சுமார் ஓராண்டு காலம் தினமும் சாயந்திரம் அலுவலகம் முடிந்ததும் கணவனும் மனைவியுமாக நில வேட்டைக்கான நகர்வலத்தை நடத்தியிருக்கிறார்கள். பெங்களூர் நகரத்தின் உள்ளே சந்து பொந்து இண்டு இடுக்குகள் அனைத்திலும் புகுந்து புறப்பட்டு அலசி ஆராய்ந்து பீராய்ந்ததில் நண்பன் பாதி சோர்ந்து போயிருக்கிறான். ஏன் என்று கேட்டேன்.
“டேய்… பாதி பெங்களூரு, ரெட்டிங்க கைல தாண்டா இருக்கு. அவனுங்க காட்டின நிலத்தோட ரிக்கார்ட்டெல்லாம் நோண்டிப் பாத்தா ஒவ்வொரு சொத்துலயும் டிசைன் டிசைனா வில்லங்கத்தை கூட்டி வச்சிருக்கானுங்க. அண்ணன் தம்பிக்கு பவர் குடுத்துருக்கான், தம்பி வித்துட்டு கம்பிய நீட்டிட்டான். அண்ணன் கோர்ட்ல ஸ்டே வாங்கிட்டு புதுசா நம்ப கிட்ட வந்து நீ வாங்கிக்கன்னு நிக்கிறான்… இது மாதிரி ஒவ்வொன்னுலயும் ஒரு பிரச்சினை. பத்தாததுக்கு அம்புட்டு பேரும் பி.ஜே.பில அவனைத் தெரியும், இவனைத் தெரியும் நீ ஒன்னும் பயப்படாதேங்கறான்… அதைக் கேட்டாலே பீதியாகுது”
நகரத்துக்குள்ளே தேடுவதை வேறு வழியின்றி நிறுத்திக் கொண்டு நகரத்திற்கு சற்று வெளியே தேட முடிவு செய்து ரியல் எஸ்டேட் நிறுவனங்களை அணுகியிருக்கிறார்கள். அவர்களோ பெங்களூருவுக்கு ரொம்ப பக்கம் என்று சொல்லி மைசூருக்கும், சிக்க திருப்பதிக்கும், ஓசூருக்கும் இடையே அல்லாட விட்டிருக்கிறார்கள் (அங்கேயுமா!?). ஒரு வழியாக பெங்களூருவுக்கு ஓரளவுக்கு நெருக்கமாக ஒரு இடத்தை ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்று காட்டியிருக்கிறது.
”சரி அதையாவது வாங்கினியா இல்லையா?”
”அட நீ வேற… என்னைக் கூட்டிப் போன ஏஜெண்டு, பாஸ் இந்த பத்து ப்ளாட் மட்டும் தான் புக்காகாமெ இருக்கு. அதுவும் நீங்க ஆறு மாசமா பேசிட்டு இருக்கறதாலெ ப்ளாக் பண்ணி வச்சிருக்கேன். சீக்கிரம் புக் பண்ணிடுங்க அப்படின்னு சொன்னான். எனக்கு லேசா டவுட் வந்திச்சி… நம்ப சீனி இருக்கான்லே அவனை தனியா விட்டு அதே ரியல் எஸ்டேட் காரன் கிட்டே புதுசா என்கொயர் பன்றாப்ல பேசிப் பார்க்கச் சொன்னேன். அவனைக் கூட்டிப் போய், இன்னொரு பத்து ப்ளாட்டை காட்டி இது மட்டும் தான் இருக்குன்னு சொல்லிருக்கான்.. என்னோட டவுட் கன்பார்ம் ஆயிடிச்சி”
”சரி என்ன தாண்டா செய்தே?”
”அவந்தான் புத்திசாலியா.. எங்கப்புச்சி மட்டும் எனக்கு பன்னிப் பாலையா ஊட்டி வளத்தா.. நான் அடுத்து நம்ம சேகரையும், பிரகாசையும் செட்டப் பண்ணி தனித்தனியா அனுப்பிப் பார்த்தேன். கடேசில பாத்தா ங்கொய்யாலெ அவங்கிட்ட ஒரு சைட்டு கூட விக்கலை.. அதுக்கே ஏகப்பட்ட பில்டப் குடுத்து ஊர்பட்ட வெலை சொல்லிட்டு இருந்திருக்கான். போடான்னு வந்திட்டேன்”
“அப்ப வீடு கட்ற ப்ளானு?”
சென்னையை சுற்றியுள்ள சில பகுதிகளில் ரவுண்டு அடித்து தற்போது ஓய்ந்துள்ளான்.
”எல்லா பேரும் விக்க ரெடியா இருக்கானுங்க. ஆனா, வாங்க ஆளு சிக்க மாட்டேங்கறான். நம்மள மாதிரி ஒன்னு ரெண்டு பேரு வெளம்பரத்த பாத்துட்டு ஜொள்ளு விட்டுட்டு போனோம்னு வைய்யி… அப்டியே கூப்டு சந்தனத்தை பூசி மாலைய போடு குனிய வச்சிடுறானுங்க. ஏமாந்தோம்னா காசுக்கு கோயிந்தா தான்” என்றான்
நண்பனிடம் பேசியதில் ஒன்று புரிந்தது. “ஒரு இன்வெஸ்ட்மென்டாக இருக்கட்டுமே” என்று வாங்கிப் போட்ட யாருமே மேற்படி ’முதலீடு’ எனப்படுவதன் அர்த்தம் என்ன, அது எப்போது, எப்படி, எவ்வளவுக்கு வளரும் என்பதையெல்லாம் ஊடக மற்றும் ரியல் எஸ்டேட் முதலாளிகளின் ஊதிப்பெருக்கப்பட்ட மதிப்பீடுகளோடு கணக்கு போடுகின்றனர். ஏதோ நல்லது நடக்குமென்ற நம்பிக்கையும், கொஞ்சம் பணமும் இருந்தால் ஏமாறுவதற்கு இவர்களும் ஏமாற்றுவதற்கு அவர்களும் தயார்.
நண்பனிடம் பேசிவிட்டு கிளம்பினேன்.
பின்னர் வேறு வேலைகளுக்கு இடையில் நேரம் கிடைத்த போது ரியல் எஸ்டேட் முதலீட்டைப் பற்றி விவரம் தெரிந்தவர்களிடம் விசாரித்தேன்.
தமிழகத்திற்கான ரியல் எஸ்டேட் முதலீடு வருடாந்திரம் 75% அளவுக்கு குறைந்து வருவதாக தெரிவிக்கிறது அசோசெம். 2011-12 கால கட்டத்தில் ரூ 13,600 கோடியாக இருந்த கட்டுமானத்துறை முதலீடு ஒரே ஆண்டில் தலைகீழ் வீழ்ச்சியை சந்தித்து 2012-13 காலகட்டத்தில் வெறும் ரூ 3,300 கோடியாக சுருங்கியுள்ளது. பணவீக்க விகிதத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி அவ்வப் போது பணச் சந்தையில் ரூபாய் நோட்டுகளை அச்சடித்து நுழைப்பதானது பண மதிப்பை குறையச் செய்து பொருட்களின் விலைகளை தொடர்ச்சியாக அதிகரித்து வந்திருக்கிறது.
நடுத்தர மற்றும் உயர் நடுத்தர வர்க்கத்தினரிடையே அதிகரித்த ரூபாய் நோட்டுப் புழக்கத்தை பயன்படுத்திக் கொண்ட ரியல் எஸ்டேட் முதலைகள், அவற்றை ’முதலீடுகளாக’ ஈர்க்கத் துவங்கினர். இந்தப் போக்கு கடந்த பதினைந்து ஆண்டுகளாகவே இருந்தாலும், கடந்த ஏழாண்டுகளில் தீவிரத்தன்மையை அடைந்துள்ளது. இதன் விளைவாக இந்திய வங்கிகள் தனிநபர்களுக்கு வழங்கிய கடன்களில் சரிபாதி அளவு ரியல் எஸ்டேட் முதலீடாக மாறியிருக்கிறது. இந்தியாவின் முதல் பத்து வங்கிகள் வழங்கியுள்ள வீட்டுக்கடன்களின் மதிப்பு மட்டும் சுமார் 9000 கோடி டாலர் (ரூபாய் ஐந்து லட்சத்து நாற்பதாயிரம் கோடி). இது தவிர ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு வங்கிகள் வழங்கிய கார்ப்பரேட் கடன்களின் அளவும் மதிப்பும் நம்மிடம் இல்லை.
நடுத்தர வர்க்க மக்களின் ஆரம்பகட்ட உற்சாகத்தை மேலும் வளர்த்தெடுக்கலாம் என்ற பேராசையில் பல்லாயிரக்கணக்கான கோடிகளைக் கொட்டி வீட்டு மனைத் திட்டங்களைப் போட்டு வைத்துள்ள ரியல் எஸ்டேட் முதலைகள் தற்போது ஏமாந்த நுகர்வோரை விஜய், வசந்த், தமிழன் மற்றும் உள்ளூர் டி.வி சேனல்களில் டில்லி கணேசை முன்னிறுத்தி ஆள்பிடிக்க அலைந்து கொண்டிருக்கின்றனர்.
அவர்கள் அளிக்கும் “ஆஃபர்களின்” பொருள் – வாங்க ஆள் வரவில்லை என்பது தான்.
இந்த எளிய உண்மை மெல்ல மெல்ல மக்களிடையே பரவி ஏற்கனவே சரிவின் விளிம்பில் தத்தளித்துக் கொண்டிருந்த ரியல் எஸ்டேட் குமிழியின் மேல் குண்டூசியைப் பாய்ச்ச தருணம் பார்த்துக் கொண்டிருக்கிறது.
- தமிழரசன்.வினவு.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக