திங்கள், 20 அக்டோபர், 2014

தேர்தல் முடிவுகள் ! முதல்வர் பதவிக்கு பாஜகாவில் பலத்த போட்டி !

மும்பை : மகாராஷ்டிரா, அரியானா ஆகிய மாநில சட்டசபை தேர்தல்களில் பா.ஜ., வெற்றி பெற்றுள்ளதை அடுத்து, இரண்டு மாநிலங்களிலும் முதல்வர் பதவியை பெறுவதில், பா.ஜ., தலைவர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது.அரியானாவில், பா.ஜ., தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று, முதல் முறையாக ஆட்சி அமைக்கவுள்ளது. அதே போல், மகாராஷ்டிராவில், பெரும்பான்மை கிடைக்காவிட்டாலும், மற்ற கட்சிகளின் ஆதரவுடன் அக்கட்சி ஆட்சி அமைக்கவுள்ளது.இதன் அடுத்த கட்டமாக, இரண்டு மாநிலங்களிலும் முதல்வர் பதவி யாருக்கு கிடைக்கும் என்ற பரபரப்பு எழுந்துள்ளது. தேர்தலுக்கு முன் வரை, அரியானாவில், பா.ஜ.,வுக்கு பெரிய அளவில் செல்வாக்கு இல்லை. 2009ல், நடந்த சட்டசபை தேர்தலில், மொத்தமுள்ள, 90 இடங்களில், பா.ஜ., நான்கு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது. இதனால், இங்கு பா.ஜ.,வுக்கு பெரிய அளவில் மக்கள் செல்வாக்கு மிக்க தலைவர்கள் இல்லை.


அரியானா மாநில பா.ஜ., தலைவர்களான, மத்திய அமைச்சர் கிரிஜன் பால் குஜார், மனோகர் கத்தார், அபிமன்யூ, ராம்விலாஸ் சர்மா, ஓம்பிரகாஷ் தன்கர் ஆகியோர், முதல்வர் பதவிக்கான போட்டியில் உள்ளனர். இவர்களில் யாராவது ஒருவர், முதல்வராக தேர்வு செய்யப்பட வாய்ப்புஉள்ளது. மகாராஷ்டிராவை பொறுத்தவரை, சிவசேனா கூட்டணியில் தான், 25 ஆண்டுகளாக பா.ஜ., அங்கம் வகித்தது. இதனால், இந்த கூட்டணி வெற்றி பெற்றால், சிவசேனாவை சேர்ந்தவரே முதல்வராக தேர்வு செய்யப்படும் வழக்கம் இருந்தது.பா.ஜ., தரப்பில், பிரமோத் மகாஜன், கோபிநாத் முண்டே ஆகியோர், மக்கள் செல்வாக்கு மிக்க தலைவர்களாக இருந்தனர். இருவருமே காலமாகி விட்டதால், அந்த கட்சிக்கு குறிப்பிட்டு கூறும் வகையிலான தலைவர்கள் இல்லை.இரண்டாம் கட்ட தலைவர்களான, கோபிநாத் முண்டே மகள் பங்கஜா மற்றும் தேவேந்திர பட்நாவிஸ், ஏக்நாத் கட்சே ஆகியோரின் பெயர், முதல்வர் பதவிக்கு அடிபடுகிறது.இந்த இரண்டு மாநிலங்களுக்கும் முதல்வர் யார் என்பதை, பா.ஜ., பார்லிமென்ட் குழு விரைவில் முடிவு செய்ய உள்ளது. அதிர்ஷ்ட காற்று யார் பக்கம் வீசப் போகிறது என, இன்னும் ஓரிரு நாட்களில் தெரிந்துவிடும்.*மகாராஷ்டிராவில், 1990ல் நடந்த சட்டசபை தேர்தலுக்கு பின் எந்த கட்சியும், 100 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்றது இல்லை. தற்போது, 123 தொகுதிகளில் வெற்றி பெற்றதன் மூலம், இந்த தடையை தகர்த்து, பா.ஜ., சாதனை படைத்துள்ளது.
*காங்கிரசுக்கு ஏற்பட்ட படு தோல்வியை அடுத்து, மகாராஷ்டிரா மாநில காங்., தலைவர் மாணிக்ராவ் தாகூர், தன் பதவியை ராஜினாமா செய்தார்.
*மகாராஷ்டிரா முன்னாள் முதல்வரும், காங்., மூத்த தலைவருமான நாராயண் ரானே தோல்வியடைந்தார்.
*மகாராஷ்டிராவின் நாசிக் நகரத்தில் உள்ள மூன்று தொகுதிகளையும், புனே நகரில் உள்ள எட்டு தொகுதிகளையும் பா.ஜ., கைப்பற்றியது.
*மகாராஷ்டிராவின் விதர்பா பகுதியில், மொத்தம் உள்ள, 62 தொகுதிகளில், 42 தொகுதிகளில் பா.ஜ., வெற்றி பெற்றது.
*பா.ஜ.,மூத்த தலைவரான, மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜின் தங்கை வந்தனா, அரியானாவில், பா.ஜ., சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
*பா.ஜ., வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள ராகுல்,''மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக, மக்கள் பா.ஜ.,வுக்கு ஓட்டளித்துள்ளனர்,'' என, கூறியுள்ளார்.
*மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் பிரித்விராஜ் சவான், அரியானா முதல்வர் பதவியிலிருந்து விலகவுள்ள பூபிந்தர் சிங் ஹூடா ஆகியோர், தோல்விக்கு பொறுப்பேற்பதாக தெரிவித்துள்ளனர்.
*சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, பா.ஜ., தேர்தல் வெற்றி குறித்து, பிரதமர் மோடி, பா.ஜ., தலைவர் அமித் ஷாவுக்கு போன் செய்து வாழ்த்து தெரிவித்தார்.
*தேர்தல் பிரசாரத்தின் போது, வடமாநிலத்தோருக்கு எதிராக பேசிய, எம்.என்.எஸ்., கட்சித் தலைவர் ராஜ் தாக்கரேவுக்கு தேர்தல் கமிஷன் நேற்று கண்டனம்
தெரிவித்தது.
*முதல்வர் யார் என்பதை முடிவு செய்ய, ராஜ்நாத் சிங், ஜே.பி.நட்டாவை மகாராஷ்டிராவுக்கும், வெங்கைய்யா நாயுடு, தினேஷ் சர்மாவை அரியானாவுக்கும், மேலிட பார்வையாளர்களாக அனுப்பி வைக்க பா.ஜ., முடிவு செய்துள்ளது.

சிவசேனாவை வழிக்கு கொண்டு வர தந்திரமா?
மகாராஷ்டிராவில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை என தெரியவந்ததும், தேசியவாத காங்., மூத்த தலைவர் பிரபுல் படேல், தானாகவே முன்வந்து, ''பா.ஜ.,வுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிக்க தயார்,'' என, தெரிவித்தார். பா.ஜ.,வுக்கு ஆதரவு அளிப்பதற்கு, சிவசேனாவை வழிக்கு கொண்டு வருவதற்காகவே, தேசியவாத காங்., தலைவர்களை விட்டு, இதுபோன்ற அறிக்கையை பா.ஜ., தலைவர்கள் வெளியிட வைத்ததாக, அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

பா.ஜ.,வைச் சேர்ந்த ஒவ்வொரு தொண்டரும், பெருமைப்படத் தக்க வெற்றி கிடைத்துள்ளது. வெற்றிக்காக கடுமையாக உழைத்த அனைவருக்கும் நன்றி. இது, வரலாற்று சிறப்புமிக்க வெற்றி. அரியானா, மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு சேவை செய்ய, எங்களுக்கு வாய்ப்பளித்த
மக்களுக்கு நன்றி.
நரேந்திர மோடி
பிரதமர் - பா.ஜ.,


மகாராஷ்டிராவில் தற்போதுள்ள சூழ்நிலையில், பா.ஜ.,வால் மட்டுமே ஆட்சி அமைக்க முடியும். மக்களின் நலன் கருதி, பா.ஜ., ஆட்சி அமைக்க, எங்கள் கட்சி வெளியில் இருந்து ஆதரவு அளிக்கும். மாநிலத்தில் நிலையான ஆட்சி அமைய வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.
பிரபுல் படேல்
மூத்த தலைவர்- - தேசியவாத காங்.,


ஆட்சி அமைக்க ஆதரவு தரும்படி, பா.ஜ., தரப்பில் எங்களை அணுகினால், அதுகுறித்து பரிசீலிப்போம். ஆதரவு தருவதற்கு, எங்கள் தரப்பிலிருந்து எந்த நிபந்தனையும் அல்லது கோரிக்கையும் வைக்கவில்லை. எங்களின் ஆதரவு தேவையில்லை என, அவர்கள் நினைத்தால், அதனால், எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை.
உத்தவ் தாக்கரே
தலைவர் - சிவசேனா dinamalar.com

கருத்துகள் இல்லை: