி பெறுகிறார்கள் மற்ற குற்றவாளிகள். சதியில் பங்கேற்காதவர் காலில் சதிகாரர்கள் விழுந்திருக்கிறார்கள்.. இந்து தர்மம்தான் எத்தனை மகத்தானது!!! தேசத்தலைவர் என சொல்லப்பட்டவரின் கொலைவழக்கில் பிரதான குற்றவாளியொருவர் விடுவிக்கப்பட்ட பிறகு அரசு அப்பீலுக்கு போகவில்லை. மேலோட்டமான பார்வையிலேயே இவ்வழக்கில் ஆர்.எஸ்.எஸ்சின் பங்கை நம்மால் தெரிந்துகொள்ள முடியும், அதனை மறைப்பதில் படேலுக்கு இருந்த அக்கறையையும் நம்மால் உணர இயலும். படேலின் காவி பாசத்தை இன்னும் நெருக்கமாக பார்க்கவும் ஆதாரமிருக்கிறது.
அவ்வமைப்பை படேல் தடை செய்தார் என்பது உண்மையென்றாலும், அது அதன் தலைவர்களை சிறைவைத்து பாதுகாக்கவே என கருத எல்லா நியாயங்களும் இருக்கிறது. அப்போது மக்கள் இந்து அடிப்படைவாதிகள் மீது கடும்கோபத்தில் இருந்திருக்கிறார்கள். காந்தி கொல்லப்பட்ட அன்று சாவர்கர் வீட்டை தாக்கியவர்கள் 500 பேர். அப்போது படுக்கையறையில் ஒடுங்கி ஒளிந்துகொண்டிருந்தார் ”வீர” சாவர்க்கர். வாய்ப்பிருந்தும் கோட்சேயை முன்பே கைது செய்யாத காவல்துறை இப்போது மட்டும் சரியான நேரத்தில் சாவர்கரை காப்பாற்றியது.
ஆர்.எஸ்.எஸ்சின் மீதான தடையை விலக்கிக்கொள்ளச் சொல்லி கோல்வால்கர் நேருவுக்கு கடிதம் அனுப்புகிறார். கம்யூனிச எதிர்ப்பில் அரசுக்கு உதவுவதாக ஆஃபரும் கொடுக்கிறார். அவர்களை தேசவிரோத அமைப்பென குறிப்பிட்ட நேரு, இதுபற்றி முடிவெடுக்க வேண்டியது படேலின் உள்துறைதான் என பதிலளிக்கிறார். வேண்டுகோள் கடிதம் படேலுக்கு போகிறது. இரும்பு மனிதர் கருணையோடு பதிலளிக்கிறார் “ காங்கிரசில் சேருவதன் மூலம் நீங்கள் உங்களது தேசபக்த முயற்சியை மேற்கொள்ள வேண்டும் (11.09.1948 தேதியிட்ட கடிதம்)”. பிறகு இன்னொரு ஆலோசனை வழங்குகிறார், ஆர்.எஸ்.எஸ் தமக்கென ஒரு அமைப்புச்சட்டத்தை உருவாக்கிக்கொள்ளவேண்டும் என்பதே அது. அந்த கட்டளையை 1949 ஜூனில் நிறைவேற்றுகிறது ஆர்.எஸ்.எஸ். அதையே காரணமாக வைத்து அவர்கள் மீதான தடையை விலக்கிக்கொள்கிறார் படேல்.
இந்து மகாசபையின் தலைவராக இருந்த சியாமா பிரசாத் முகர்ஜி மே 4 1948ல் படேலுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார் ”அவரது (சாவர்க்கர்) அரசியல் கோட்பாடுகளுக்காகவே அவர் விசாரிக்கப்பட்டார் என்று பின்னாளில் பேச்சு எழும்படி எதுவும் நிகழாதவாறு பார்த்துக்கொள்வீர்கள் என்பதில் எனக்கு எந்த சந்தேகமுமில்லை”.
இதற்கு மே 6 ல் பதிலளிக்கிறார் படேல் “சாவர்க்கரை குற்றவாளிப் பட்டியலில் சேர்ப்பதைப் பொறுத்தவரை சட்டம் மற்றும் நீதிமுறைமை எனும் கோணத்தில் மட்டுமே பார்க்கவேண்டுமேயொழிய அரசியல் காரணங்களை இதில் இழுக்கக்கூடாது என அதிகாரிகளிடம் சொல்லியிருக்கிறேன்”.
வல்லபாய் படேலுக்கு இருந்த காவிப்பற்றையும் காவி காலிகள் படேலுக்கு எத்தனை தூரம் நன்றிக்கடன்பட்டவர்கள் என்பதையும் அறிய இருக்கும் எண்ணற்ற ஆதாரங்களில் மிகச்சிறு பாகம்தான் நாம் இதுவரை விவாதித்தது. காவிகளின் இன்றைய அசுர வளர்ச்சிக்காக படேல் ஆற்றிய சேவை அளப்பரியது. அதற்காவே பாஜக அவரைக் கொண்டாடுகிறது.
ஆனால்…
மோடி படேல் சிலையாக
இன்னமும் எம்ஜிஆராக வேடமிடும் சிலரைப்போல.
ஒப்பிட முடியாத ஒரு விளம்பர மோகியான மோடிக்கு படேல் மீது இத்தனை நன்றியுணர்ச்சி வர வாய்ப்பேயில்லை. ஏனெனில் நார்சிசம் என்பது நன்றியுணர்வின் பரம விரோதி. ஆகவே மோடியின் இந்த படேல் பாசத்திற்கு வேறொரு காரணம் இருந்தே ஆகவேண்டும்.
தான் கவனிக்கப்படவேண்டும் எனும் தேவைக்கும் தனது பாத்திரம் என்ன என்பதில் இருக்கும் குழப்பத்துக்கும் இடையேயான முரண்பாடுதான் வளர் இளம்பருவத்தவரின் மனோநிலை என்கிறார்கள் உளவியில் அறிஞர்கள். எப்படியேனும் அடுத்தவர் கவனத்தை பெறவேண்டும் எனும் தணியாத தாகம் இளையோருக்கு இருக்கும். ஆனால் எப்படி அதனை செய்வது என்பது அவர்களுக்கு தெரியாது. தங்களது சரியான பாத்திரம் இச்சமூகத்தில் எது என்பதை அவர்களால் கண்டுபிடிக்க முடியாது. ஆகவே தன்னை வசீகரித்த ஒரு ஆளுமையின் நகலாக தன்னை காட்டிக்கொள்வதன் மூலம் தன்னை அடையாளப்படுத்திக்கொள்வார்கள். அதனால்தான் ரசிகர் மன்றங்கள் பெரும்பாலும் விடலைப் பையன்களால் நிரம்பியிருக்கின்றன. பெரும்பாலானவர்களுக்கு இந்த சிக்கல் சில காலத்தில் சரியாகிவிடும், ஆனால் சிலருக்கு இது ஆயுளுக்கும் தொடரலாம். இன்னமும் எம்ஜிஆராக வேடமிடும் சிலரைப்போல.
எனினும் இதை ஒரு சமூகவியல் பார்வையிலும் பார்க்க வேண்டியுள்ளது. தனக்கு கீழ் அதிகாரம் செல்லுபடியாகும் சமூக அடிப்படையையும், சித்தாந்தத்தையும் கொண்டிருப்போருக்கு இது சற்று வேறு தளத்திலும் செயல்படுகிறது. குறிப்பிட்ட அதிகாரம் தரும் போதையிலும், திளைப்பிலும் மூழ்கியிருப்போர் தன்னைப் பற்றிய சுய மதிப்பீட்டை மிகையாகவும் செய்து கொள்கிறார்கள். அதன்படி இந்த உலகை உய்விக்க வந்த அதீத மனிதர்களாகவும் கருதிக் கொள்கிறார்கள். இதில் அகநிலை, புறநிலை என்று பிரிக்கமுடியாத படி அவர்களது சமூக அதிகாரத்திற்கான இருப்பு பங்காற்றுகிறது.
மோடிக்கு இருப்பதும் இதையொத்த பிரச்சனைதான். அவருக்கு தான் எப்போது கவனிக்கப்பட்டுக்கொண்டே இருக்க வேண்டும் எனும் விருப்பம் இருக்கிறது. இந்த நார்சிச பண்புடன் மோடியை மீட்பராக முன்னிறுத்தும்ஆளும் வர்க்கத்தின் விளம்பர நடவடிக்கைகளும் கணிசமாக கூட்டிவிடுகின்றது. ஒரு வகையில் ஆளும் வர்க்கத்தின் அடியாள் தன்னை கடவுளாக நினைத்துக் கொண்டாலும் அந்த வர்க்கத்திற்கு கவலை இல்லை. வேலை நடந்தால் சரி என்பதால் அவர்கள் இதை பெரிது படுத்த மாட்டார்கள்.
ஆகவே தன்னைத்தானே மீட்பராக கருதிக் கொள்ளும் மோடியிடம் இவை தொடர்பான சில குழப்பங்கள் இருக்கவே செய்யும். முக்கியமாக அவர் அப்படி குழப்பம் என்று உணர வேண்டியதில்லை. இதை மோடியின் பல்வேறு நடவடிக்கைகளின் வாயிலாக அறியலாம். அவர் அம்மா இன்னமும் ஆட்டோவில் பயணிக்கிறார், இதன்மூலம் அவர் எளிமையானவராகவும் அரசுப் பண விசயத்தில் கறாரானவராகவும் காட்டிக்கொள்ள முற்படுகிறார். ஆனால் ஒரு எளிமையை விரும்புபவன் கனவிலும் செய்யத் தயங்குகிற ஆடைஅலங்காரங்களையும் ஒப்பனையையும் அரசுப்பணத்தில் செய்துகொள்பவராக அவர் இருக்கிறார் (அவரது ஆடைகள், கடிகாரம் ஆகியவை லட்சங்களை விழுங்கியவை. பேனாகூட ஆயிரங்களில் விலை கொண்டது)
ஒரு பட்டிக்காட்டு பெண்ணை மனைவியாக அறிவிக்க மறுக்கும் மோடியின் பற்றற்ற துறவி முகம் அதே போன்ற பட்டிக்காட்டு பெண்மணியான அவரது அம்மாவிடம் பணிவு காட்டும் வீட்டுக்கடங்கிய பையனாக தோற்றம் காட்டுகிறது. ஒரு மேட்டுக்குடி தலைவர் தாயை நிலவுடமை பண்பின் அடிப்படையில் அணுகும் போது தாரத்தை முதலாளித்துவ நோக்கில் அணுகுவார் என்பது இந்தியாவுக்கு உள்ள விசேடமான பண்பு.
வானுக்கு கீழ் உள்ள எல்லா விவகாரத்திற்கும் கருத்து சொல்லும் அறிவாளியாக அவர் தன்னை காட்டிக்கொள்ள மெனக்கெடுகிறார். அதற்காக இருநூறுபேர் கொண்ட குழுவும் அவர் வசம் இருந்தது. குப்பை வாருவது முதல் குளோபல் வார்மிங்வரை சகலத்தையும் மேடையில் பேசுகிறார். ஆனால் தனது பேச்சாற்றலை நிரூபிக்க இன்னொரு வழியான பிரஸ்மீட்டை அறவே ஒதுக்குகிறார்.
பிற நாட்டு தலைவர்களுடன்கூட இந்தியில்தான் பேசுவேன் என அறிவிக்கிறார். அடுத்த சில நாட்களில் இஸ்ரோ நிகழ்ச்சியொன்றில் இருபது நிமிடம் ஆங்கிலத்தில் மனப்பாடம் செய்து பேசுகிறார். தனது ஆஃப்பாயில் ஆங்கில ஞானம் பற்றிய தாழ்வு மனோபாவம் ஹிந்தி பற்றாக காட்டப்பட்டது. எப்படியேனும் ஆங்கிலம் பேசிவிடவேண்டுமெனும் ஆர்வம் இஸ்ரோவில் வெளிப்படுகிறது.
படேல் சிலைக்காக மோடி
ஒவ்வொரு விளம்பரப் பிரியனுக்கும் தன்னைப்பற்றி பெருமை பேசுவதற்கான காரணங்களை உருவாக்கும் கடமையிருக்கிறது.
தனது அடையாளம் பற்றிய விருப்பத்துக்கும் யதார்த்தத்துக்கும் இடையேயான பாரிய வேறுபாடு அவரை அலைகழிக்கிறது. இதை நிரப்ப ஆளும் வர்க்க ஊடகங்கள் எவ்வளவுதான் மெனக்கெட்டாலும் ஒரு கோமாளி பாசிஸ்ட்டின் முகத்தை அப்படி எளிதாக மறைத்து விட முடியாது. அதனால் வெளியில் பார்க்கும் பார்வைகளும் விமரிசனங்களும் மோடியை கிண்டல் செய்வது தெரியாமல் போகாது.
ஆகவே வசீகரமான இன்னொரு ஆளுமையோடு தன்னைப் பொருத்திக் கொள்வதன் வாயிலாக தமக்கொரு நிரந்த அடையாளத்தை உருவாக்கிவிடமுடியும் என அவர் கருதுகிறார். காந்தி, நேரு, சுபாஷ் சந்திரபோஸ் போன்ற பிரபலங்களோடு அவரைப் பொருத்திக்கொள்ள இயலாது. கருத்து முரண்பாடு ஒருபக்கமென்றாலும் அவர்களுடனான ஒப்பீடு கொஞ்சமும் அடிப்படையற்றது என்பது அரைநாளுக்குள் அம்பலப்பட்டுவிடும். சாவர்க்கர், கோல்வால்கர் போன்றவர்களின் வழித்தோன்றலாக காட்டிக்கொள்ளலாம், அவர்களை பெரும்பாலான பாஜக உறுப்பினர்களுக்குகூட யாரென்று தெரியாது.
இந்த தரவுகளோடு ஒப்பிடுகையில் மோடி தன்னை படேலோடு அடையாளப்படுத்திக்கொள்வது கொஞ்சம் செல்லுபடியாகக்கூடிய உத்தியாக இருக்கிறது. படேலை பெரும்பாலானவர்களுக்கு தெரியும், ஆனால் பெரிதாக எதுவும் தெரியாது. ஆகவே அம்பலப்படுவோமென்ற ஆபத்து இல்லை. இருவருக்கும் கொள்கை வேறுபாடு எதுவுமில்லை. எதற்கென்றே தெரியாமல் அவருக்கு அளிக்கப்பட்ட இரும்பு மனிதர் எனும் பட்டம் மோடியை பெரிதும் வசீகரிக்கிறது, மோடி தன்னைப்பற்றி கட்டமைக்க விரும்புகிற பிம்பத்துக்கு அந்த அடைமொழி மிக நெருக்கமானதாக இருக்கிறது.. மூவாயிரம் கோடியை செலவு செய்வதற்கு இதைவிட வேறு காரணம் தேவையில்லை இல்லையா??
ஒரு உண்மைச் சம்பவம் இதனை புரிந்துகொள்ள உதவலாம். தங்கள் தேவாலயத்துக்கு சேவை செய்ய வந்திருந்த சகோதரிகளின் வழியனுப்பு நிகழ்வில் அந்த ஆலயத்தின் பாதிரியார் இப்படி பேசுகிறார் “கடந்த இருவார காலமாக இந்த சகோதரிகள் ஆற்றிய பணிகள் சிறப்பானது. அவர்கள் பொறுப்புணர்வும் அன்பும் நம் மனதைவிட்டு என்றைக்கும் அகலாது. எனது தனிப்பட்ட முயற்சியின் காரணமாகவே இவர்கள் இங்கே சேவையாற்ற வந்திருக்கிறார்கள். ஆகவே சகோதர சகோதரிகளே நாம் நன்றி சொல்வோம், பிரார்த்திப்போம்…” இதில் நன்றியும் பிரார்த்தனையும் யாருக்கு என உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா?
மோடி சுதந்திர தேவி சிலை
ஒருவரைப் பற்றிய மிகையான துதிபாடல்களும் மதிப்பீடுகளும் அவரை மகிழ்ச்சிக்குள்ளாக்கும் அதே வேளையில் அவருடைய உண்மையான தகுதிகளையும் அவருக்கு நினைவூட்டிக்கொண்டே இருக்கிறது.
இதே கதைதான் படேல் சிலை விவகாரத்திலும் நடக்கிறது. இதுவரை யாரும் படேலை கண்டுகொள்ளவில்லை எனும் மோடியின் செய்தியில் அந்த பெருமைக்கு சொந்தக்காரன் நான் என்னும் சுயபுராணம் இருக்கிறது. படேலுக்கு மூவாயிரம் கோடியில் சிலைவைக்கும் மோடி எனும் பெருமைதான் பேசப்படுமே ஒழிய அங்கே படேலின் பெயர் ஒரு கருவிதான். ஒவ்வொரு விளம்பரப் பிரியனுக்கும் தன்னைப்பற்றி பெருமை பேசுவதற்கான காரணங்களை உருவாக்கும் கடமையிருக்கிறது. ஊரான் வீட்டு காசென்றால் அதற்கான பட்ஜெட் மூவாயிரம் கோடியானால் என்ன முன்னூறானால் என்ன??
மோடிக்கு இப்போதிருக்கும் பிரபல்யம் போதாதா? இன்னும் அவர் தன்னை விளம்பரப்படுத்திக்கொள்ள என்ன தேவையிருக்கிறது என அப்பாவிகள் சிலர் கேட்கலாம். அவர்களுக்காக இந்த தகவலை சொல்ல வேண்டியிருக்கிறது. உங்கள் ஆளுமையை தீர்மானிப்பது நீங்கள் எப்படிப்பட்டவர் எனும் யதார்த்தமல்ல, உங்களை நீங்கள் யாராக உணர்கிறீர்கள் என்பதும், நீங்கள் யாராக உணர வேண்டும் என உங்களை இயக்கும் சமூகச் சூழல் என்னவாக விரும்புகிறது – இரண்டும் சேர்ந்த சிந்தனைதான் உங்கள் ஆளுமையை தீர்மானிக்கிறது. ஒருவரைப் பற்றிய மிகையான துதிபாடல்களும் மதிப்பீடுகளும் அவரை மகிழ்ச்சிக்குள்ளாக்கும் அதே வேளையில் அவருடைய உண்மையான தகுதிகளையும் அவருக்கு நினைவூட்டிக்கொண்டே இருக்கிறது.
இத்தகைய முரண்பாட்டிற்குள் சிக்கிக்கொள்ளாத ஒரு பாராட்டை அல்லது அடையாளத்தைப் பெறும் வெறி அவர்களை செலுத்திக் கொண்டே இருக்கும். உலகத்தையே அச்சுறுத்திய ஹிட்லருக்கு தான் ஒரு சைவ உணவுக்காரன் எனும் பெருமிதம் மிக அதீதமாக இருந்தது. காரணம் அது ஒன்றுதான் அவர் முழுமையாக சொந்தம் கொண்டாட முடிந்த தனித்தன்மை. பொருளியல் உலகிலிருந்து வரும் பேட்டரி ரீசார்ஜ்ஜோடு இத்தகைய ஆன்மீக ரீசார்ஜ்ஜுகளும் பாசிஸ்டுகளுக்கு தேவைப்படுகிறது.
அப்படித்தான் மோடி தனது தனித்தன்மையே தேடுகிறார். அதில் அவரது சொந்த விருப்பம் என்ன, சொல்லிக் கொடுக்கப்பட்ட யோசனைகள் என்ன என்று பிரித்து பார்க்க வேண்டியதில்லை. சமயத்தில் இரண்டும் வேறு வேறு தேவைகளைக் கொண்டிருந்தாலும் விளைவு சமூகத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைக்கு பயன்படும் என்பதே. இப்படித்தான் மோடி தனது பிம்பத்தை சேதாரமில்லாமல் உப்ப வைக்க முனைகிறார். அதில் ஒன்றுதான் படேல் சிலை. இதில் காங்கிரசுக்கு மாற்றாக பாஜக நிறுவிக் கொள்ளும் முயற்சியோடு படேலின் இந்துத்துவ சார்பையும் சங்க பரிவாரங்கள் பயன்படுத்திக் கொள்ளும். மோடிக்கு உலகில் மிக உயர்ந்த ‘சிலை’ நிறுவிய தலைவர் எனும் புகழ். அதற்கு நமது பணம் மூவாயிரம் கோடியை எடுத்துக் கொள்கிறார்கள்.  இறுதியில் மோடியின் நோக்கமும், மோடியை முன்னிறுத்திய முதலாளிகளின் நோக்கமும் இதுதானே?
- இசையவன் வினவு.com