ராம் ஜெத்மலானி!
இந்தியாவின்
புகழ்பெற்ற வழக்கறிஞர்களில் முதல் 10 பேரில் ஒருவர். அவரது ஒரு மணிநேர
வாதத்துக்கான பைசா எவ்வளவு என்பது அவருக்கும் வாதிக்கும் மட்டுமே தெரியும்.
உச்ச நீதிமன்றத்தில்தான் தினமும் வலம் வருவார். பிரேமானந்தாவுக்காக
புதுக்கோட்டை சப் கோர்ட்டுக்கும் இறங்கி வந்தவர். அவர்தான் ஜெயலலிதாவுக்கு
தண்டனை தரப்பட்டதுமே, 'இது தவறான தீர்ப்பு’ என்று அறிக்கைவிட்டு, அதன்
மூலமாக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு மீது வாதாடும் வாய்ப்பைப்
பெற்றார்.
இதே ராம் ஜெத்மலானிதான், ஜெயலலிதா மற்றும் அவரது சகாக்கள் மீதான
சொத்துக் குவிப்பு வழக்கு பற்றி விசாரிக்க அமைக்கப்பட்ட மூன்று தனி
நீதிமன்றங்களைக் காப்பாற்றுவதற்குப் பெரும் முயற்சி எடுத்தவர் என்பது
முந்தைய வரலாறு.
ராம் ஜெத்மலானியின் நெருங்கிய நண்பரின் மகள் நளினி
கேரா. இவர் ராம் ஜெத்மலானியின் அதிகாரபூர்வமான வரலாற்றை எழுதி இருக்கிறார்.
ஏராளமான ரகசியத் தகவல்கள் உள்ளடக்கிய புத்தகம் அது.
1998-ம் ஆண்டு அமைந்த பி.ஜே.பி கூட்டணியில்
அ.தி.மு.க-வும் இடம்பெற்றது. அப்போது பி.ஜே.பி-யில் இருந்த ராம் ஜெத்மலானி
தனக்காக சட்டத் துறை அமைச்சர் பொறுப்பைக் கேட்டார். ஆனால், அதை
தம்பிதுரைக்கு வாங்கிக் கொண்டார் ஜெயலலிதா. ''அப்போது ராம் ஜெத்மலானிக்கு
சட்டத் துறை அமைச்சகம் கிடைக்காமல் போனதற்கு ஜெயலலிதாதான் காரணமா என்று
தெரியாது. அந்தப் பதவியை தன்னுடைய கட்சி உறுப்பினரான தம்பிதுரைக்கு ஜெ.
கேட்டார். அவர் மீது எண்ணற்ற ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.
அவர் கைது செய்யப்பட்டு ஒரு மாதத்துக்கும் மேலே சிறையில்
வைக்கப்பட்டிருந்தார். தன்னுடைய நலன்களைக் காக்கக் கூடிய ஒருவரை
அமைச்சரவையில் தலைமைப் பொறுப்புக்குக் கொண்டுவர விரும்பினார்'' என்று நளினி
கேரா எழுதுகிறார்.
இதன்பிறகு ஜெயலலிதா - ராம் ஜெத்மலானி மோதல் தொடர்கிறது.
கூட்டணியில் அங்கம் வகித்தாலும் மத்திய அமைச்சர்கள் மீது தொடர்ந்து
குற்றச்சாட்டுகளை வெளிப்படையாக வைத்தார் ஜெயலலிதா. அதில் ஜெத்மலானியும்
அடக்கம். 'ஃபெரா’ விதிகளை மீறி ராம் ஜெத்மலானி இரண்டு லட்சம் டாலர்
அளவுக்கு சொத்து சேர்த்ததாகவும் அதனை அமலாக்கத் துறை விசாரித்ததாகவும்
அவரைப் பதவியைவிட்டு நீக்க வேண்டும் என்றும் ஜெயலலிதா அறிக்கை
வெளியிட்டார்.
அப்போது ராம் ஜெத்மலானி, 'சில பேர் சிறையைவிட்டு வெளியே
வரும்போது பணிவு மற்றும் நற்குணம் கொண்டவர்களாக மாறிவிடுகிறார்கள். மேலும்
சிலர் ஆணவம் மற்றும் பொறுப்பின்மை கொண்டவர்களாக மாறி நல்லவற்றையும்
தீயவற்றையும் வேறுபடுத்த முடியாமல் செயல்படுகிறார்கள். என்னைப் பற்றி
இப்படி ஓர் அறிக்கை வெளியிட ஜெயலலிதா யார்? என்னுடைய சுய கௌரவத்தைத் தாக்க
அவர் யார்?'' என்று பெங்களூரில் நடந்த கூட்டத்தில் பகிரங்கமாகக் கேட்டார்.
மத்திய சட்ட அமைச்சராக இருந்த தம்பிதுரை, தமிழகத்தில்
அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றங்களை ரத்து செய்தார். அப்போது மத்திய
அமைச்சர் ராம் ஜெத்மலானி என்ன செய்தார் என்பதும் இந்தப் புத்தகத்தில்
வருகிறது: ''இதற்கு எதிராக ராம் கடுமையான எதிர்வினை ஆற்றினார். ஒரு
கூட்டாளிக்காக நீதித் துறையின் அதிகாரத்தைக் குறைப்பது தவறு என்றார்.
அட்டர்னி ஜெனரல் சொராப்ஜி அதைத் தடுத்திருக்க முடியும். ஆனால், அவர்
தடுக்காமல் போனதற்கு அவருக்கென்று சொந்தக் காரணங்கள் இருந்தன’ என்று ராம்
உறுதியாக நம்பினார். தி.மு.க அரசை கலைக்க வேண்டும் என்ற ஜெயலலிதாவின்
கோரிக்கையை பிரதமர் ஏற்கக் கூடாது என்று ராம் தீவிரமாக வாஜ்பாய்க்கு
வலியுறுத்தினார். அ.தி.மு.க-வைக் கூட்டணியைவிட்டு வெளியேற்ற வேண்டும்
என்றும் சொன்னார். மே 14 அன்று மத்திய அரசின் உத்தரவு செல்லாது என்று உச்ச
நீதிமன்றம் அறிவித்தது ராமின் முந்தைய முடிவு சரி என்பதை நிரூபித்தது''
என்கிறது அந்தப் புத்தகம்.
அதாவது ஜெயலலிதா மீதான வழக்குகளை விசாரிக்க
அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றங்களைக் காப்பாற்றுவதற்காக பி.ஜே.பி
அரசாங்கத்தில் பகீரத பிரயத்தனங்கள் செய்த ராம் ஜெத்மலானிதான் 15 ஆண்டுகளில்
பெரும் பல்டி அடித்துவிட்டார்
விகடன்.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக