வெள்ளி, 7 நவம்பர், 2014

மத்தியில் மீண்டும் மூன்றாவது அணி ? காங்., பா.ஜ., கூட்டணி அல்லாத கட்சி தலைவர்கள் சந்திப்பு!

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் 24ந் தேதி தொடங்கி நடக்கவுள்ள நிலையில் டெல்லியில் சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் இல்லத்தில் மதிய விருந்துடன் கூடிய காங்., பா.ஜ., கூட்டணி அல்லாத கட்சி தலைவர்கள் சந்திப்பு வியாழக்கிழமை நடந்தது.இதில் லாலு பிரசாத், சரத் யாதவ், நிதிஷ் குமார், தேவே கவுடா, இந்திய தேசிய லோக்தளத்தின் மூத்த தலைவர் துஷ்யந்த் சவுதாலா உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இணைந்து செயல்படுவது குறித்து விவாதித்தனர்.
இந்த கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நிதிஷ்குமார், ‘‘நாங்கள் நாட்டின் ஒட்டுமொத்த அரசியல் நிலவரம் குறித்து விவாதித்தோம். பாராளுமன்றத்தில் நாங்கள் ஒன்றுபட்ட முன்னணியை (ஒரு அணியை) உருவாக்குவோம். இணைந்து செயல்படுவோம். பல்வேறு பிரச்சினைகளில் எங்கள் அனைவரின் கருத்தும் ஒன்றாகவே உள்ளது. நாங்கள் ஒத்த கருத்துடைய பிற கட்சிகளையும் தொடர்புகொள்வோம்’’ என கூறினார்.

கேள்வி:– தேர்தல்களில் ஒன்றாக போட்டியிடுவீர்களா?

பதில்:– இது எதிர்காலத்தைப் பற்றியது. நாங்கள் ஒரே கட்சியாக இணைவதை நோக்கி செல்வோம்.

கேள்வி:– இடதுசாரி கட்சிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க வில்லையே?

பதில்:– குறிப்பிட்ட விவகாரங்களில் எங்களோடு ஒத்த கருத்துடைய கட்சிகளை தொடர்பு கொள்வோம். பேச்சு வார்த்தைக்கு திறந்த மனதுடன் இருக்கிறோம்.

கேள்வி:– மம்தா பானர்ஜி உங்களுடன் கரம் கோர்ப்பாரா? அவருக்கு என்ன பங்களிப்பு?

பதில்:– இது பற்றியும் விவாதித்தோம். முடிவு எடுக்கப்படவில்லை.

இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

பாராளுமன்றத்தில் சமாஜ்வாடி கட்சிக்கு 5 எம்.பி.க்களும், ராஷ்டிரீய ஜனதாதளத்துக்கு 4 எம்.பி.க்களும், ஐக்கிய ஜனதாதளம், மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சிகளுக்கு தலா 2 எம்.பி.க்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. nakkheeran,in

கருத்துகள் இல்லை: