வியாழன், 6 நவம்பர், 2014

கர்நாடகாவில் தொடர் பாலியல்வன்முறைகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!


பெங்களூர்,
தொடர் கற்பழிப்பு சம்பவங்களை கண்டித்து பெங்களூரில் முதல்–மந்திரி வீட்டை முற்றுகையிட்டு பா.ஜனதா மகளிர் அணியினர் நேற்று போராட்டம் நடத்தினார்கள். இந்த போராட்டத்தின்போது, ஷோபா எம்.பி.யை போலீசார் தாக்கியதாக கூறி தலைவர்கள் திடீரென்று தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மகளிர் அணியினர் ஊர்வலம் பெங்களூர் உள்பட கர்நாடகத்தின் பல்வேறு பகுதிகளில் குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான கற்பழிப்பு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த சம்பவங்களை கண்டித்து ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த சம்பவங்களை தடுக்க தவறிய மாநில காங்கிரஸ் அரசை கண்டித்து பா.ஜனதா மகளிர் அணி சார்பில் முதல்–மந்திரி வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் 5–ந் தேதி (அதாவது நேற்று) நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி பா.ஜனதா தலைவர்கள் மற்றும் பெண் தொண்டர்கள் மல்லேசுவரத்தில் உள்ள பா.ஜனதா அலுவலகம் முன் குவிந்தனர். பின்னர் அவர்கள் ஊர்வலமாக குமரகிருபா ரோட்டில் உள்ள முதல்–மந்திரி வீட்டை நோக்கி சென்றனர். இந்த ஊர்வலத்தை கட்சியின் மாநில தலைவர் பிரகலாத் ஜோஷி தொடங்கி வைத்தார். இந்த ஊர்வலத்தில் முன்னாள் முதல்–மந்திரிகள் எடியூரப்பா, ஜெகதீஷ் ஷெட்டர், முன்னாள் துணை முதல்–மந்திரி அசோக், ஷோபா எம்.பி, நடிகை தாரா உள்ளிட்ட பல முக்கியமான தலைவர்கள் கலந்து கொண்டனர். சேஷாத்திரிபுரத்தில் உள்ள நேரு சர்க்கிள் அருகே வரும்போது ஊர்வலத்தை இரும்பு தடுப்பு வேலி போட்டு போலீசார் தடுத்து நிறுத்தினர்.
ஷோபா எம்.பி. விழுந்தார் பா.ஜனதா அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்ட பெண்கள் சேஷாத்திரிபுரத்தில் உள்ள நேரு சர்க்கிள் அருகே வந்தபோது, அவர்களை இரும்பு தடுப்பு வேலி போட்டு போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். அதற்கு ஊர்வலத்தில் வந்த பெண்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். போலீசார் அவர்களை இழுத்து சென்று கைது செய்து வேனில் ஏற்றினர். ஷோபா எம்.பி.யையும் கையை பிடித்து இழுத்து செல்ல பெண் போலீசார் முயற்சி செய்தனர். அப்போது ஷோபா கீழே விழுந்தார். அவரை கையை பிடித்து எழுப்ப பெண் போலீசார் முயற்சி செய்தனர். அவர் வர மறுத்ததால் போலீசாருக்கும், ஊர்வலத்தினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு பரபரப்பான சூழல் நிலவியது. போலீசாரின் இந்த நடவடிக்கையால் ஷோபா கடும் கோபம் அடைந்தார்.
போலீசார் தன்னை தாக்கியதாக கூறி ஷோபா அதே இடத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவருக்கு ஆதரவு தெரிவித்து பா.ஜனதா தலைவர்கள் எடியூரப்பா, ஜெகதீஷ் ஷெட்டர், அசோக் உள்பட ஊர்வலத்தில் கலந்து கொண்ட அனைவரும் அதே இடத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. ஒரு எம்.பி. என்று கூட பார்க்காமல் போலீசார் தன்னை தாக்கியதாக ஷோபா குற்றம் சாட்டினார். இதற்கு போலீசார் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், அதுவரை தர்ணா போராட்டத்தை கைவிடுவது இல்லை என்றும் கூறினார். போலீசார் எவ்வளவோ கூறியும் தர்ணா போராட்டத்தை பா.ஜனதாவினர் கைவிடவில்லை.
எடியூரப்பா பேச்சு இதுகுறித்து தகவல் அறிந்ததும் பெங்களூர் நகர போலீஸ் கமிஷனர் எம்.என்.ரெட்டி, தர்ணா நடந்த இடத்துக்கு விரைந்து வந்தார். அவர் ஷோபா உள்ளிட்ட பா.ஜனதா தலைவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். நடந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்த போலீஸ் கமிஷனர், சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதைத்தொடர்ந்து பா.ஜனதாவினர் தர்ணா போராட்டத்தை கைவிட்டனர். அதைத்தொடர்ந்து ஷோபா உள்ளிட்டவர்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றிச் சென்றனர்.
இந்த போராட்டத்தின்போது, எடியூரப்பா பேசுகையில், “கர்நாடகத்தில் குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான கற்பழிப்பு சம்பவங்கள் தினம் தினம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதை தடுக்க வேண்டிய அரசு தூங்கிக்கொண்டு இருக்கிறது. தீர்த்தஹள்ளி மாணவி கொலையான சம்பவத்தில் தற்கொலை என்று செய்தி பரப்பி குற்றவாளிகளை காப்பாற்ற அரசு முயற்சி செய்கிறது. இந்த பிரச்சினையில் அக்கறை செலுத்தாமல் உள்ள அரசை கண்டித்து மாநிலம் முழுவதும் பா.ஜனதா தொடர்ந்து போராட்டம் நடத்தும்“ என்றார்.
அரசு தோல்வி அதைத்தொடர்ந்து பேசிய சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர், “சட்டம்–ஒழுங்கை காப்பாற்ற முடியாத இந்த அரசு, கற்பழிப்பு சம்பவங்களை தடுப்பதிலும் தோல்வி அடைந்துவிட்டது. இந்த சம்பவங்களுக்கு தார்மீக பொறுப்பு ஏற்று போலீஸ் மந்திரி கே.ஜே.ஜார்ஜ் ராஜினாமா செய்ய வேண்டும். எம்.பி. உள்பட கட்சி பெண் தொண்டர்களை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று கைது செய்ய போலீசார் முயற்சி செய்தது சரியல்ல. போலீசாரின் இந்த செயல் கண்டிக்கத்தக்கது ஆகும்“ என்றார்.
ஷோபா எம்.பி. பேசும்போது, “ஒரு எம்.பி. என்று கூட பார்க்காமல் பெண் போலீசார் என்னை வலுக்கட்டாயமாக கையை பிடித்து இழுத்தனர். அவர்கள் என் காலை ஷூக்களால் மிதித்தனர். இது கண்டிக்கத்தக்கது. பாதுகாப்பு பணியில் சாதாரண போலீசாரை நியமித்தது சரியல்ல. அவர்களுக்கு என்ன தெரியும். எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று தெரியாது. அதனால் தான் உயர் போலீஸ் அதிகாரி வர வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தினோம்“ என்றார்.
முதல்–மந்திரி வீடு முற்றுகை இதற்கிடையே பா.ஜனதா ஊர்வலத்தில் கலந்து கொண்ட மகளிர் அணியினர் 100–க்கும் மேற்பட்டவர்கள் போலீசாரின் கண்களில் படாமல் வேறு வழியாக முதல்–மந்திரி வீட்டின் அருகே குவிந்தனர். சித்தராமையாவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து அவர்களை கைது செய்து வேனில் ஏற்றிச் சென்றனர். பின்னர் மாலையில் கைதானவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
பா.ஜனதாவினர் நடத்திய இந்த ஊர்வலத்தால் மல்லேசுவரத்தை சுற்றியுள்ள பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் ஆமை வேகத்தில் ஊர்ந்து சென்றன. வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாயினர். போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டனர்..dailythanthi.com

கருத்துகள் இல்லை: