புதன், 5 நவம்பர், 2014

சோ அடித்த பல்டிகள்! ஊழலைப் பற்றி பி.ஜே.பி பேசுவது நகைச்சுவைக்கு மட்டுமே?

(துக்ளக் 13.8.97 ) சாயம் வெளுக்கிறது... சரித்திரம் சிரிக்கிறது!
''கடந்த ஐந்தாண்டு கால ஆட்சியில் நாம் எத்தனையோ சாதனைகளைச் செய்திருக்கிறோம். அதை எல்லாம் மக்களிடம் முறையாக எடுத்துச் சொல்லவில்லை'' என்று ஜெயலலிதா சொல்லியதைக் குறிப்பிட்டு வாசகர் ஒருவர் கேள்வி கேட்டபோது, 'ஜெயலலிதாவுக்கு இந்த மனக்குறை தேவை இல்லை. அந்த சாதனையைத்தான் பல வழக்குகள் எடுத்துச் சொல்லிக் கொண்டிருக்கின்றனவே'' (துக்ளக் 13.8.97 - பக் 14) என்று பதிலளித்தார் சோ.
மத்திய பி.ஜே.பி ஆட்சி இந்த வழக்குகளை முடக்கும் நடவடிக்கையை எடுத்தபோது, ''ஜெயலலிதா மீதான ஊழல் வழக்குகளை எவ்வளவு தூரம் முடியுமோ அவ்வளவு தூரம் தாமதப்படுத்துவதற்கு உதவி செய்வது என்று தீர்மானித்து பி.ஜே.பி செயல்படுகிறது. இனி ஊழலைப் பற்றி பி.ஜே.பி பேசுவது நகைச்சுவைக்கு மட்டுமே பயன்படும் என்ற நிலைகூட வந்துவிடும் போலிருக்கிறது'' (துக்ளக் 20.1.99 - பக்.8) என்று பாய்ந்தவர் சோ.
ஜெயலலிதாவைக் குறிவைத்து சோ எழுதிவருவதைப் பார்த்து ஒரு வாசகர், ''ஜெயலலிதாவின் ஊழல் மட்டும் உங்கள் கண்களை ஏன் உறுத்துகிறது?'' என்று கேள்வி கேட்டபோது, ''தி.மு.க ஊழலில் இருந்து இந்திரா காந்தி ஊழல் உள்பட ஜெயலலிதா, லாலு பிரசாத் ஊழல் வரை எல்லா ஊழல்களும் உறுத்தத்தான் செய்கின்றன. இந்த உறுத்தல்களை துக்ளக் விவரித்துத்தான் வந்திருக்கிறது. உறுத்தல்கள் வளர்ந்து ஜெயலலிதா ஊழல் நோயாக முற்றிவிட்டது. அதனால்தான் கவலை அதிகம்'' என்று (10.2.99 - துக்ளக் பக்-15) விளக்கம் அளித்தவர் சோ.
''ஊழல் ஒரு குற்றமே அல்ல என்று நினைக்கும் அளவுக்குப் பெருந்தன்மை காட்டியவர் ஜெயலலிதா'' (27.1.99 துக்ளக் - பக்-8) என்று குற்றம் சாட்டியவரும் சோ-தான்.
இப்படி 1995 முதல் 1999 வரையிலான காலகட்டத்தில் அவர் எழுதிய தலையங்கம், கேள்வி பதில், நினைத்தேன் எழுதுகிறேன், அட்டைப்பட கார்ட்டூன் என்று எடுத்துப் போட்டாலே பல பக்கங்கள் போகும். ஆனால், சோ இன்று இந்த வழக்கை அரசியல் ரீதியாக மட்டும் பார்ப்பது ஏனோ??
விகடன்.com

கருத்துகள் இல்லை: