சனி, 25 அக்டோபர், 2014

SSR புராணப்படங்களில் நடிக்க மாட்டேன் என்று வாய்ப்புக்களை மறுத்ததால் இலட்சிய நடிகர் ஆனார் !

1950களின் இறுதியில் ஏரிக்கரை, ஆற்றங்கரை, வாய்க்கால்கரை, குளத்தங்கரை, அக்கரை, இக்கரை என எல்லா இடங்களிலும் இளைஞர்கள் பாடிய இந்தப் பாடலைக் கேட்டு பெண்கள் மனசுக்குள் சிரித்தார்கள். பெருசுகளோ, “என்ன பாட்டுடா இது?” என்று கோபப்பட்டார்கள். ‘முதலாளி’ படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலுக்கு வாயசைத்தபடி திரையில் தோன்றியவர் எஸ்.எஸ்.ஆர் என சுருக்கமாக அழைக்கப்படும் எஸ்.எஸ்.ராஜேந்திரன். நடிகர் திலகம் சிவாஜிகணேசன் அறிமுகமான அதே பராசக்தி படம்தான் எஸ்.எஸ்.ஆரையும் தமிழ்த் திரையுலகுக்கு அறிமுகம் செய்தது. பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு சங்கத்தை உருவாக்கி அவர்களுக்கான அரசியல் உரிமைகளைக் கோரும் கதாபாத்திரம். கலைஞரின் வசனத்தில் சிவாஜிக்குப் போனதுபோக எஸ்.எஸ்.ஆருக்கும் மிச்ச சொச்சம் இருந்தது.
சேடபட்டி சூரியநாராயண(தேவர்) ராஜேந்திரன் என்பதன் சுருக்கம்தான் எஸ்.எஸ்.ஆர். 1928ல் பிறந்தவர். 6ஆம் வகுப்பு படிக்கும்போதே நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். நாடகக் காவலர்களான டி.கே.எஸ். சகோதரர்களின் நாடகக் கம்பெனியில் நல்லநல்ல வேடங்களில் எஸ்.எஸ்.ஆர் நடித்துக்கொண்டிருந்தபோது அவருக்கு திராவிடர் இயக்கத் தலைவர்களான பெரியார், அண்ணா ஆகியோரின் அறிமுகம் கிடைத்தது. திராவிட இயக்கத்துக்கு ஓர் இலட்சிய நடிகர் கிடைத்தார். முன்பு   ந்திரா கொண்டுவந்த மன்னர் மானிய ஒழிப்பு மசோதாவை இவரின் ஒரே ஒரு வோட்டு ராஜ்யசபாவில்  தோற்கடித்தது அதனாலேயே மத்திய ஆட்சியை இந்திரா அம்மையார் கலைத்தார் அதன் பின் நடந்த தேர்தலில் காமராஜ் மொரார்ஜி போன்றோரின் சிண்டிகேட் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது , இந்திராவுக்கும் அதிகார வெறி உச்சத்துக்கு போனது .திமுகவில் இருந்து கொண்டு வயிற்று போக்கு காரணம் காட்டி கட் அடித்ததால் இவரது நாணயம் கேள்விக்குறியானது வரலாறு


எஸ்.எஸ்.ஆர். திரைப்பட முயற்சிகளைத் தொடர்ந்தார். அபிமன்யு படத்தில் நடிக்கக் கிடைத்த வாய்ப்பு நழுவிப்போக, ஆண்டாள் என்ற படத்தில் ஜி.ராமநாதன் இசையில், ‘இன்ப உலகிலே மன்மதன் பூங்கணை’ என்ற பாடலைப் பின்னணிப் பாடகராகப் பாடினார் எஸ்.எஸ்.ஆர்.

பிறகுதான், 1952ல் பராசக்தியில் சிவாஜியின் மூத்த சகோதரர்களில் ஒருவரான ஞானசேகரன் பாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கலைஞரின் வசனத்தில் உருவான மனோகரா படத்திலும் எஸ்.எஸ்.ஆர் நடித்தார். திருவாரூர் தங்கராசுவின் கதை வசனத்தில் எம்.ஆர்.ராதா வெளுத்துக்கட்டிய ‘ரத்தக் கண்ணீர்’ படத்தில் எஸ்.எஸ்.ஆருக்கு முக்கிய பாத்திரம் கிடைத்தது. அறிஞர் அண்ணாவின் ‘சொர்க்கவாசல்’ படத்திலும் நடித்தார். அண்ணா கதை, கலைஞரின் வசனம், சிவாஜி கதாநாயகன் என்ற பலமான கூட்டணியுடன் வெளிவந்த ‘ரங்கோன் ராதா’ படத்திலும் அவர் நடித்தார். ‘பா’ வரிசைப் படங்களைத் தந்த பீம்சிங்கின் முதல் படமான ‘அம்மையப்பன்’ படத்தில் (கலைஞரின் வசனம்) எஸ்.எஸ்.ஆர் நடித்தார். அடுத்து வந்த ‘ராஜா ராணி’ படத்திலும் கலைஞர் வசனத்தில் சிவாஜியுடன் நடித்தார்.


ஆலயமணி, தெய்வப்பிறவி, பச்சைவிளக்கு, கைகொடுத்த தெய்வம், பழனி, சாந்தி எனப் பல படங்களில் சிவாஜியுடன் சேர்ந்த நடித்த எஸ்.எஸ்.ஆர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடன் காஞ்சித்தலைவன் (கலைஞர் வசனம்), ராஜா தேசிங்கு போன்ற படங்களில் நடித்தார். எனினும், 1958ல் வெளியான ‘முதலாளி’ படத்தின் வெற்றிதான் எஸ்.எஸ்.ஆரை தமிழ்த்திரையுலகின் கதாநாயகர்கள் வரிசையில் நிலைநிறுத்தியது. இது முக்தா சீனிவாசன் இயக்கிய முதல் படம். இதில்தான் நடிகை தேவிகா அறிமுகமானார். 

எஸ்.எஸ்.ஆருக்கு குமுதம், தைபிறந்தால் வழிபிறக்கும், சாரதா உள்ளிட்ட வெற்றிப்படங்கள் தொடர்ந்தன. தை பிறந்தால் வழி பிறக்கும் படத்தின் வசூலில் கட்டப்பட்டதுதான் சென்னை சாலிகிராமத்தில் அமைந்த அருணாசலம் ஸ்டூடியோ. அன்றைய முன்னணி நட்சத்திரங்களான பத்மினி, சரோஜாதேவி போன்றோர் எஸ்.எஸ்.ஆருக்கு ஜோடியாக நடித்தனர். 

எஸ்.எஸ்.ஆரின் திரைப் பயணத்தில் குறிப்பிடத்தக்க படங்களில் முக்கியமானது, ‘பூம்புகார்’. தமிழின் ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான-இளங்கோவடிகள் எழுதிய சிலப்பதிகாரத்தை திரைவடிவமாக்கியிருந்தார் கலைஞர் மு.கருணாநிதி. அதில் கோவலனாக எஸ்.எஸ்.ஆரும், கண்ணகியாக விஜயகுமாரியும் நடித்தனர். நிஜவாழ்விலும் இவர்கள் இணையாயினர். 


நடிகராக மட்டும் இல்லாமல் பாடல், திரைக்கதை எழுதுவது எனப் படைப்பாளியாகவும் தன்னை வெளிப்படுத்திய எஸ்.எஸ்.ஆர், மூன்று படங்களை இயக்கியிருக்கிறார். செல்வி.ஜெயலலிதாவுடன் சேர்ந்து நடித்த மணிமகுடம் படம் எஸ்.எஸ்.ஆரின் இயக்கத்தில் வெளியானது. அவர் இயக்கிய ‘தங்கரத்தினம்’ படத்தில் அறிஞர் அண்ணா உள்ளிட்ட தி.மு.க தலைவர்கள் பங்கேற்ற மாநாட்டின் காட்சிகளை இணைத்திருந்தார். அல்லி என்ற படத்தையும் அவர் இயக்கினார். 

வெள்ளையரை எதிர்த்து போர் செய்து வீரமரணம் அடைந்த மருது சகோதரர்களின் வாழ்க்கையை ‘சிவகங்கை சீமை’ என்ற பெயரில் திரைப்படமாக எடுத்தார் கவிஞர் கண்ணதாசன். அந்தப் படத்தில் எஸ்.எஸ்.ஆர்தான் நாயகன். எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகியோரை வைத்துப் பல வெற்றிப்படங்களை இயக்கிய கே.சங்கரின் முதல் படம் சிவகங்கை சீமைதான். அண்ணா, கலைஞர், கவிஞர் கண்ணதாசன் போன்ற ஜாம்பவான்களின் வசனங்களை மிகத் தெளிவாகவும் ஏற்றஇறக்கத்துடனும் உச்சரிக்கக்கூடியவர் எஸ்.எஸ்.ஆர். இனிமையும் அழகும் கலந்த கம்பீரமான உச்சரிப்பு அவரிடமிருந்து வெளிப்படும். 


தமிழ்ப்படங்கள் வண்ணமயமான காலத்தில் எஸ்.எஸ்.ஆரின் படவாய்ப்புகள் குறைந்தன. எனினும் அவ்வப்போது சில படங்களில் தலைகாட்டுவது அவரது வழக்கம். விஜயகாந்த் நடித்த வல்லரசு, சரத்குமார் நடித்த ரிஷி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மத்திய-மாநில அரசுகளின் விருதுகளும் அவருக்கு கிடைத்துள்ளன. கலைமாமணி விருது, எம்.கே.தியாகராஜபாகவதர் விருது(1999) ஆகியவற்றையும் தமிழக அரசு அளித்துள்ளது. தென்னிந்திய நடிகர் சங்கத்தை உருவாக்கியதில் முக்கிய பங்கு வகித்த எஸ்.எஸ்.ஆர், அதன் தலைவராக மூன்று முறை பதவி வகித்தவர்.

திராவிட இயக்கக் கொள்கைகளை ஏற்றுக்கொண்டு, தி.மு.க உறுப்பினராக செயல்பட்ட எஸ்.எஸ்.ஆர் தனது நடிப்பிலும் அதனை பிரதிபலித்தார். புராண படங்களில் நடிப்பதைத் தவிர்த்தார். திரையில் வாய்ப்பு கிடைத்த இடங்களில் எல்லாம் திராவிட இயக்கக் கொள்கைகளைப் பேசினார். அதற்கேற்ப காட்சிகளை அமைத்தார். கட்சி நிதிக்காக நாடகங்களை நடத்தினார். திரைப்படங்கள் மூலமும் நிதியுதவி அளித்தார். அதனால்தான் அவரை இலட்சிய நடிகர் என்கிறார்கள். 

இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு நடிகர் தேர்தல் களத்தில் நின்று மக்களின் வாக்குகளைப் பெற்று சட்டமன்றத்திற்கு சென்ற சாதனையை முதன்முதலில் நிகழ்த்தியவர் எஸ்.எஸ்.ஆர்தான். 1962ல் தேனி தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆனார். அதன்பின்னர், தி.மு.க சார்பில் நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை (ராஜ்யசபா) உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 


ஒருகட்டத்தில் தி.மு.கவிலிருந்து விலகி, எம்.ஜி.ஆர் தலைமையிலான அ.தி.மு.கவில் எஸ்.எஸ்.ஆர். இணைந்தார். 1980 தேர்தலில் ஆண்டிப்பட்டி தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1984ல் எம்.ஜி.ஆர் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் எஸ்.எஸ்.ஆர் போட்டியிடுவதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. (ஆண்டிப்பட்டி தொகுதியில் எம்.ஜி.ஆர். போட்டியிட, எஸ்.எஸ்.ஆருக்கு வேறு தொகுதியை கட்சி நிர்வாகிகள் ஒதுக்கித்தரவில்லை). அதனால் அவர் அ.தி.மு.கவிலிருந்து விலகி ‘எம்.ஜி.ஆர்-எஸ்.எஸ்.ஆர் கழகம்’ என்ற கட்சியைத் தொடங்கி தேர்தல் களத்தை சந்தித்தார். அந்தத் தேர்தலும் அதனைத் தொடர்ந்து அரசியலிலும் அவருக்கு மோசமான அனுபவங்களே கிடைத்தன. நேரடி அரசியலிலிருந்து ஒதுங்கிக்கொண்ட எஸ்.எஸ்.ஆர், திராவிட இயக்கக் கொள்கையாளராகவே வாழ்க்கையைத் தொடர்ந்தார். 

நேரில் சந்திக்கும் இளைய தலைமுறையினரிடம் தனது சினிமா அனுபவங்கள், அரசியல் அனுபவங்கள் ஆகியவற்றை இனிமையும் தனித்துவமும் நிறைந்த கம்பீரக் குரலால் பகிர்ந்துகொண்டு வந்த இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர்  சென்னையில் உடல்நலக் குறைவால் காலமானார்.

-கோவி.லெனின் nakkheeran,in

கருத்துகள் இல்லை: