திங்கள், 3 நவம்பர், 2014

டில்லி சட்டசபையை கலைக்க கவர்னர் முடிவு!

புதுடில்லி: டில்லியில் ஆட்சியமைக்க பா.ஜ., மறுத்துள்ளது. சட்டசபையை கலைத்து விட்டு தேர்தல் நடத்த வேண்டும் என காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கூறியுள்ளது, இதனையடுத்து சட்டசபையை கலைக்க கவர்னர் நஜீப் ஜங் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. டில்லியில் முதல்வராக இருந்த கெஜ்ரிவால், ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை என கூறி பதவிவிலகினார். இதனையடுத்து அங்கு, கடந்த பிப்ரவரி முதல் சட்டசபை முடக்கப்பட்டு ஜனாதிபதி ஆட்சி அமைக்கப்பட்டுள்ளது. டில்லி சட்டசபையை கலைத்து விட்டு புதிதாக தேர்தலை நடத்த வேண்டும் என கெஜ்ரிவால் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது, மத்திய அரசுக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.


டில்லியில் ஆட்சியமைக்க பா.ஜ.,வுக்கு போதிய உறுப்பினர்கள் பலம் இல்லை. இதனால் அங்கு ஆட்சியைமைக்க தயக்கம் காட்டுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் டில்லியில் தேர்தலை சந்திக்க தயார் என பிரதமர் நரேந்திர மோடியும், பா.ஜ., தலைவர் அமீத் ஷாவும் கூறியிருந்தனர். குதிரை பேரத்தில் ஈடுபட்டு ஆட்சியமைப்பதை பிரதமர் மோடி விரும்பவில்லை என கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடந்த மகாராஷ்டிரா மற்றும் அரியானா மாநில சட்டசபை தேர்தல்களில் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால், டில்லியில் தேர்தலை சந்தித்து ஆட்சியை பிடிக்கலாம் என பா.ஜ., கருதுகிறது.

இதனிடையே, டில்லியில் ஆட்சியமைக்கலாமா அல்லது புதிதாக தேர்தலை நடத்தலாமா என்பது குறித்து கவர்னர் நஜீப் ஜங், அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ், பா.ஜ., மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் தனித்தனியாக கலந்து கொண்டன. இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட பா.ஜ., ஆட்சியமைக்க விரும்பவில்லை என கூறிவிட்டதாக தெரிகிறது.

காங்கிரஸ் தரப்பில், சட்டசபையை கலைத்துவிட்டு தேர்தலை நடத்த வேண்டும் என கூறியுள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் ஆரூண் யூசூப் கூறுகையில், காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் ராகுல் தலைமையில் தேர்தலை சந்திக்க நாங்கள் தயார் என்றும், உடனடியாக சட்டசபையை கலைத்து விட்டு ஜார்க்கண்ட் மற்றும் காஷ்மீர் மாநில சட்டசபை தேர்தலுடன் டில்லி சட்டசபைக்கும் தேர்தல் நடத்த வேண்டும் என கூறினார்.

இதன் பின்னர் மாலை 6 மணியளவில், கவர்னரை, ஆம் ஆத்மி சார்பில் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் மணிஸ் சிசோடியா சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின் போது, டில்லியில் தேர்தலை நடத்த வேண்டும் என கவர்னரிடம் அவர்கள் கூறினர். இந்த சந்திப்புக்கு பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசிய மணிஸ் சிசோடியா, தேர்தலை சந்திக்க நாஙகள் தயாராக உள்ளோம் எனவும், சட்டசபையை கலைத்துவிட்டு தேர்தலை நடத்த வேண்டும் என பா.ஜ., மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கவர்னரிடம் கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது எனவும் கூறினார்.

முன்னதாக, கவர்னருக்கு கெஜ்ரிவால் எழுதிய கடிதத்தில், 'டில்லியில் மிகப்பெரிய கட்சியாக உள்ள பா.ஜ.,வுடன் நீங்கள் ஆலோசனை நடத்தியிருப்பீர்கள். அப்போது பா.ஜ., தங்களது நிலைப்பற்றி என்ன கூறியது என்பது பற்றி அறிந்து கொள்ள விரும்புவதாக' கூறியுள்ளார்.

அறிக்கை அனுப்ப கவர்னர் முடிவு: இதன் பின்னர் கவர்னர் நஜீப் ஜங் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், டில்லியில் ஆட்சியமைக்க எந்த கட்சியும் விரும்பவில்லை எனவும், தாங்கள் ஆட்சியமைக்க முடியாததற்கான காரணங்கள் குறித்து அனைத்து அரசியல் கட்சிகளும் விளக்கமளித்தன எனவும், தனது முடிவு குறித்து ஜனாதிபதிக்கு அறிக்கை அனுப்ப உள்ளதாகவும் கூறியுள்ளார். dinamalar.com

கருத்துகள் இல்லை: