திமுக தலைவர் கலைஞர் 19.10.2014 ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“ஒய்யாரக்
கொண்டையாம்; தாழம்பூவாம்” - இப்படி ஒரு பாடலுக்கான முதல் வரியைப்
படித்திருப்பாய்! அடுத்தடுத்த வரிகளைப் படித்தால்தான் என்ன சொல்ல வந்தேன்
என்பது உனக்குப் புரியும். முழுப் பொருளும் விளக்கமாகத் தெரியும்.ஜெயலலிதாவின்
சொத்துக் குவிப்பு வழக்கு பற்றிய விவரங்களும், 18 ஆண்டுக் காலம் நடைபெற்ற
வழக்கும், இறுதியாக அளிக்கப்பட்ட தீர்ப்பும், நான் புதிதாகச் சொல்லி நீ
தெரிந்துகொள்ள வேண்டிய ஒன்றல்ல. நாட்டு மக்களுக்கே நன்றாகப் புரியும்.இந்த விவகாரங்களில் கைது, சிறை, தண்டனை தொடர்ந்து நிபந்தனை
ஜாமீன், இடைக்கால விடுதலை என்ற அத்தியாயங்களில் இந்தச் சொத்துக் குவிப்பு
வழக்கைப் பிரித்துப் படிக்கலாம் என்றாலும் முழுமையாக விரித்துச்
சொன்னால்தான் உனக்கும் நல்லது; நாட்டிற்கும் நல்லது என்பதால் - -
நாட்டின் எதிர்காலத்திலாவது வாய்மை நிலை நாட்டப்படும்; எதிர்கால இளைஞர்களுக்குப் பயனுடையதாகவும், எச்சரிக்கையாகவும் இருக்கும் என்ற நம்பிக்கையோடு - கடந்த சில நாட்களாக வாய் மூடியிருந்த நான், விவரமாகவே சற்று விளக்கமாகவே விரித்துச் சொல்வதற்காக, கடிதத் தொடரைத் தொடங்கியிருக்கிறேன்.
நாட்டின் எதிர்காலத்திலாவது வாய்மை நிலை நாட்டப்படும்; எதிர்கால இளைஞர்களுக்குப் பயனுடையதாகவும், எச்சரிக்கையாகவும் இருக்கும் என்ற நம்பிக்கையோடு - கடந்த சில நாட்களாக வாய் மூடியிருந்த நான், விவரமாகவே சற்று விளக்கமாகவே விரித்துச் சொல்வதற்காக, கடிதத் தொடரைத் தொடங்கியிருக்கிறேன்.
இந்தக்
கடிதத்திற்கான தலைப்பே “ஒய்யாரக் கொண்டையாம்; தாழம்பூவாம்” என்பதாகும்.
அடுத்த வரியான “உள்ளே இருக்குமாம் ஈரும் பேனும்” என்ற வாசகத்தை வெளியிடாமலே
நீ புரிந்து கொள்வாய் என்ற நம்பிக்கையோடு இந்தக் கடிதத்தைத் தொடங்கி ஓரிரு
நாட்கள் தொடருகிறேன்.
பதினெட்டு ஆண்டுகளாக பல்வேறு கட்டங்களிலும் இழுத்தடிக்கப்பட்டுக் காலம்
கடத்தப்பட்டு வந்த ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேர் மீதான சொத்துக் குவிப்பு
வழக்கில் பெங்களூரு தனி நீதிமன்றத்தில் நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்ஹா
அவர்கள் கடந்த செப்டம்பர் 20ஆம் தேதியன்று தீர்ப்பளிக்கப் போவதாக
அறிவித்தார்.
ஆனாலும்
குற்றஞ்சாட்டப்பட்டோர் தங்களின் பாதுகாப்புக் கருதி, தீர்ப்பினை
செப்டம்பர் 27ஆம் தேதிதான் வெளியிட வேண்டு மென்று கோரிக்கை வைத்து, அதையும்
நீதிபதி ஏற்றுக்கொண்டு, செப்டம்பர் 27ஆம் தேதியன்றே தீர்ப்பினை
அளித்தார்.
அந்தத்
தீர்ப்பில் ஜெயலலிதாவுக்கு நூறு கோடி ரூபாய் அபராதமும், நான்காண்டுகள்
சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.மேலும் சசிகலா, இளவரசி,வி.என். சுதாகரன்
ஆகியோருக்கும் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா பத்துக் கோடி
ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இதற்கான ஆதாரங்களையும்,
சாட்சியங்களையும் சட்ட விதி முறைகளின் அடிப்படையில் குறிப்பிட்டு நீதிபதி ஜான் மைக்கேல் டி. குன்ஹா 1136 பக்கங்களில் விரிவான தமது தீர்ப்பில் விளக்கியிருக்கிறார்.
இந்தத்
தீர்ப்பு வெளியானவுடன், அதைப் பற்றி நான் எந்தவிதமான கருத்தும்
தெரிவிக்கவில்லை. காரணம், இது முக்கியமான வழக்கு என்பதால், எச்சரிக்கை
உணர்வுடன் பொறுமையாக இருந்து தீர்ப்பு முழுவதையும் கவனமாகப் படித்த பிறகு
விளக்கலாம் என்று எண்ணினேன். மேலும் அ.தி.மு.க.வின் தலைவிக்கு தண்டனை
வழங்கப் பட்டுவிட்டது என்பதற்காக நான் மகிழ்ச்சி அடையவும் இல்லை; தற்போது
அவர் உச்சநீதிமன்றத்தில் நிபந்தனை ஜாமீனில் விடுதலை பெற்றுவிட்டார்
என்பதற்காக வருத்தப்படவும் தயாராக இல்லை.
ஆனால்
அ.தி.மு.க.வினர் சிலர் நான்தான் ஏதோ ஜெயலலிதா மீது பொய் வழக்குப்
போட்டதாகக் கூறிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மை என்ன? பெங்களூரு
சிறப்பு நீதிமன்ற நீதிபதி அவர்கள்
வழங்கிய அந்தத் தீர்ப்பில் என்னென்ன கூறப்பட்டுள்ளது என்பதை உன்னுடன்
பகிர்ந்து கொள்வதற்காகத்தான் இந்தத் தொடர் கடிதம்!
ஜெயலலிதாவின்
சொத்துக் குவிப்பு வழக்கு சென்னையில் தொடங்கிய போதிலும் பெங்களூருக்கு ஏன்
மாற்றப்பட்டது என்ற விபரத்தை நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்ஹா தனது
தீர்ப்பின் தொடக்கத்தில் தெரிவித்துள்ளார். தமிழக முன்னாள் முதலமைச்சர்
ஜெயலலிதா மற்றும் சசிகலா, வி.என்.சுதாகரன், ஜெ.இளவரசி ஆகிய நால்வரும் ஊழல்
தடுப்புச் சட்டத்தின் கீழும், இந்தியக் குற்றவியல் சட்டப் பிரிவுகள் 120 பி மற்றும் 109ன் கீழும் தண்டனைக்குரிய குற்றங்கள் செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது.
ஜெ.
ஜெயலலிதா 24.6.1991 முதல் 13.5.1996 வரை தமிழக முதலமைச்சராக இருந்தார்.
அதற்கு முன்பு 1960களில் திரைப்படத்தில் நடித்து வந்த மறைந்த
என்.ஆர்.சந்தியாவின் மகளான அவர், 1971ஆம் ஆண்டு தனது தாயார்
மறைவுக்குப்பின், நாட்டிய கலா நிகேதனின் சொத்துக்களுக்கு மட்டுமே
உரிமையாளராக இருந்தார்.
இரண்டாவது
குற்றவாளியான சசிகலா, தமிழக அரசின் மக்கள் தொடர்புத் துறையில் துணை
இயக்குநராகப் பதவி உயர்வு பெற்றிருந்து, பின்னர் பதவி விலகிய நடராஜனின்
மனைவி; 1970ல் நடராஜனுக்குத் திருமணம் செய்து கொடுக்கப்பட்ட சசிகலா,
அவ்வப்போது ஜெயலலிதா வீட்டுக்கு வந்து போய்க் கொண்டிருந்தவர் 1988க்குப்
பின் அவருடைய உடன்பிறவாச் சகோதரியாக ஆகி ஜெயலலிதாவுடன் அவரது வீட்டிலேயே
தங்கிவிட்டார்.
சசிகலாவின்
சகோதரி வனிதாமணி - டி.டி.விவேகானந்தன் ஆகியோரின் மகனான வி.என்.சுதாகரனைத்
தனது வளர்ப்பு மகனாக வெளிப்படையாக ஏற்றுக்கொண்ட ஜெயலலிதா, 7.9.1995ல்
அவருக்குச் சென்னையில் சத்தியலட்சுமியுடன் மிகவும் ஆடம்பரமாகத் திருமணத்தை
நடத்தி வைத்தார்.
நான்காவது
குற்றவாளியான இளவரசி, சசிகலாவின் மூத்த சகோதரர் வி.ஜெயராமனின் மனைவி.
ஜெயராமன் இறந்ததற்குப் பிறகு, இளவரசியும் 1992 தொடக்கத்தில் இருந்து
ஜெயலலிதாவின் வீட்டில் சசிகலாவைப் போலவே தங்கியிருந்தார்.
அரசு
வழக்கில் குறிப்பிட்டுள்ளபடி 1.7.1991 அன்று ஜெயலலிதாவும், சசிகலாவும்
பங்குதாரர்களாக உள்ள ஜெயா பப்ளிகேஷன்ஸ், சசி எண்டர்பிரைசஸ், நமது
எம்.ஜி.ஆர். மற்றும் அவற்றின் பேரால் வாங்கப்பட்ட சொத்துக்கள் உள்பட 2
கோடியே ஒரு லட்சத்து 83 ஆயிரத்து 957 ரூபாய் அளவுக்குச் சொத்துக்களைப்
பெற்றிருந்தார்கள்.
1.7.1991க்குப்
பிறகு அதாவது ஜெயலலிதா முதலமைச்சராக ஆன பிறகு, ஜெயலலிதா, சசிகலா, இளவரசி,
சுதாகரன் தரப்பினருக்கு சொத்துக்கள் பல மடங்கு பெருகின. அவை வருமாறு :-
1. ஜெ. பண்ணை வீடுகள்.
2. ஜெ.எஸ். வீட்டு வசதி மேம்பாடு.
3. ஜெ. ரியல் எஸ்டேட்.
4. ஜெயா ஒப்பந்ததாரர்கள் மற்றும் கட்டிடங்கள்.
5. ஜெ.எஸ். லீசிங் மற்றும் பராமரிப்பு.
6. பசுமைப் பண்ணை இல்லங்கள்.
7. மெட்டல் கிங்.
8. சூப்பர் டூப்பர் டி.வி. லிமிடெட்
9. ஆஞ்சனேயா பிரிண்டர்ஸ் பிரைவேட் லிமிடெட்
10. ராம்ராஜ் அக்ரோ மில்ஸ் லிமிடெட்
11. சிக்னோரா பிசினஸ் என்டர்பிரைசஸ் பி.லிட்.,
12. லெக்ஸ் பிராபர்ட்டி டெவலப்மெண்ட் பி.லிட்.,
13. ரிவர்வே அக்ரோ ப்ராடக்ட்ஸ் பி.லிட்.,
14. மீடோ அக்ரோ பார்ம்ஸ் பி.லிட்., 5
15. இன்டோ டோஹா கெமிக்கல்ஸ் மற்றும் பார்மசூட்டிக்கல்ஸ் லிட்.
16. ஏ.பி. விளம்பரச் சேவைகள்
17. விக்னேஸ்வரா பில்டர்ஸ்
18. லக்ஷ்மி கன்ஸ்ட்ரக்சன்ஸ்
19. கோபால் புரோமோட்டர்ஸ்
20. சக்தி கன்ஸ்ட்ரக்சன்ஸ்
21. நமசிவாயா வீட்டு வசதி மேம்பாடு
22. அய்யப்பா சொத்து மேம்பாடு
23. சீ என்கிளேவ்
24. நவசக்தி ஒப்பந்ததாரர்கள் மற்றும் கட்டுநர்கள்
25. ஏசியானிக் கன்ஸ்ட்ரக்சன்ஸ்
26. கிரீன் கார்டன் அபார்ட்மெண்ட்ஸ்
27. மார்பிள் மார்வல்ஸ்
28. வினோத் வீடியோ விஷன்
29. பேக்ஸ் யுனிவர்சல்
30. ப்ரஷ் மஷ்ரூம்ஸ் மற்றும்
31. கொடநாடு தேயிலை எஸ்டேட்
குறிப்பிடப்பட்ட
இந்த நிறுவனங்களில் 1.7.1991 முதல் 30.4.1996 வரை நிலம், எந்திரம்,
கட்டிடம் போன்ற சொத்துக்கள் வாங்கிச் சேர்ப்பதைத் தவிர, ஒரு வணிக
நிறுவனத்தில் சாதாரணமாக நடைபெற வேண்டிய எந்தக் காரியங்களும் நடைபெறவில்லை.
இந்த நிறுவனங்கள் மூலம் வருமான வரி அறிக்கைகள் எதுவும் தாக்கல்
செய்யப்படவில்லை. இந்த நிறுவனங்கள் குறித்து விற்பனை வரி மதிப்பீடுகளும்
செய்யப்படவில்லை. ஜெயலலிதாவும்; 1987-88ஆம் ஆண்டு முதல் 1992 நவம்பர் வரை
வருமான வரி அறிக்கை தாக்கல் செய்யவில்லை.
1.7.1991க்குப்
பின் அசையும் மற்றும் அசையாச் சொத்துக்கள் ஜெயலலிதா பெயரில் மட்டுமின்றி
மற்ற மூவர் பெயரிலும்; அவர்கள் பெயரில் தொடங்கப்பட்ட நிறுவனங்கள் பெயரிலும்
வாங்கப்பட்டன. 4 பேரின் வங்கிக் கணக்குகளையும் பரிசீலனை செய்ததில்
அவர்களுடைய வருவாய்க்கு மீறிய வகையில் பல்வேறு கணக்குகளில் அடிக்கடி தொகை
வரவு வைக்கப்பட்டிருந்தது. சட்ட விரோதமாக
சொத்துக்களை
வாங்குவதற்காக ஒரு கணக்கிலிருந்து மற்றொரு கணக்குக்கு அடிக்கடி பணம்
மாற்றப்பட்டது. இவை ஜெயலலிதா ஆட்சியில் இருந்த காலத்தில் நடந்ததாலும்,
ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் ஒரே வீட்டில் இருந்ததாலும்
அந்தச் சொத்துக்கள் முழுவதும் ஜெயலலிதாவினாலேயே உண்மையில் வாங்கப்பட்டதாக
நிரூபிக்கப்பட்டுள்ளது.
மேலும்
பொது ஊழியரான ஜெயலலிதாவும், அவருடைய சகாக்களான மற்ற மூவரும் குற்றச்
சதியில் ஈடுபட்டு, ஜெயலலிதா பெயரிலும் மற்றவர்கள் பெயரிலும்அவர்கள்
நிறுவனங்கள் பெயரிலும் 66 கோடியே 65 லட்சத்து 20 ஆயிரத்து 395 ரூபாய்
அளவுக்கு சொத்துக்கள் வாங்கிக் குவிக்கப்பட்டன. இது அவர்களுடைய வருவாய்க்கு
மீறிய சொத்தாகும்.
அரசு
வழக்கறிஞர் தரப்பின்படி, 1.7.1991 முதல் 30.4.1996 வரை வாடகை வருவாய்,
வங்கிக் கணக்குகள் மற்றும் இதர டெபாசிட்டுகளில் பெற்ற வட்டி, அவராலும் மற்ற
மூவராலும் பெறப்பட்ட விவசாய வருமானம், கடன்கள் மற்றும் முதலமைச்சர் என்ற
முறையில் பெற்ற சம்பளம் எல்லாம் சேர்த்து 9 கோடியே 34 இலட்சத்து 26
ஆயிரத்து 54 ரூபாய் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
அதேபோல்,
இந்தக் காலக் கட்டத்தில் ஜெயலலிதாவும் மற்றவர்களும் கடனுக்கு வட்டி,
திருப்பிச் செலுத்திய கடன் மற்றும் இதர செலவுகளில் 11 கோடியே 56 இலட்சத்து
56 ஆயிரத்து 833 ரூபாய் செலவழித்ததாகக் கணக்கிடப்பட்டது. இவ்வாறு 30.4.1996
அன்று பொது ஊழியர் என்ற முறையில் ஜெயலலிதாவுக்குரிய வருவாய்க்கு அதிகமாக
66,65,20,395 ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் பெற்றுள்ளார். லஞ்ச ஒழிப்புச்
சட்டத்தின்படி இது தண்டனைக்குரிய குற்றமாகும்.
அன்றைய
ஜனதா கட்சித் தலைவர் டாக்டர் சுப்பிரமணியம் சுவாமி அவர்கள் தமிழக
ஆளுநரிடம் அளித்த புகார் மனுவின் காரணமாக ஜெயலலிதாவுக்கு எதிரான இந்த
வழக்கு ஆரம்பமானது. 14.6.1996 அன்று சென்னை முதன்மை செசன்ஸ் மற்றும் தனி
நீதிபதி முன்னிலையில் ஜெயலலிதா முதலமைச்சராக வந்தபிறகு வருவாய்க்கு
அதிகமாகச் சொத்து சேர்த்திருப்பதாகப் புகார் ஒன்றை சுப்பிரமணியம் சுவாமி
தாக்கல் செய்தார். அந்தப் புகாரை நீதிபதி வழக்காகப் பதிவு செய்து, அதுபற்றி
விசாரணை நடத்தி 2 மாதங்களில் அறிக்கை அளிக்கும்படி மூத்த ஐ.பி.எஸ்.
அதிகாரி திருமதி லத்திகா சரணுக்கு 21.6.1996 அன்று உத்தரவிட்டார்.
அதன்படி
லத்திகா சரண் பல்வேறு வங்கிகள் மற்றும் பதிவுத் துறை அலுவலகங்களிலும்,
நிறுவனங்கள், பதிவாளர் அலுவலகத்திலும் அறிக்கைகள் பெற்று விசாரணை நடத்தி
வந்தார். இந்த உத்தரவை எதிர்த்து ஜெயலலிதாவும், சசிகலாவும் சென்னை
உயர்நீதிமன்றத்தை அணுகியதால் 14.08.1996 உத்தரவுப்படி சிறிது காலத்திற்குப்
புலனாய்வு நிறுத்தப்பட்டது. பின்னர் உயர்நீதிமன்றமே, 4.9.1996 அன்று தடையை
நீக்கி விசாரணையைத் தொடர ஒப்புதல் அளித்தது. ஜெயலலிதா தனக்கு முன்ஜாமீன்
அளிக்க வேண்டுமென்று கோரியபோது அதனை நிராகரித்த உயர்நீதிமன்றம்,
“ஜெயலலிதா மீது சாட்டப்பட்டுள்ள ஊழல் வழக்கிற்கு அடிப்படை ஆதாரம் உள்ளது.
அரசியல் பகை காரணமாக இவ்வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது என்று கூறுவது
சரியல்ல” என்று தீர்ப்பளித்தது.
4.9.1996இல்
சென்னை உயர்நீதிமன்றம்; லஞ்ச ஒழிப்புத் துறை ஆணையர் விசாரிக்க அனுமதி
அளித்ததால்; லஞ்ச ஒழிப்புத்துறை ஆணையர் திரு. வி.சி. பெருமாள், அப்போது
லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் எஸ்.பி.யாக இருந்த திரு. நல்லம்ம நாயுடுவை இந்த
வழக்கை விசாரிக்கும்படி உத்தரவிட்டார். பின்னர் ஐ.ஜி.யாக பதவி உயர்வு
பெற்ற வி.சி.பெருமாள் ஜெயலலிதாவுக்கு எதிரான முதல் தகவல் அறிக்கையை
18.9.1996 அன்று தாக்கல் செய்தார். திரு.நல்லம்ம நாயுடு புலன் விசாரணையைத்
தொடங்கி, சோதனைக்கான வாரண்டுகளோடு, ஜெயலலிதாவின் வீடுகளிலும் சோதனைகள்
நடத்தி, ஏராளமான சாட்சியங்களையும் ஆதாரங்களையும் சேகரித்தார்.
ஜெயலலிதாவுடன் மற்ற மூவரையும் வழக்கில் சேர்க்க அனுமதி கோரி 22.01.1997
அன்று தனி நீதிமன்றத்தில் விண்ணப்பம் தாக்கல் செய்தார். முறைப்படி வழக்கு
விசாரணையை முடித்து ஜெயலலிதா மீதான குற்றப் பத்திரிகை 4.6.1997 அன்று தனி
நீதிமன்றமான சென்னை கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு
பதிவு செய்யப் பட்டது.
சென்னை
தனி நீதிபதி 5.6.1997 அன்று குற்றங்களைப் பரிசீலித்து குற்றம் சாட்டப்பட்ட
நால்வருக்கும் சம்மன் அனுப்ப உத்தரவிட்டார். குற்றப் பத்திரிகையுடன்
ஜெயலலிதா தவிர்த்த மூவருக்கும் அவர்கள் கோரிக்கையின் பேரில் தமிழ்
மொழிபெயர்ப்பையும் அளிக்க உத்தரவிட்டார். அந்த வழக்கிலிருந்து விடுவிக்கக்
கோரி குற்றஞ்சாட்டப்பட்டோர் தாக்கல் செய்த மனுக்களை 21.10.1997 அன்று
தள்ளுபடி செய்து குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்தார்.
ஜெயலலிதா
தரப்பினர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் தனி நீதிமன்றம்
அமைக்கப்பட்டதையும், தனி நீதிபதி நியமனம் செய்யப்பட்டதையும் எதிர்த்து
ஜெயலலிதா தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். இந்திய
அரசமைப்புச் சட்டத்தைப் பின்பற்றியே விசாரணைக்கான ஏற்பாடுகள்
செய்யப்பட்டுள்ளன என்பதால், ஜெயலலிதா தரப்பினரின் வழக்கு தள்ளுபடி
செய்யப்பட்டது. அதனை எதிர்த்து ஜெயலலிதா தரப்பினர் உச்சநீதி மன்றத்தில்
தாக்கல் செய்த மேல்முறையீடும், 14-5-1999 அன்று நீதிபதிகள் ஜி.டி.நானாவதி,
எஸ்.பி.குர்துக்கர் ஆகியோரால் தள்ளுபடி செய்யப்பட்டது. தனி நீதிமன்றம்
அமைக்கப்பட்டதும், தனி நீதிபதி நியமனம் செய்யப்பட்டதும் இந்திய அரசமைப்புச்
சட்டத்தின்படி சரியானது என்பது நிலைநாட்டப்பட்டது.
(தொடரும்) அன்புள்ள, nakkheeran.in
மு.க.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக