புதன், 22 அக்டோபர், 2014

ரகசிய திருமணங்கள் செல்லாது! வழக்கறிஞர்கள் அறைகள், பார் அசோசியேஷன் அறைகளில், ரகசியமாக..

சென்னை : வழக்கறிஞர்களின் அறைகள், பார் அசோசியேஷன் அறைகளில், ரகசிய திருமணங்கள் செய்வதை, திருமணமாக கருத முடியாது; பதிவாளர் முன், ஆண், பெண் இருவரும் நேரில் ஆஜராகாமல், திருமணத்தை பதிவு செய்ய முடியாது' என, சென்னை உயர் நீதிமன்றம், அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர், பாலகிருஷ்ணன் பாண்டியன். சென்னை, வடபழனி முருகன் கோவிலில், திருமணம் நடந்ததாகவும், வடசென்னையில் உள்ள பதிவாளர் அலுவலகத்தில், திருமணத்தை பதிவு செய்ததாகவும், மனைவியை அவரது பெற்றோர் சட்டவிரோத காவலில் வைத்திருப்பதாகவும் கூறி, ஆட்கொணர்வு மனுவை, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.சென்னையைச் சேர்ந்த ராம்பிரசாத் என்பவரும், சட்டவிரோத காவலில் இருக்கும் மனைவியை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக் கோரி, மனுத் தாக்கல் செய்தார்.இந்த, இரண்டு மனுக்களும், நீதிபதிகள் ராஜேஸ்வரன், பி.என்.பிரகாஷ் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. போலீஸ் தரப்பில், கூடுதல் அரசு குற்றவியல் வழக்கறிஞர் மகாராஜா, சிறப்பு அரசு பிளீடர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஆஜராகினர்.


மனுக்களை விசாரித்த, 'டிவிஷன் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு:பாலகிருஷ்ணன் பாண்டியன் தாக்கல் செய்த வழக்கில், சம்பந்தப்பட்ட பெண், ஆஜர்படுத்தப்பட்டார். அவரிடம் விசாரித்த போது, 'மனுதாரரை தெரியும்; ஆனால், அவரை திருமணம் செய்யவில்லை. தனக்கு தெரியாமல், திருமண சான்றிதழ் பெறப்பட்டுள்ளது' என்றார்.திருமண சான்றிதழை ஆராய்ந்த போது, பாரிமுனை, அங்கப்பநாயக்கன் தெருவில் உள்ள முகவரியில், திருமணம் நடந்ததாக கூறப்பட்டுள்ளது; ஆனால், வடபழனி முருகன் கோவிலில் திருமணம் நடந்ததாக, மனுவில் கூறப்பட்டுள்ளது.எங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டதால், அந்த வழக்கில், விரிவான உத்தரவு பிறப்பித்தோம். ராம்பிரசாத் வழக்கிலும், ஆஜரான பெண், 'மனுதாரரை, திருமணம் செய்யவில்லை. வழக்கறிஞர் ஒருவர், திருமண சான்றிதழ் அளித்துள்ளார். அந்த வழக்கறிஞரை சந்தித்தது இல்லை; அவரது அலுவலகத்துக்கு சென்றதில்லை' என, கூறியுள்ளார்.

அந்த திருமண சான்றிதழிலும், பாரிமுனை, அங்கப்ப நாயக்கன் தெருவில் உள்ள முகவரியில், திருமணம் நடந்ததாக கூறப்பட்டுள்ளது. அதாவது, வழக்கறிஞரால், அவரது அலுவலகத்தில் வைத்து, திருமணம் நடத்தப்பட்டுள்ளது.பதிவாளர் அலுவலகங்கள், வழக்கறிஞர் அறைகளில் நடக்கும், திருமண விவகாரங்கள் குறித்து, ஐ.பி.எஸ்., அதிகாரி ஜெயகவுரி, விசாரணை நடத்தி, அறிக்கை அளித்துள்ளார்.கடந்த ஆண்டில் மட்டும், வடசென்னை, பதிவாளர் அலுவலகத்தில், 1,559 திருமணங்களை, 120 வழக்கறிஞர்கள் பதிவு செய்துள்ளனர்.ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில், அதிக எண்ணிக்கையில் திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டுள்ளன. கல்வியாண்டு முடியும் நிலையில், கல்லுாரியை விட்டு செல்ல வேண்டியதிருப்பதால், திருமணங்களை பதிவு செய்கின்றனர்.விசாரணை அதிகாரி தாக்கல் செய்த அறிக்கையைப் பார்க்கும் போது, கடந்த ஆண்டில், ஒரு வழக்கறிஞர் மட்டும், 676, திருமணங்களை நடத்தி வைத்துள்ளார். மற்ற வழக்கறிஞர்கள், 382, 318, 277, 269 எண்ணிக்கையில், திருமணங்கள் நடத்தி வைத்துள்ளனர்.

அறிக்கையில் இருந்து, சில வழக்கறிஞர்கள், திருமணங்களை நடத்தி வைக்கும் தொழிலை செய்வது தெரிகிறது. வழக்கறிஞர் அலுவலகங்கள், பார் அசோசியேஷன் அறைகளில், திருமணங்களை நடத்துகின்றனர்.வழக்கறிஞர் தொழிலின் கவுரவம் பாதிக்கப்பட்டால், நீதிமன்ற முறையில், பாதிப்பு ஏற்படும். பாதிக்கப்பட்டவர் புகார் தெரிவித்தால், அந்த வழக்கறிஞர், ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்.'திருமணங்கள் நடத்த, வழக்கறிஞர் சங்கத்தை பயன்படுத்தினால், அந்த உறுப்பினரை, சங்கத்தில் இருந்து நீக்குவோம்' என, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர், பால் கனகராஜ் தெரிவித்தார். அவரது உறுதியான முயற்சிக்கு, பாராட்டுக்கள்.அதே நேரத்தில், பதிவுத்துறையில் ஆவணங்களை சமர்பிக்க, வழக்கறிஞர்களுக்கு தடையில்லை என, பால் கனகராஜ் தெரிவித்தார். இதை, எங்களால் ஏற்க முடியவில்லை.பதிவாளர் முன், வழக்கறிஞர் ஆஜராகி, ஆவணங்களை தாக்கல் செய்வது, வழக்கறிஞர்களின் கண்ணியத்துக்கு குறைவு ஏற்படும்.

வழக்கறிஞர்கள் அறைகள், பார் அசோசியேஷன் அறைகளில், ரகசியமாக திருமணங்களை நடத்துவதை, திருமணமாக கருத முடியாது. பாதிக்கப்பட்ட பெண்கள் தான், இது குறித்து கேள்வி கேட்க முடியும்.சில தனிப்பட்ட சூழ்நிலைகளை தவிர்த்து, பதிவாளர் முன், ஆண், பெண் இருவரும் நேரில் ஆஜராகாமல், திருமணத்தை பதிவு செய்ய முடியாது.திருமணத்தை நடத்தி வைக்கும் வழக்கறிஞர் மீது, சம்பந்தப்பட்டவர்கள் புகார் அளித்தால், சட்டப்படி, பார் கவுன்சில் நடவடிக்கை எடுக்கும்.பதிவுத்துறை அதிகாரிகள் பாதுகாப்பு கோரினால், போதிய பாது காப்பை, போலீசார் அளிக்க வேண்டும். இந்த வழக்கில், விரிவான அறிக்கை தாக்கல் செய்த, ஐ.பி.எஸ்., அதிகாரி ஜெயகவுரி, நீதிமன்றத்துக்கு உதவிய, வழக்கறிஞர் ராகவாச்சாரி, பார் அசோசியேஷன் தலைவர் தமிழ்மணி, வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர், பால் கனகராஜ், பார் கவுன்சில் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மசூத், அரசு வழக்கறிஞர்கள் ரவிகுமார் பால், விஜயகுமார், ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஆகியோருக்கும் நன்றி.மகாத்மா காந்தி, டாக்டர் அம்பேத்கர், வ.உ.சிதம்பரம் பிள்ளை பின்பற்றிய வழக்கறிஞர் தொழில், கயவர்களின் கைகளுக்கு சென்று விட, வழக்கறிஞர்கள் சமூகம் அனுமதிக்காது என்பதை, 'சுத்தம் செய், யுத்தம் செய்து' என்ற குறும்படத்தில், காட்டப்பட்டுள்ளது. இந்தப் படத்தை பார்த்த பின், இளைய வழக்கறிஞர்கள், வழக்கறிஞர்கள் தொழிலில் மறுமலர்ச்சியை கொண்டு வருவர் என, நாங்கள் உறுதியுடன் இருக்கிறோம்.இவ்வாறு, 'டிவிஷன் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது. தினமலர்.com

கருத்துகள் இல்லை: