தமிழில்
பேசும் படங்கள் வரத் தொடங்கிய காலத்தில், அதாவது 1930-31 வாக்கில்
மதுரையில் கலை ஆர்வலரான சச்சிதானந்தம் பிள்ளை என்பவர் 'மதுரை ஒரிஜினல்
பாய்ஸ் கம்பெனி' என்னும் பெயரில் ஒரு நாடக நிறுவனத்தை நடத்தி வந்தார்.
அதில், ஆதரவற்ற சிறுவர்கள் மற்றும் இளைஞர்களை சேர்த்துக் கொண்டு பல
நாடகங்களில் அவர்களை நடிக்கச் செய்தார். அதற்கு முறையான நடிப்பு, நடனம்,
பாடல் முதலிய நுண்கலைகளில் தேவையான பயிற்சியும் அளித்து ஒரு குருகுலம் போல
நடத்தி வந்தார்.
பிற்காலத்தில் மிகவும் பிரபலமான பி.யு.சின்னப்பா, எம்.ஜி.ஆர்., அவருடைய சகோதரர் எம்.ஜி.சக்ரபாணி, எம்.ஆர்.ராதா, டி.எஸ்.பாலையா, கே.பி.கேசவன், கே.சாரங்கபாணி, காளி.என்.ரத்தினம், டி.ஆர்.பி.ராவ், கே.கே.பெருமாள் போன்ற தலைசிறந்த நடிகர்கள் எல்லாம் இந்தக் குருகுலத்தில்தான் கல்வியும், கலைகளும் கற்றுத் தேர்ந்து புகழ்பெற்று விளங்கினர்.
அன்றைய நாளில் சச்சிதானந்தம் பிள்ளையின் 'மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி' கலை ஆர்வம் கொண்ட பல இளைஞர்களின் சரணாலயமாகத் திகழ்ந்தது.
இந்தக் கலைக்கூடத்தில் போதிய பயிற்சி பெற்ற நடிகர்களை வைத்துதான் ஆரம்பகால தமிழ்த் திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டு வந்தன.
அக்காலத்தில் இந்த பாய்ஸ் நாடக கம்பெனி கலா ரசிகர்களின் மத்தியில் நல்ல செல்வாக்குடன் இருந்தது. இதில் 'பாவலர்' என்பவர் எழுதி, கே.பி.கேசவன் என்ற குணசித்திர நடிகர் நடித்த 'பதிபக்தி' என்னும் சமூக நாடகம் மக்களிடம், குறிப்பாக பெண்களிடம் மிகவும் பிரபலமடைந்தது. தொடர்ந்து பல நாட்களாக நடைபெற்று வந்தது. இந்த நாடகத்தில் எம்.ஜி.ஆரும், அவருடைய தமையனார் எம்.ஜி.சக்ரபாணியும் நடித்தனர்.
இதே காலக் கட்டத்தில், எம்.கந்தசாமி முதலியார் ஒரு நாடகக் கம்பெனியை நடத்தி வந்தார். அதன் நாடகங்களில் அவருடைய ஒரே புதல்வரான எம்.கே.ராதா கதாநாயகனாக நடித்து வந்தார். மதுரை பாய்ஸ் கம்பெனியின் 'பதிபக்தி' நாடகத்தையும், அதன் வெற்றியையும் பார்த்த கந்தசாமி முதலியார், நாடகத்தில் கே.பி.கேசவன் நடித்த அந்தப் பாத்திரத்தில் தனது புதல்வரை நடிக்க வைத்துத் திரைப்படமாக்கும் திட்டமிட்டார். இதற்காக கோவை மருதாசலம் செட்டியார் என்ற நண்பருடன் சேர்ந்து 'மனோரமா பிலிம்ஸ்' என்னும் பேனரில் 'பதிபக்தி' கதையின் பட உரிமையை வாங்கி அதற்கான ஏற்பாடுகளைச் செய்தார்.
அப்போது, சச்சிதானந்தம் பிள்ளையின் நண்பர் ஒருவர் அவரிடம் "ஒரு நல்ல கதையை ஏன் கொடுத்தீர்கள்? உங்கள் நாடகத்தில் நடித்த கே.பி.கேசவனையே வைத்து நீங்களே அதைத் திரைப்படமாகத் தயாரித்து நல்ல லாபம் அடையலாமே" என்று கூறினார். அதைக் கேட்டு மனம் மாறிய பிள்ளை, மனோரமா பிலிம்சுக்குக் கொடுத்த கதை உரிமையைத் திரும்பப் பெற்றார். 'மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி' என்ற பேனரிலேயே, கே.பி.கேசவனை ஹீரோவாக நடிக்க வைத்து, வட இந்திய டைரக்டரான 'அல்டேகர்' மற்றும் தன் கம்பெனி நடிகரான டி.ஆர்.பி.ராவ் ஆகியோரின் இயக்கத்தில் அதே பெயரில் தயாரித்தார். அத்துடன் எம்.ஜி.ஆரின் நாடகக் குருவான காளி.என்.ரத்தினம் நடித்த 'கங்காணி' என்னும் குறும்படத்தையும் இணைத்து வெளியிட்டு வெற்றி பெற்றார்.
தனது புதல்வரை சினிமா ஹீரோவாக்கும் திட்டத்தோடு வாங்கிய ஒரு நல்ல கதையைத் திருப்பிக் கொடுக்கும்படி நேரிட்டுவிட்டதே என்ற வருத்தத்தில் இருந்தார் கந்தசாமி முதலியார். அப்போது அவரிடம், அவருடைய நாடக கம்பெனியில் அவருக்கு உதவி ஆசிரியராக இருந்து நடிகர்களுக்கு வசனம் மற்றும் நடிப்புப் பயிற்சி கொடுத்துக் கொண்டிருந்த 31 வயதுடைய ஒரு பிராமண இளைஞர், "கவலைப்படாதீர்கள், பதிபக்தியைப் போல பெண்களுக்குப் பிடித்தமான கதை அம்சங்களுடன் கூடிய "சதிலீலாவதி' என்னும் பெயரில் நான் ஒரு கதை எழுதி வைத்திருக்கிறேன். நீங்கள் அதைப் படித்துப் பார்த்து உங்களுக்குப் பிடித்திருந்தால் உங்கள் பிள்ளை ராதாவை நடிக்க வைத்துப் படமாக்கலாம்" என்று கூறினார்.
அந்தக் கதையைப் படித்துப் பார்த்த முதலியாருக்குப் பிடித்துப் போகவே, அதற்கு அவரே வசனம் எழுதி தன் பிள்ளை எம்.கே. ராதாவுடன் கூட, அன்றைய 19 வயது கொண்ட இளைஞர் எம்.ஜி.ராமச்சந்திரன், டி.எஸ்.பாலையா, என்.எஸ்.கிருஷ்ணன் மற்றும் கதாநாயகியாக எம்.எஸ்.ஞானாம்பாள் ஆகியோரை நடிக்க வைத்து அமெரிக்காவிலிருந்து இங்கு வெறும் புகைப்படக் கலைஞராக மட்டுமே வந்திருந்த எல்லிஸ்.ஆர்.டங்கன் என்பவரை டைரக்டராக்கி இயக்கச் செய்து, 'மனோரமா பிலிம்ஸ்,' 'சதிலீலாவதி' என்னும் பெயரிலேயே வெளியிட்டார்!
28.3.1936-ல் வெளிவந்த 'சதிலீலாவதி' அதே காலகட்டத்தில் ரிலீஸான 'பதிபக்தி'யைப் போலவே பெரும் வெற்றிபெற்றது. இதில் சிறப்பம்சம் என்னவென்றால், இந்த படத்தில் தயாரிப்பாளர், கதை, வசனகர்த்தா, பாடலாசிரியர், இயக்குநர், நடிகர்-நடிகைகள் அத்தனை பேருக்குமே இதுதான் முதல் திரைப்படமாக அமைந்தது என்பதுதான்.
தங்களது குருகுலமும், தாய் நாடகக் கம்பெனியுமான மதுரை பாய்ஸ் கம்பெனியின் முதல் படமான 'பதிபக்தி'யில் நடிக்கும் வாய்ப்பு கிட்டாத எம்.ஜி.ஆருக்கும், டி.எஸ்.பாலையாவுக்கும் 'சதிலீலாவதி'யில் வாய்ப்பு கிட்டியது! இந்தப் படத்தில் தான் 19 வயது எம்.ஜி.ராமச்சந்திரன் தலைப்பாகையுடன் கூடிய போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடத்தில் முதன்முதலாக சினிமா கேமராவின் முன்நின்று வசனம் பேசி நடித்தார்.
'பதிபக்தி' கதையைத் திருப்பிக் கொடுத்து விட்டு வருத்தத்தில் வாடியிருந்த கந்தசாமி முதலியாருக்கு தன்னுடைய சதிலீலாவதி கதையைக் கொடுத்து அது ஒரு வெற்றிப்படமாகி எம்.கே.ராதா கதாநாயகனாக அறிமுகம் பெறுவதற்குக் காரணகர்த்தாவும், முதலியாரின் உதவியாளராகவும் அன்றைக்கு இருந்த அந்தப் பிராமண இளைஞர் யார் தெரியுமா?
அவர்தான் பிற்காலத்தில் அனைத்து இந்தியப் புகழ்பெற்ற 'சந்திரலேகா' போன்ற பல பிரமாண்டமான தமிழ், இந்தி மற்றும் தெலுங்குப் படங்களைத் தயாரித்துச் சரித்திரச் சாதனை படைத்த ஜெமினி ஸ்டுடியோ அதிபர் அமரர் எஸ்.எஸ்.வாசன்!
இன்றைக்கு 78 ஆண்டுகளுக்கு முன்பு 1936-ல் உருவாகி, அது சம்பந்தப்பட்ட அத்தனை பேருக்குமே அறிமுகப்படமாகவும், ஒரு லட்சியப் படமாகவும் அமைந்த 'சதிலீலாவதி' படத்தின் ஒரு சாதாரண கதாசிரியராகத்தான் எஸ்.எஸ்.வாசன் தனது திரைப்படப் பெரும் பயணத்தையும், திக் விஜயத்தையும் தொடங்கினார்!
கலைகளும், காவியங்களும், இதிகாசப் புராணங்களும் கரைந்தோடும் பொன்னி நதி என்று புகழ்ந்து போற்றப்படுகின்ற காவிரித்தாயின் நீர்ச்செழிப்பில் நீள் நெல் வயல்கள் நிறைந்து சூழ்ந்த தஞ்சாவூர் ஜில்லாவின் தென் பகுதியில் அமைந்த திருத்தலமான திருத்துறைப்பூண்டியில் பிராமண குடும்பத்தைச் சேர்ந்த சுப்ரமணிய அய்யர் - வாலாம்பாள் தம்பதியருக்கு 1904-ம் வருடம் ஆகஸ்டு மாதம் 26-ந்தேதி ஒரே மகனாகப் பிறந்தார் ஸ்ரீநிவாசன் என்னும் வாசன். நான்கு வயது இளம் பருவத்திலேயே தன் தந்தையை இழந்து தாயாருடன் அவருடைய உடன் பிறந்த மூத்த சகோதரியின் வீட்டில் தங்கி ஆரம்பக் கல்வி கற்று வந்தார்.
ஏழ்மை நிலையின் காரணமாக சகோதரியின் வீட்டில் தங்கியிருந்த தாய் வாலாம்பாள், அந்தக் காலத்தில் கைம்பெண்களுக்குக் கென்றே ஏற்பட்ட இட்லி வியாபாரம் செய்து கொண்டு தன் மகனை வளர்த்து அருகிலிருந்த எலிமென்டரி ஸ்கூலில் படிக்க வைத்தார்.
உயர்நிலைப்பள்ளிக் கல்வி முடிந்து மேற்கொண்டு பட்டப்படிப்பிற்காக சென்னைக்கு வந்து கல்லூரியில் சேர்ந்து எஸ்.எஸ்.எல்.சி.க்கு அடுத்ததான அன்றைய 'பெலோ ஆப் ஆர்ட்ஸ்' என்னும் 'எப்.ஏ' படித்து முடித்தார். (இந்த 'எப்.ஏ'தான் பின்னாளில் 'இன்டர் மீடியட்' என்றும், அதன் பிறகு 'பி.யூ.ஸி' என்றும் ஆனது). மேற்கொண்டு பி.ஏ. பட்டப்படிப்பு நிறைவு பெற்று அரசாங்க உத்தியோகம் பார்ப்பதைவிட, தொழில் செய்து முன்னேற்றம் அடையலாம் என்ற நோக்கத்துடன் பலவிதமான சிறு சிறு தொழில்களை மேற்கொண்டு அதில் கணிசமான லாபமும் பெற்றார் வாசன்.
இந்த நிலையில் அன்றைய சினிமாவின் பிதாமகரும், இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் ஸ்டூடியோ அதிபருமான கே.சுப்ரமணியம் மவுண்ட் ரோடில் தனக்குச் சொந்தமான ஸ்டூடியோவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதன் காரணமாக அதை விற்றுவிடத் தீர்மானித்திருந்தார். இதைக் கேள்விப்பட்ட வாசன், எண்பத்தைந்தாயிரம் ரூபாய்க்கு விலைக்கு வாங்கி 'ஜெமினி ஸ்டூடியோஸ்' என்று 'நாமகரணம்' செய்து அதன் கீழே 'மூவிலேண்ட்' என்றும் ஆங்கிலத்தில் பொறித்து வைத்தார்.
ஜெமினி - ஸ்டூடியோஸ் ஆகிய இரண்டு சொற்களுக்கும் இடையில் 'இரட்டை' என்பதைக் குறிப்பதன் பொருட்டு கோவணம் கட்டிக்கொண்டு குழலூதும் இரண்டு குழந்தைகளின் அழகிய உருவத்தையும் வரைந்து வைத்தார்.
ஜெமினி ஸ்டூடியோவின் ஒவ்வொரு படமும் இந்த இரட்டைக் குழந்தைகளின் குழலோசையோடு தொடங்கப்பெற்று, அதே இனிய குழலோசையுடன் இறுதி பெறும்!
வாசன் முதன் முதலாகத் தனது சொந்த ஜெமினி ஸ்டூடியோவிலேயே 1941-ல் 'மதன காமராஜன்' என்ற படத்தை தயாரித்தார். அக்கால பிரபல கர்நாடக சங்கீத வித்துவான் வி.வி.சடகோபன், அன்றைய பேரழகி கே.எல்.வி.வசந்தா ஆகியோர் இணைந்து இந்த படத்தில் நடித்தனர். பிரபல டைரக்டர் பி.என்.ராவ் இயக்கினார்.
'மதன காமராஜன்' படத்தைத் தொடர்ந்து 'மிஸ் மாலினி' வரையில் 7 ஆண்டுகளில் 11 வெற்றிப்படங்களை எடுத்து வெளியிட்ட வாசன், 12-வது படமாக தனது ஜெமினி ஸ்டூடியோவின் நிரந்தர ஆஸ்தான ஹீரோ நடிகரான எம்.கே.ராதா, ரஞ்சன் மற்றும் அன்றைய சினிமா ரசிகர்களின் கனவுக்கன்னியாக விளங்கிய டி.ஆர்.ராஜகுமாரி ஆகியோரை வைத்து, ஆங்கிலப்படங்களுக்கு நிகரான ஒரு பிரமாண்டமான படத்தைத் தயாரிக்கும் திட்டத்திலும், லட்சியத்திலும் 1948-ல் 'சந்திரலேகா'வைத் தொடங்கினார்.
அந்தப் படத்திற்காக அவர் போட்டிருந்த பட்ஜெட்டையும் மீறி பணம் தண்ணீராகச் செலவாகிக் கொண்டிருந்தது.
'யானையைக் கட்டித் தீனி போட்டதைப் போல' என்று பேச்சு வழக்கில் சும்மா சொல்வது உண்டு. அது வாசனைப் பொறுத்தவரையில் பலித்து உண்மையாகி விட்டது. ஆம், சந்திரலேகா கதையில் வரும் காட்சி நிகழ்ச்சிகளுக்காக யானைகளும், குதிரைகளும், சிங்கம், புலி மற்றும் பிராணிகள் உட்பட பல பேரைக் கொண்ட ஒரு பெரிய சர்க்கஸ் கம்பெனியையே ஜெமினி ஸ்டூடியோ வளாகத்திற்குள் வைத்துக்கொண்டு அன்றாடம் அவர்களைக் கவனித்துப் பராமரித்துக் கொண்டு, சர்க்கஸ் சம்பந்தப்பட்ட காட்சிகளையெல்லாம் வாசனே இயக்கி படமாக்கினார். ஸ்டூடியோவிற்குள்ளேயே தினமும் சர்க்கஸ் நடந்தது!
ஏற்கனவே தன் சொந்த வாழ்க்கையிலும், தொழிலிலும் எந்த ஒரு சூழ்நிலையிலும், எந்தக் காரணத்திற்காகவும் தன்னையோ, மற்றவர்களையோ சமரசம் செய்து கொள்ள விரும்பாத அழுத்தமான தீவிரக் கொள்கை கொண்ட வாசனுக்கு, சந்திரலேகா படத்தின் காரணமாக ஒரு கட்டத்தில் அதுவரையில் இல்லாத அளவிற்குப் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது.
அதற்காக அவர் சற்றும் மனந்தளராமல், இரவு பகலாகக் கண் விழித்துக் கஷ்டப்பட்டுச் சம்பாதித்துக் கண்போலக் காப்பாற்றி வந்த ஆஸ்திகளை அடமானம் வைத்து பெரிய அளவில் கடன் வாங்கி சந்திரலேகா படத்தை எடுத்து முடித்து மூச்சு விட்டார்.
'மலையைக் கெல்லி எலியைப் பிடித்த கதை' என்பது பழமொழி. ஆனால் வாசனோ, மலையைப்பிளந்து மாணிக்கத்தை எடுத்தார். அந்தக் காலத்தில் தமிழ்ப் படங்கள் ஒவ்வொரு ஆண்டின் புதுவருடப்பிறப்பு, பொங்கல், தீபாவளி ஆகிய விழாக் காலங்களிலும் மற்றும் விசேஷ நாட்களில் மட்டுமே புதிய படங்கள் ரிலீசாகும். அவற்றிற்கு 10 முதல் 15 பிரதிகள் (பிரிண்ட்) வரையில் எடுக்கப்படும். அந்த வழக்கத்திற்கு மாறாக வாசன் முதன் முதலாக சந்திரலேகா படத்தின் 35 பிரதிகளை எடுத்து தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் 'ஏ' சென்டர் என்று கூறப்படும் தலைநகரங்களிலும் மற்றும் முக்கிய ஊர் தியேட்டர்களிலும் வெளியிட்டார்.
அதுவரையில் தமிழ்த் திரைப்படத்தில் கண்டிராத - ஆங்கிலப் படங்களுக்கு நிகரான அற்புதக் காட்சிகள் நிறைந்து, தமிழ் சினிமா வரலாற்றிலேயே முதன் முறையாக 30 லட்ச ரூபாய்களுக்கு மேல் செலவு செய்து, பதினெட்டாயிரம் அடிகள் நீளத்தில் தயாரிக்கப்பட்டு, தமிழ்ப்புத்தாண்டுக்கு 5 நாட்கள் முன்னதாக 9.4.1948-ல் ரிலீசான சந்திரலேகாவின் பிரமாண்டத்தைப் பார்த்து தமிழ் சினிமா ரசிகர்கள் பிரமித்து திகைத்துத் திரும்பத் திரும்ப அந்தப் படத்தைக் கண்டு களித்தனர்.
படத்தின் உச்சகட்டத்தில், பல பெரிய பெரிய முரசுகளின் மீது அழகிய நங்கைகள் நின்று நடனம் ஆடி, அந்த முரசுகளின் உள்ளிருந்து பல போர் வீரர்கள் வெளிவந்த அந்த அற்புதக்காட்சி ரசிகர்களை மெய்சிலிர்க்கச் செய்தது. இன்று வரையில் எந்த ஒரு இந்திய மொழிப் படத்திலும் அப்படி ஓர் அதிசய காட்சி இடம் பெறவில்லை என்பதே சினிமா மேதையான எஸ்.எஸ்.வாசனின் கற்பனைத் திறனுக்கும், கலை அறிவிற்கும் ஒரு சிறந்த சான்றாகும்.
'சந்திரலேகா' தமிழ்ப்படத்துடன் வாசன் ஓய்ந்து போய் உட்கார்ந்துவிடவில்லை. மெச்சத்தகுந்த மேதைகளின் உடம்புதான் ஓய்வை நாடுமே தவிர, மூளை ஓய்வெடுத்துக் கொள்ளாது அல்லவா! வாசன் தனது அரிய, அற்புத, அபூர்வப் படைப்பான சந்திரலேகாவை அப்படியே இந்தி மொழியில் தயாரித்து அதிலும் முதன் முதலாக 150 பிரதிகள் வரையில் எடுத்து வட இந்தியா முழுவதும் வெளியிட்டு வெற்றி பெற்றார்.
சென்னையிலிருந்து சிறந்த சினிமாக் கலை ஓவியர்களையும், பெயிண்டர்களையும் மும்பைக்கு அழைத்துச்சென்று அழகழகான பெரிய பெரிய வண்ண 'பேனர்'களை வரையச் செய்து அவற்றை மும்பை, டெல்லி, கொல்கத்தா முதலிய பெரு நகரங்களின் முக்கிய - மக்கள் அதிக அளவில் அன்றாடம் கூடுகின்ற இடங்களாகப் பார்த்து எல்லாருடைய கண்களிலும் படும்படியாக வைக்கச் செய்தது மட்டும் அல்ல - அந்தந்த இடங்களுக்கெல்லாம் அவரே நேரில் சென்று பார்த்து திருப்தி அடைந்தார்.
முதன் முதலாக, வட இந்திய சினிமாவையே ஒரு கலக்குக் கலக்கிய வாசனின் விளம்பர நுட்பத்தைக்கண்டு ஏனைய இந்திப்படத் தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தர்களும் மலைத்துத் திகைத்துக் கடிதங்கள் எழுதியும், தொலைபேசி வாயிலாகவும் வாசனை மனமாரப் பாராட்டித் தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர்.
எஸ்.எஸ்.வாசன் என்ற ஓர் அதிமேதையான தமிழ் சினிமா தயாரிப்பாளரின் விளம்பர - வியாபார யுக்தியின் மூலமாக - காரணமாக அனைத்திந்திய திரைப்படத்துறையிலும், தொழிலிலும் ஒரு திருப்பமும், மாற்றமும் விளைவித்தது என்றால் அது சற்றும் மிகை அல்ல.
பிற்காலத்தில் மும்பை இந்திப்பட உலகில் அடியெடுத்து வைத்த ஏவி.மெய்யப்ப செட்டியார், வாஹினி பி.நாகிரெட்டியார், கோவை பட்சிராஜா ஸ்ரீராமுலு நாயுடு மற்றும் ஜூபிடர் பிக்சர்ஸ் எம்.சோமசுந்தரம், எஸ்.கே.மொய்தீன் போன்ற தென்னிந்திய ஸ்டூடியோ அதிபர்களுக்கெல்லாம் ஜெமினி வாசன்தான் முன்னோடியாகவும், முன்னுதாரணமாகவும், உந்துதல் உணர்வாகவும் ('இன்ஸ்பிரேஷன்') விளங்கினார் என்பது வெறும் வார்த்தை அல்ல. அது வரலாற்று உண்மையாகும்.
இப்படி திரைப்படத்தில் விஜயம் செய்து வெற்றி பெற்ற சாதனையாளர் வாசனின் நெற்றியில் 'திருஷ்டிப்பொட்டு' இட்டதைப்போல சந்திரலேகாவுக்கு அடுத்த இரண்டே மாதங்களில் - தமிழ்ப்புத்தாண்டுக்கு இரண்டு மாதங்கள் கழித்து 18.6.1948-ல் இன்னொரு ஜெமினியின் 'ஞானசவுந்தரி' என்ற படம் வெளிவந்தது. இது எதிர்பார்த்த அளவு ஓடவில்லை.
'ஞானசவுந்தரி'யினால் ஏற்பட்ட தோல்வியை அதே 1948-ன் இறுதியில் டிசம்பர் 3-ந்தேதி ஜெமினியின்தயாரிப்பில் வி.நாகையா, புஷ்பவல்லி, ஜெமினிகணேஷ் நடித்த 'சக்ரதாரி' படத்தின் வெற்றியின் மூலமாக அவர் போக்கிக் கொண்டார்.
சந்திரலேகாவைப்போல மற்றொரு பிரமாண்ட படைப்பாக 1953-ல் 'அவ்வையார்' படத்தை வாசன் தயாரித்து வெற்றி பெற்றார். சினிமாவிற்கான எந்தச் சிறப்பம்சமும் இல்லாத அவ்வையார் வரலாற்றை அனைத்துத் தரப்பு ரசிகர்களும் பார்த்துப் பாராட்டும்படியான ஒரு வெற்றிப்படமாக்கக்கூடிய அந்தத் துணிச்சல் வாசனுக்கு மட்டுமே வரும்.
அவ்வையார் பாத்திரத்தில் தோன்றி நடிக்க அன்றைய பிரபல கர்நாடக சங்கீதப் பாடகியாகப் புகழ் பெற்ற 'கொடுமுடிக்கோகிலம்' என்று அழைக்கப்பெற்ற கே.பி.சுந்தராம்பாளை அவர் தேர்ந்தெடுத்த அந்த ஒரு சினிமா சிந்தனையே அவருடைய அறிவிற்கும், அனுபவத்திற்கும் 'ஒரு சோற்றுப்பதம்' ஆகும்.
அவ்வையார் வேடம் அணிந்து அற்புதமாகப்பாடி, அருமையாக நடிக்க வல்ல ஒரு நடிகை இன்றுவரையில் வேறு எந்தப் பெண்ணும் பிறக்கவில்லை என்று அனைவருமே கூறும் அளவிற்கு கே.பி.சுந்தராம்பாள் வயதிலும், தோற்றதிலும் அப்படிப் பொருந்தி அமைந்திருந்தார். அத்துடன் சரித்திரக் கற்பனைக் கதையான சந்திரலேகாவை மட்டும் அல்ல - சங்க காலத் தமிழ் மூதாட்டியான அவ்வையாரின் வரலாற்றையும் 'செலுலாய்டில்' பதியச்செய்து, அந்த உயிர் பிம்பங்களைத் திரையில் உலவச் செய்து, சினிமாவுக்கெல்லாம் அப்பாற்பட்ட தமிழறிஞர்களையும் ம.பொ.சி., 'கல்கி' கிருஷ்ணமூர்த்தி போன்ற இலக்கிய பேராசிரியர்களையும் தன்னால் மகிழ வைக்க முடியும் என்பதை அன்றைக்கு நிரூபித்துக் காட்டினார் நிபுணர் எஸ்.எஸ்.வாசன்!
ஜெமினியில் ஒவ்வொரு படமும் எடுத்து முடிந்ததும் ஸ்டூடியோவின் உள்ளே பல பிரிவுகளில் பணிபுரியும் ஊழியர்கள் முதல் கடைநிலை அலுவலகச் சிப்பந்திகள் வரையில் எல்லோரும் பார்ப்பதற்கு ஏதுவாக ஒரு சிறப்புக் காட்சிக்கு தியேட்டரில் ஏற்பாடுசெய்து அவர்களைப் பார்க்க வைத்து, படத்தைப்பற்றி அவரவருக்குத் தோன்றும் கருத்துக்களை தனக்குத் தெரிவிப்பதற்காகவே அங்கு ஒரு பெட்டியை வைக்கச் சொல்வார். யாருக்கு என்ன தோன்றுகிறதோ அதை அவர்கள் காகிதத்தில் எழுதி அந்தப் பெட்டிக்குள் போட்டு மறுநாள் அவற்றை ஒன்றுவிடாமல் படித்து, படத்தின் நிறை குறைகளைத் தெரிந்து கொள்வார். ஒரு வேளை ஏதேனும் குற்றம் குறைகள் இருந்தால் அவற்றைப் போக்கி, வெட்ட வேண்டிய காட்சிகளை வெட்டி அல்லது திருத்தி புதிதாகச் சேர்க்க வேண்டியவற்றைச் சேர்த்து 'எல்லோருக்கும் மன நிறைவான ஒரு படம் இது' என்ற ஏகோபித்த முடிவிற்குப்பிறகே இறுதி பிரதிகளை (பைனல் காப்பிகள்) எடுக்கச் செய்வதை வாசன் வழக்கமாக வைத்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
தனது தொடர் வெற்றிக்குக் காரணமே இந்த 'கலந்தாய்வு' (கவுன்சிலிங் முறை) தான் என்பதை தன் புதல்வர் பாலசுப்பிரமணியம் முதற்கொண்டு அவரைச் சார்ந்த அனைவருக்குமே அவர் எடுத்துக் கூறுவார். அந்த அளவிற்கு மற்றவர்களின் கருத்துக்களுக்கு அவர் மதிப்பளித்தார்.
படைப்பாளிகளுக்கும், அவர்களுடைய சிறந்த படைப்புகளுக்கும் ஏற்றாற்போல சன்மானம் வழங்குவதில் வாசன் மற்றவர்களுக்குச் சற்றும் சளைத்தவர் அல்லர். அதற்கு எடுத்துக்காட்டாக ஒரு நிகழ்ச்சி. 1968-ல் அண்ணன் ஏ.பி.நாகராஜன், ஆனந்த விகடன் வார இதழில் 'கலைமணி' என்னும் புனைப்பெயரில் கொத்தமங்கலம் சுப்பு எழுதிய 'தில்லானா மோகனாம்பாள்' தொடர் நாவலை திரைப்படமாகத் தயாரிக்கத் திட்டமிட்டு எஸ்.எஸ்.வாசனை அணுகி அவர் நிர்ணயித்த பத்தாயிரம் ரூபாய் உரிமைத் தொகையை (ராயல்டி) அளித்தார்.
அதற்கு அடுத்த நாள் அவர் மரியாதை நிமித்தமாக சுப்புவைச் சந்தித்து அவருடைய கதை உரிமையைப் பெற்ற விஷயத்தைக் கூறி, "உங்களுக்கும் ஒரு தொகை வழங்க விரும்புகிறேன். எவ்வளவு வேண்டும்?" என்று கேட்டார்.
அதற்கு சுப்பு, "ஒன்றும் வேண்டாம், நீங்கள் வாசனிடம் கொடுத்த பதிப்புரிமைத் தொகையான அந்தப் பத்தாயிரம் ரூபாயை அப்படியே அவர் எனக்கு அனுப்பி வைத்துவிட்டார். அத்துடன்கூட, அந்த நாவலை வாராவாரம் நான் விகடனில் எழுதிக்கொண்டு வரும் பொழுதே அதற்கான கணிசமான சன்மானத் தொகையையும் அவ்வப்போது அவர் எனக்கு வழங்கி விட்டார். அதனால், நீங்கள் அவருக்கு அளித்த பதிப்புரிமைத் தொகையான அந்தப் பத்தாயிரம் ரூபாய் அவரைத்தான் சேர்ந்தது. அதை எனக்குக் கொடுக்கவேண்டிய அவசியம் இல்லை. ஆனாலும் கொடுத்துவிட்டார். அது அவருடைய வழக்கமான பெருந்தன்மை" என்று நன்றி உணர்ச்சியுடன் கண்ணீர் மல்கக் கூறியதாக அண்ணன் ஏ.பி.என். ஒருநாள் என்னிடம் கூறியது இன்னும் எனக்கு நினைவிருக்கிறது.
சிந்தைக்கும் செவிக்கும் விருந்தளித்த சினிமா சிருஷ்டி கர்த்தாவான வாசன், தனது ஸ்டூடியோவைச் சேர்ந்த கலைஞர்களுக்கும், ஏனைய ஊழியர்களுக்கும் அன்றைய சிறந்த நளபாகரான ஏ.என்.சுப்பிரமணிய அய்யரைக் கொண்டு ஜெமினி கேன்டின் மூலமாக சுவையான உணவு வகைகளை வழங்கச் செய்து அன்றாடம் அவர்களின் வயிறுகளை குளிரச் செய்தார். அந்த ஏ.என்.சுப்ரமணிய அய்யரின் பிள்ளைகள் இன்றைக்கு 'ஏ.என்.எஸ். ஜெமினி கேன்டின்' என்ற பெயரில் 'கேட்டரிங்' தொழில் செய்து வருகின்றனர்.
1936-ல் தனது 32-வது வயதில் ஓர் எளிய கதாசிரியராக இந்த சினிமாத்துறையில் சிற்றடி எடுத்து வைத்து, 1940-ல் ஒரு பெரிய ஸ்டூடியோவைச் சொந்தமாக விலைக்கு வாங்கி, அதற்கு 'ஜெமினி ஸ்டூடியோ' என்று ராசியான பெயரிட்டு அதன் பிறகு 1941-ல் முதன் முதலாக 'மதன காமராஜன்' படத்தைத் தயாரித்து வெற்றி பெற்று, அதனைத் தொடர்ந்து 1968-ல் எம்.ஜி.ஆர். நடித்த 'ஒளிவிளக்கு' மற்றும் 1969-ல் சிவாஜிகணேசன் நடித்த 'விளையாட்டுப்பிள்ளை' வரையில் அற்புதமான 27 தமிழ்ப்படங்களையும், 1942-ல் 'ஜீவன் முக்தி' முதல் 'நாகபஞ்சமி' வரையில் 19 அருமையான தெலுங்குப் படங்களையும், 1948-ல் 'சந்திரலேகா' முதல் 'இன்சானியத்' வரையில் 24 அபூர்வமான இந்திப்படங்களையும் மற்றும் சந்திரலேகாவை ஆங்கிலத்திலும், 'வேஜஸ் ஆப் பியர்' என்ற ஆங்கிலம், பிரெஞ்சு மொழிப் படங்களையும், 'சச் ஈஸ் லைப்' என்னும் டைட்டிலில் 'சம்சாரம்' படத்தை பல வேற்றுமொழி வடிவத்திலும், 'கேர் கேர் மாடினா சூலா' மற்றும் 'வெர்னிவசுலத்' ஆகிய இரு குஜராத்தி மொழிப்படங்களையும் 'அபூர்வ சகோதரர்கள்' படத்தை 'நிஷான்' என்ற பெயரில் இந்தி மொழியிலும், 'அவ்வையார்' படத்தை கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் தயாரித்து, அனைத்து இந்தியாவிலும் வேறு எந்த ஒரு திரைப்படத் தயாரிப்பாளரும் செய்யாத அரும்பெரும் சாதனைகள் புரிந்து சலனப்படச் சரித்திரத்தின் பொன்னேடுகளில் தன் புகழையும், பெயரையும் பொறித்துக்கொண்டார், லட்சிய புருஷரான எஸ்.எஸ்.வாசன்.
இறை அருளோடு இவ்வுலகில் பிறந்த ஒரு சில லட்சிய மனிதர்களுக்கும், ஈடு இணையற்ற பெரும் சாதனையாளர்களுக்கும் அவர்களின் தலைநாளில் எழுதப்பட்ட 'விதி'க்கும் சில சமய சந்தர்ப்பங்களில் ஆகாது போலிருக்கிறது.
மக்களின் மன அழுத்தத்தையும், பாரத்தையும் குறைத்து அவர்களின் கவலைகளை மறக்கச் செய்து மகிழ்வித்த மாமேதையான வாசன், 1968- 1969-களில் தனது 65-வது வயதில் நோய்வாய்ப்பட்டார். வயிற்றில் உபாதை ஏற்பட்டு அது வெறும் வலிதான் என்று எண்ணி அவ்வப்போது பல்வேறு மருத்துவர்களிடம் சென்று மருந்து மாத்திரைகளை மட்டுமே விழுங்கி நாட்களை நகர்த்தி, காலத்தைக் கடத்திக்கொண்டிருந்த அவருக்கு கடைசிக் கட்டத்தில்தான் தெரிந்தது. தனது வயிற்றில் கொடிய புற்று நோய் உண்டாகி, அது நாளடைவில் வளர்ந்து இறுதி நிலையை அடைந்து விட்டது என்ற உண்மை.
காப்பாற்றப்படக்கூடிய காலக்கட்டத்தையெல்லாம் கடந்து போய்விட்ட வாசன் 26.8.1904-ல் பிறந்த அதே ஆகஸ்டு மாதம் 26-ந்தேதி 1969-ல் அமரர் ஆனார். அவருடைய இறுதி ஊர்வலம் அவரது விருப்பப்பிரகாரம் மிகவும் எளிமையாக சாஸ்திரச் சம்பிரதாய ஐதிக முறைப்படி அவர் வாழ்ந்த 'சுதர்ஸன்' இல்லத்திலிருந்து கிருஷ்ணாம்பேட்டை மயானத்திற்கு தோளில் சுமந்து செல்லப்பட்டது. சுமந்து சென்ற அந்த நால்வருள் ஜெமினிகணேசனும் ஒருவராவார். அதன் மூலம் 'ஜெமினி' என்று பெயர் பெற்றதற்கான நன்றிக்கடனை அவர் செலுத்திக்கொண்டார்.
'மாமேதையான மனிதர்கள் மறைந்து போய்விடுவார்கள். ஆனால் அவர்கள் அடைந்த புகழும், பெருமையும் ஒருபோதும் அழிவதில்லை. அவை சாகா வரம் பெற்று சாஸ்வதம் ஆனவை.' dailythanthi.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக