புதன், 22 அக்டோபர், 2014

பாஜகவின் செயற்கை அலை வேகமாகவே அடங்குவதை காட்டிய இடைத்தேர்தல்கள் !

மோடி - ஆதித்யநாத்மோடி அலை என்பது ஆளும் வர்க்க ஊடகங்களால் திட்டமிட்டே உருவாக்கப்பட்ட ஒரு மாயைதான் என்பதை சமீபத்திய உ.பி., இராஜஸ்தான், குஜராத் மாநில இடைத்தேர்தல் முடிவுகள் முகத்திலறைந்தாற்போல நிரூபித்திருக்கின்றன. உ.பி. மாநிலத்தில் பதினொரு தொகுதிகளில் ஒன்பதில் சமாஜ்வாதி கட்சியும், இராஜஸ்தானில் நான்கில் மூன்று தொகுதிகளில் காங்கிரசும், குஜராத்தில் ஒன்பதில் மூன்று தொகுதிகளில் காங்கிரசும் வெற்றி பெற்றிருக்கின்றன.
உ.பி மாநிலத்திலுள்ள கோராக்பூரில் கடந்த ஜனவரி மாதம் நடந்த இந்து மதவெறியர்களின் பேரணியில் கலந்து கொண்ட நரேந்திர மோடி மற்றும் யோகி ஆதித்யநாத் (கோப்புப் படம்)
பா.ஜ.க. நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற வாக்குகளைக் காட்டிலும் உ.பி யில் 10%, ராஜஸ்தானில் 11%, குஜராத்தில் 11.5% வாக்குகள் குறைந்திருக்கின்றன. மோடியின் வாரணாசி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ரோகானியா தொகுதியில், நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற வாக்குகளைக் காட்டிலும் இரு மடங்கு வாக்குகளை சமாஜ்வாதி பெற்றிருக்கிறது. அதேபோல, மோடி வெற்றி பெற்ற குஜராத்தின் வதோதரா தொகுதியிலும் பா.ஜ.க.வின் வாக்குகள் கணிசமாக வீழ்ச்சி அடைந்திருக்கின்றன.

இது மட்டுமல்ல, கடந்த மே மாதம் மோடி பதவியேற்றவுடனேயே உத்தர்கண்டில் நடைபெற்ற இடைத்தேர்தலில் மூன்று தொகுதிகளிலும் காங்கிரசு வெற்றி பெற்றிருக்கிறது. அதனைத் தொடர்ந்து பிகாரில் நடைபெற்ற இரண்டாவது சுற்று இடைத்தேர்தலில் 10-இல் 6 தொகுதிகளை லாலு-நிதிஷ் கூட்டணி கைப்பற்றியிருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்கு முற்றுரிமை கொண்டாடிய மோடியும் அமித் ஷாவும் அடுக்கடுக்கான இந்த தோல்விகள் ஏன் என்பதற்குப் பதிலளிக்கவில்லை.
உ.பி.யில் இந்து மதவெறியைத் தூண்டுவதன் மூலம் மட்டும்தான் ஓட்டுக்களை அறுவடை செய்ய முடியும் என்ற திட்டத்தின் அடிப்படையில்தான், மதவெறிப் பேச்சுக்குப் புகழ் பெற்ற தாக்கூர் சாதித் தலைவனான யோகி ஆதித்யநாத் தேர்தல் பிரச்சாரத்திற்கு அமித் ஷாவினால் களமிறக்கப்பட்டார். ஆதித்யநாத் தாக்கூர் சாதித்தலைவன் என்பதால், பார்ப்பன – தாக்கூர் சாதிகளுக்கு இடையிலான முரண்பாடு காரணமாக, பத்து சதவீதம் பார்ப்பனர்களின் வாக்குகளை இழந்து விடுவோம் என்று பா.ஜ.க. அஞ்சியது. எனவே, முஸ்லிம்களுக்கு எதிராகப் பார்ப்பனர்களின் சாதி உணர்வைத் தூண்டி விட்டு அவர்களுக்கு “இந்து மத உணர்வை” வரவழைத்தது. முஸ்லிம் இளைஞர்கள் பிராமணப் பெண்களைத் திட்டமிட்டே காதலிப்பதாகவும், புரோகித வர்க்கத்தை அழித்துவிட்டால், இந்து மதத்தை வேரோடு அழித்துவிட முடியும் என்ற திட்டத்துடன்தான் முஸ்லிம் அமைப்புகளால் இந்த லவ் ஜிகாத் நடத்தப்படுகிறது என்றும் “இந்து ஜன் ஜாக்ருதி சமிதி” என்ற அமைப்பு பிரச்சாரம் செய்தது. எவ்வளவு கீழ்த்தரமான கிரிமினல் முறைகளைக் கையாள்வதற்கும் பாரதிய ஜனதா தயங்காது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே.
இன்னொருபுறம் பகுஜன் சமாஜ் கட்சி தேர்தலில் போட்டியிடாததைப் பயன்படுத்திக் கொண்டு, அதன் வாக்குகளைத் தன் பக்கம் இழுப்பதற்கும், மாயாவதியை ஆதரிக்காத தலித் உட்சாதியினரைக் கவர்வதற்கும் பாரதிய ஜனதா முயற்சி மேற்கொண்டது. அனைத்துக்கும் மேலாக, “இந்து சமூகத்தைப் பிளவுபடுத்தும் சதியே இட ஒதுக்கீடு” என்று கூறி இட ஒதுக்கீடு கொள்கையைத் தீவிரமாக எதிர்த்து வந்த ஆர்.எஸ்.எஸ்.இன் தலைவர் மோகன் பகவத், உ.பி.க்குச் சென்று சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டைத் தாங்கள் ஆதரிப்பதாக வலிந்து அறிவித்தார். இத்தனை தகிடுதத்தங்களுக்குப் பிறகும் உ.பி.யில் பாரதிய ஜனதாவால் வெற்றி பெற முடியவில்லை.
பஜ்ரங் தள் கும்பல்
முஸ்லீம்களுக்கு எதிராகப் பொய்யும் புனைசுருட்டும் கலந்து ஆர்.எஸ்.எஸ் கும்பலால் பிரச்சாரம் செய்யப்படும் “லவ் ஜிஹாத்” என்ற இந்து மதவெறித் திட்டத்தின் ஒரு பகுதியாக, உ.பி. மாநிலத்தின் முசாஃபர் நகரில் ஆர்ப்பாட்டம் நடத்தும் பஜ்ரங் தள் கும்பல்.
உ.பி. மாநிலத் தோல்வி மட்டுமல்ல, ஒட்டு மொத்தமாக கடந்த 3 இடைத்தேர்தல்களிலும் வெவ்வேறு வட இந்திய மாநிலங்களில் பாரதிய ஜனதா அடைந்திருக்கும் தோல்விகள் இரண்டு விசயங்களை நிரூபிக்கின்றன. முதலாவதாக, மோடியின் வளர்ச்சிப் பாதை பற்றிய ஊதி உப்பவைக்கப்பட்ட பிம்பத்திற்கு நாடாளுமன்றத் தேர்தலோடு காற்று இறங்கிவிட்டது. இரண்டாவதாக, ரயில் கட்டண உயர்வு, டீசல் விலை உயர்வு உள்ளிட்ட மறுகாலனியாக்க கொள்கை அடிப்படையிலான நடவடிக்கைகள், “நல்ல காலம் பொறக்குது” என்று உடுக்கடித்து வந்த மோடியின் குடுகுடுப்பைக்காரன் வேசத்தையும் கலைத்துவிட்டன. எனவே, தனது மதவெறி முகத்தை மறைத்துக் கொண்டு நல்லாட்சி என்று பேசி ஓட்டு வாங்குவது இயலாத காரியம் என்று ஆகிவிட்டதோடு, கூச்சநாச்சமற்ற கீழ்த்தரமான முறைகளில் மதவெறியைப் பயன்படுத்தித்தான் தேர்தலை எதிர்கொள்ள முடியும் என்பதை பா.ஜ.க. ஒப்புக் கொண்டிருப்பதையும் அதன் இடைத்தேர்தல் பிரச்சாரங்கள் நிரூபிக்கின்றன.
அதே நேரத்தில், மதவெறியையும்கூட வயாக்ராவைப் போலப் பயன்படுத்தி, தேர்தல் நேரத்திலெல்லாம் இந்து எழுச்சியை உருவாக்கிக் கொள்ள முடியாது என்பதையும் இத்தேர்தல் முடிவுகள் நிரூபித்திருக்கின்றன. புறக்கணித்து ஒதுக்கப்பட்டு பரிதாபத்துக்குரிய கிழவனைப் போல, 22 ஆண்டுகளாக கோயிலை எதிர்பார்த்து அயோத்தியில் காத்து நிற்கும் “குழந்தை இராமன்” இதற்கொரு சாட்சியமாக நிற்கிறார்.
பாஜக இந்துமதவெறிஇந்த இடைத்தேர்தல் தோல்விகளுக்கு, மோடியின் பிம்பத்தைக் காப்பாற்றுவதில் முனைந்து நிற்கும் கார்ப்பரேட் ஊடகங்களும், துக்ளக் உள்ளிட்ட பார்ப்பன பத்திரிகைகளும் வேறொரு கோணத்தில் பொழிப்புரை எழுதுகின்றன. நாட்டை வளர்ச்சிப் பாதையில் செலுத்துவதற்கு மோடி தீவிரமாக முயன்று கொண்டிருக்கும்போது, மோடிக்குத் தெரியாமலும் மோடிக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் விதத்திலும், உதிரியான சில இந்து அமைப்புகள் மதவெறி நடவடிக்கைகளில் ஈடுபட்டு, மோடியின் மீது மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையைக் குலைத்து தோல்வியைத் தேடித்தந்து விட்டதாக அவர்கள் கூறுகின்றனர்.
அதாவது, மதவெறியைத் தூண்டுவதற்கு ஆதித்யநாத்தை இறக்கிவிட்டது மோடிக்கே தெரியாது போலவும், அதற்கு அமித் ஷா மட்டுமே பொறுப்பு போலவும் சித்தரித்து, அமித் ஷாவின் ஞானகுருவான மோடியைத் தோல்விக்கான பொறுப்பிலிருந்து விடுவிக்கின்றனர். ஊழல்களுக்கு சசிகலாவைப் பொறுப்பாக்கிவிட்டு, ஜெயலலிதாவைப் பரிதாபத்துக்குரிய பிணையக்கைதியாகச் சித்தரிக்கும் அதே பார்ப்பனக் குயுக்திதான் இதுவும்.
தோல்விக்கான காரணம் “தேவையில்லாத” மதவெறி நடவடிக்கைகள் தானேயன்றி, ரயில் கட்டண உயர்வு, டீசல் உயர்வு போன்ற “தேவையான” மறுகாலனியாக்க நடவடிக்கைகள் அல்ல என்று கார்ப்பரேட் ஊடகங்கள் “எங்கப்பன் குதிருக்குள் இல்லை” என்ற கதையாக வலிந்து ஆஜராகி விளக்கமளிக்கின்றன. எனவே, மக்கள் அளித்திருக்கும் பேராதரவுக்கு மதிப்பளித்து பா.ஜ.க. வினர் மதவெறியைக் கைவிட வேண்டும் அல்லது மோடி அத்தகைய சக்திகளை அடக்கி வைக்க வேண்டும் என்று இவைகள் பரிந்துரைக்கின்றனர்.
இடைத்தேர்தல் தோல்வி காரணமாக சங்கப் பரிவாரம் மதவெறியைக் கைவிட்டு விடுமா? அல்லது முதலாளித்துவ ஊடகங்கள் சிபாரிசு செய்வதைப் போல வளர்ச்சியைச் சாதிக்கும் பொருட்டு மோடி அவர்களை தற்காலிகமாகவேனும் “ஸ்விட்ச் ஆஃப்” செய்து வைப்பாரா? இரண்டும் நடக்கப் போவதில்லை. ஏனென்றால், இந்து மதவெறி என்பது சங்கப் பரிவாரத்தின் அடிப்படைக் கொள்கையாக இருக்கின்ற அதே நேரத்தில், மோடி அரசின் தனியார்மய, தாராளமயத் தாக்குதல்கள் தோற்றுவிக்கின்ற வெகுசனக் கோபத்தைத் திசைதிருப்பி இந்த அரசைப் பாதுகாக்கும் கவசமாகவும் இருக்கின்றன.
டெல்லி கண்காட்சி - பாஜக ஆர்ப்பாட்டம்
தலைநகர் டெல்லியிலுள்ள பிரகதி திடலில் நடந்துவந்த பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த கண்காட்சியைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் இந்து மதவெறிக் கும்பல்.
“பத்தாண்டுகளுக்கு மதக்கலவரங்களை நிறுத்தி வையுங்கள்” என்று சுதந்திர தின உரையில் விடுக்கப்பட்ட கோரிக்கையாக இருக்கட்டும், “இந்திய முஸ்லீம்கள் நாட்டுக்காக உயிரைக் கொடுக்கக் கூடியவர்கள்” என்ற மோடியின் பாராட்டாக இருக்கட்டும், இவை மத நல்லிணக்கத்தை விரும்புகின்ற ஒரு இலட்சியவாதியின் குரல் போல ஒலித்தாலும், அந்தச் சொற்களின் பொருள் அதுவல்ல. முஸ்லிம் வாக்குகளின் தயவில்லாமல், இந்து வாக்குகளின் துணையோடு தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியில் அமர்ந்திருப்பவரான, “ஹிந்து ஹ்ருதய சாம்ராட்” மோடி, வெற்றி அளிக்கக் கூடிய ஆணவம் சிறிதும் இல்லாமல், மதவெறியைத் தமது சுபாவமாகக் கொண்டிருக்கும் முஸ்லிம்களைத் திருந்தி வாழுமாறு பெருந்தன்மையாக கேட்டுக் கொள்கிறார்” என்பதுதான் மோடி உச்சரித்திருக்கும் சொற்களின் பொருள். “முஸ்லிம்கள் தங்களது நாட்டுப்பற்றுக்கு இந்து வெறியர்களிடம் சான்றிதழ் பெற்றுக்கொள்ள வேண்டும்” என்பது அதில் தொக்கி நிற்கும் பொருள். 2002 இனப்படுகொலை என்பது மோடியின் கைமீறி நடந்து விட்ட ஒரு விபத்து, இப்போது செங்கோட்டையில் நின்று பேசும் மோடிதான் உண்மையான மோடி என்ற மயக்கத்தை பா.ஜ.க. எதிர்ப்பாளர்களிடம் விதைப்பதற்காகவும், அமெரிக்காவுக்குப்புனித யாத்திரை செல்லும் தருணத்தில் அதற்குப் பொருத்தமான சர்வதேச அரங்குக்குப் பொருத்தமான, பிம்பத்தை உருவாக்கிக் கொள்ளவேண்டும் என்பதற்காகவும் திட்டமிட்டே அரங்கேற்றப்படும் நாடகத்தின் வசனங்களே இவை.
பாஜக மதவெறிமதவெறி என்ற துருப்புச் சீட்டைப் பொருத்தவரை, குறிப்பிட்ட ஒரு தேர்தலில் அதனைப் பயன்படுத்துவது வேண்டுமா, வேண்டாமா என்று மதிப்பிடுவதில் பா.ஜ.க. தலைவர்களிடையே கருத்து வேறுபாடுகள் வரக்கூடும். அவை செயல் உத்திகள் தொடர்பான கருத்து வேற்றுமைகள் அல்லது பதவி நோக்கத்திலான கோஷ்டித் தகராறுகள் மட்டுமே. பா.ஜ.க. விற்குள் நிலவும் இத்தகைய முரண்பாடுகளைக் காட்டித்தான் வாஜ்பாயி மிதவாதி, அத்வானி தீவிரவாதி என்ற மயக்கம் மக்கள் மத்தியில் திட்டமிட்டே தோற்றுவிக்கப்பட்டது. பதவி நாற்காலிகளில் அமரும் நபர்களுக்கு, மன்னனுக்கு வழங்கப்படும் நடுநிலைச் செங்கோலைப் போல, மிதவாத முகமூடியை பார்ப்பனப் பாசிசக் கும்பலே அணிவித்து விடுகிறது. இன்னொரு புறம், பிரதமர் பதவி எனும் விக்கிரமாதித்தன் நாற்காலி (அல்லது நமது அரசியல் சட்டம்) எப்பேர்ப்பட்ட தீவிரவாதியையும் மிதவாதியாக்கி விடும் என்கிறார்கள் முதலாளித்துவ அறிவுத்துறையினர்.
ஆனால், மிதவாத முகமூடி அணிந்த இந்த நபர்கள் எப்போதும் இந்துத்துவ தீவிரவாதத்தை நோக்கிச் செல்வதற்கான படிக்கட்டாகவே இருந்து வருகின்றனர். வாஜ்பாயி ஆட்சியில் குறைந்தபட்ச செயல்திட்டம் என்று கூட்டணிக் கட்சிகள் விதித்த “கட்டுப்பாடு”, அணுகுண்டு வெடிப்பையோ, கார்கில் போரையோ, ஸ்டேன்ஸ் பாதிரியார் எரிப்பையோ, குஜராத் படுகொலையையோ, பாடத்திட்ட மாற்றத்தையோ தடுத்து நிறுத்தி விடவில்லை. பாரதிய ஜனதாவின் ஆட்சிக்காலம் ஒவ்வொன்றிலும் அரசியலும் சமூகமும் மென்மேலும் இந்துத்துவமயமாக்கப் படுவதுதான் நடந்தேறியிருக்கிறது. இப்போதும் அதுதான் நடந்து வருகிறது.
இந்தித் திணிப்பு, சமஸ்கிருத ஆதிக்கம், குரு உத்சவ், பாடத்திட்ட மாற்றம், அதிகார வர்க்கத்தில் சங்கப் பரிவாரத்தினரைத் திணிப்பது என்பன போன்ற காவிமயமாக்க நடவடிக்கைகள் மேலிருந்து அமல்படுத்தப்படுகின்றன. இன்னொருபுறம், பல்வேறு பெயர்களில் நூற்றுக்கணக்கில் உருவாக்கப்படும் இந்துவெறி அமைப்புகள் பசுவதைத் தடுப்பு, விநாயகர் ஊர்வலம் தொடங்கி அன்றாடப் பிரச்சினைகள் பலவற்றிலும் புகுந்து அதன் வழியே மதவெறியைத் தூண்டுகின்றன. அதிகாரத்தில் இந்து பாசிசம் அமர்ந்திருப்பதால், நேரடி வன்முறை தேவைப்படாமல், வன்முறை குறித்த அச்சுறுத்தல் மூலமாகவே தங்களது அரசியல் – சமூக மேலாதிக்கத்தை இந்து வெறியர்கள் நிலைநாட்டிக் கொள்ள முடிகிறது.
தமிழகத்தில் ஊருக்குப் பத்து விநாயகர் சிலைகள் என்று தொடங்கி இப்போது தெருவுக்குப் பத்து என்ற அளவுக்கு பாசிஸ்டுகளின் “மத உரிமை” வளர்ந்து விட்டது. இவ்வாறு ஒருமுறை நிலைநாட்டப்படும் பாசிசத்தின் உரிமை, மிக விரைவிலேயே அதன் அதிகாரமாக சமூகரீதியில் நிலைபெற்று விடுகிறது. “இந்து பகுதிகளில் முஸ்லிம்கள் சொத்து வாங்கக் கூடாது, குடியிருக்க கூடாது, இந்து – ஜைன பண்டிகைகளின் போது கறிக்கடை திறக்கக் கூடாது” என்பன போன்ற பாசிச அதிகாரங்கள், அனைவரும் கட்டுப்பட வேண்டிய தொன்று தொட்டு நிலவும் சமூக நியதிகள் போல மாற்றப்பட்டு விடுகின்றன.
விநாயகர் ஊர்வலம்
தமிழகத்தில் விஷக்கிருமி போலப் பரவி வரும் இந்து மதவெறிக் கும்பலின் விநாயகர் ஊர்வலம்.
நவராத்திரி பண்டிகையின் போது நடைபெறும் கர்பா நடன நிகழ்ச்சிகளில் புகுந்து லவ் ஜிகாத் மூலம் இந்து பெண்களை முஸ்லிம் இளைஞர்கள் கவர்ந்து விடுவதால், இந்த முறை எங்கேயும் முஸ்லிம்களை அனுமதிக்கக் கூடாது என்ற புதிய “பத்வா”, இந்து மதவெறியர்களால் இப்போது பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய மிரட்டல்களால் பயந்து போன முஸ்லிம்கள் சிலர் விநாயகர் ஊர்வலம் என்ற காலித்தனத்துக்கு மரியாதை செய்யுமாறு நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். அடுத்து அவ்வாறு மரியாதை செய்யாத முஸ்லிம்கள் தேச விரோதிகள் என்று மிரட்டப்படுவார்கள்.
இவை சில எடுத்துக்காட்டுகள் மட்டுமே. ஆகவே, பாசிசத்தின் தேர்தல் தோல்விகளல்ல, மேற்கூறிய வெற்றிகளே நம் கவனத்துக்குரியவை. ஆர்.எஸ்.எஸ்.-க்கு ஒரு நிகழ்ச்சி நிரல் இருக்கிறது. சாத்தியமான ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்தி, பார்ப்பன பாசிசக் கும்பல் அதனை முன்தள்ளுகிறது என்பதை நாம் மறந்து விடக்கூடாது.
தற்போதைய இடைத்தேர்தல் தோல்வியை வைத்தும், நாடாளுமன்றத் தேர்தலில் வளர்ச்சி, நல்லாட்சி ஆகிய முழக்கங்களை வைத்துத்தான் மோடி வெற்றி பெற முடிந்தது என்பதை வைத்தும், இந்திய சமூகம் தன் இயல்பில் மத நல்லிணக்கத்தையும் பன்மைத்துவத்தையும் அங்கீகரிப்பதாக உள்ளதால்தான், மதவெறியர்கள் வேறு வழியின்றி பின்வாங்க வேண்டியிருக்கிறது என்ற மதிப்பீட்டுக்குச் சிலர் வருகின்றனர். இது இந்துத்துவத்துக்கு எதிரான அரசியல் மெத்தனத்தைத் தோற்றுவிக்கின்ற தவறான கருத்து. எதார்த்த நிலையை நாம் வேறு விதமாகப் புரிந்து கொள்ளவேண்டும்.
பொதுவிலேயே மக்கள் சமூக கொந்தளிப்பையும், பதற்றத்தையும் விரும்புவதில்லை. கடந்த 25 ஆண்டுகளில் பாரதிய ஜனதாவின் பார்ப்பன பாசிச அரசியல் வட இந்தியாவில் எந்த அளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறதோ அந்த அளவுக்கு அம்பலப்பட்டும் இருக்கிறது. லவ் ஜிகாத் என்பன போன்ற மிகைப்படுத்தப்பட்ட அவதூறுகள் தற்காலிக தலைப்புச் செய்திகளாக ஒரு பரபரப்பை ஏற்படுத்தினாலும், அதன் தாக்கம் நீடித்திருப்பதில்லை. அவை தேர்தல் துருப்புச் சீட்டுகள் என்பதை மக்கள் தம் அனுபவத்தில் புரிந்து கொண்டு விடுகிறார்கள்.
bjp-communalism-soft-and-hard-1மேலும், சிறுபான்மை எதிர்ப்பை முதன்மைப்படுத்தி, சாதிகள் கடந்த இந்து உணர்வை உருவாக்க சங்கப் பரிவாரம் எவ்வளவுதான் முயன்றாலும், சமூக வாழ்க்கையில் நிலவும் சாதி ஆதிக்கமும், சாதிகளுக்கிடையிலான பாரம்பரிய முரண்பாடுகளும் இந்து உணர்வை அடியறுத்து விடுகின்றன. இந்து மத உணர்வை உருவாக்கி வாக்குகளை அறுவடை செய்ய இயலாத நிலையில், குறுகிய காலப் பயிராக, ஜாட் சாதி உணர்வை முஸ்லிம் எதிர்ப்பு இந்து வெறியாக மாற்றி, வாக்குகளை அறுவடை செய்யும் குறுக்கு வழி முசாபர்பூரில் அமித் ஷாவால் பயன்படுத்தப் பட்டது. அந்த தந்திரம் இந்த இடைத்தேர்தலில் செல்லுபடியாகவில்லை என்று தெரிந்து விட்டதால், இனி புதியதொரு உத்தியை அவர்கள் கண்டுபிடிப்பார்கள்.
சாதி அடிப்படையில் திரட்டப்பட்ட பிழைப்புவாதக் கட்சிகள் தேர்தலில் பா.ஜ.க.வைத் தோற்கடித்துவிட்டன என்பதில் நாம் மகிழ்வதற்கு ஒன்றுமில்லை. பார்ப்பன பாசிசம் சாதி என்ற நிறுவனத்தையும் உணர்வையும் பராமரிக்கவே விரும்புகிறது. ஏனென்றால், சாதிக்கட்சிகள் மட்டுமல்ல, சாதி உணர்வு என்பதும் தன் இயல்பிலேயே நெறியற்றது. “கமண்டலை மண்டல் வென்றுவிடும்” என்ற 90-களின் சவடால்கள் 90-களின் இறுதியிலேயே வெளுத்துப்போனதையும், தி.மு.க. முதல் பகுஜன் சமாஜ் வரையிலான கட்சிகள் பா.ஜ.க.வுடன் கூட்டுச் சேர்ந்ததையும் நாம் ஏற்கெனவே பார்த்து விட்டோம். பார்ப்பன – பனியா கட்சி என்று ஒதுக்கப்பட்டிருந்த பாரதிய ஜனதாக் கட்சியின் பின்னால் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதியினர் திரண்டு நிற்பதையும், கலவரத்தில் களமிறங்குவதையும் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
பார்ப்பன பாசிசம் இப்போது இருப்பதை விடச் சாதகமான சூழலில் முன் எப்போதும் இருந்ததில்லை. காங்கிரசு படுதோல்வியடைந்திருப்பது மட்டுமல்ல, மாநிலக் கட்சிகள் முதல் போலி கம்யூனிஸ்டுகள் வரையிலான அனைவரும் மக்களிடம் மதிப்பிழந்திருக்கின்றனர். ஊழல் வழக்குகளில் சிக்காதவரில்லை. கோஷ்டிப் பூசலால் பிளவுபடாத கட்சியும் இல்லை.
சமீபத்திய இடைத்தேர்தலில், மேற்கு வங்கத்தில் போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் மார்க்சிஸ்டு கட்சி டெபாசிட்டை இழந்திருக்கிறது. சாரதா சிட்பண்டு ஊழலில் சிக்கியிருக்கும் மம்தாவுக்கு மாற்றாக பா.ஜ.க. மிகவேகமாக மே.வங்கத்தில் பரவி வருகிறது. சாரதா சிட்பண்டு ஊழல் பணமும் மாமிச ஏற்றுமதிப் பணமும் முஸ்லிம் தீவிரவாதிகளுக்கு சப்ளை செய்யப்படுவதாகக் கூறி வங்கத்தில் இந்து வெறியைப் பரப்புகிறது பாரதிய ஜனதா. கேரளத்தில் அயன்காளி பிறந்தநாள் விழாவுக்கு மோடியைச் சிறப்பு விருந்தினராக அழைத்து கவுரவிக்கிறது புலையர் மகாசபா. தமிழகத்தில் இந்தித் திணிப்பு மட்டுமின்றி, ஈழப்பிரச்சினை, மீனவர் பிரச்சினை முதலானவற்றில் காங்கிரசை விடக் கொடிய நச்சுப்பாம்பே மோடி அரசு என்று தெரிந்த பின்னரும், பா.ஜ.க.வை அம்பலப்படுத்தி போராட்டம் நடத்தும் துணிவற்ற கோழைகளாக மட்டுமின்றி ஊராட்சி மன்ற இடைத்தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு ஆதரவு கொடுத்துப் பல்லிளிக்கும் வீடணர்களாகவும் பா.ம.க., ம.தி.மு.க., தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகள் கூச்சமே இல்லாமல் தம்மை இனம் காட்டிக் கொண்டிருக்கின்றன.
பார்ப்பன எதிர்ப்பு, திராவிடம், சோசலிசம் போன்ற கொள்கைகளைப் பேசிய கட்சிகள் மக்கள் மத்தியில் மதிப்பிழந்திருப்பது மட்டுமல்ல, கொள்கை என்று பேசுவதே மதிக்கத்தக்கதல்ல என்று கருதும் அரசியலற்ற போக்கும், மறுகாலனியாக்க கொள்கைகளை முன்னேற்றம் என்று மயங்கும் போக்கும் கடந்த 20 ஆண்டுகளில் இளைய தலைமுறையினர் மத்தியில் பரவியிருக்கிறது. இந்த போக்கினை அறுவடை செய்யும் விதத்தில், மோடி ஒரு அரசியல்வாதி இல்லையென்றும், வளர்ச்சியை மட்டுமே நோக்கமாக கொண்ட செயல்வீரன் என்றும் சித்தரிப்பதில் வெற்றி பெற்ற ஆர்.எஸ்.எஸ். கும்பல், இப்போது மோடி ரசிகர்களை இந்துத்துவத்துக்கு “மதமாற்றம்” செய்து வருகிறது. நாடு முழுவதும் ஆர்.எஸ்.எஸ். சாகாக்கள் அதிகரித்து வருகின்றன.
இன்னொருபுறம், மறுகாலனியாக்கத்தால் திணிக்கப்படும் நகரமயமாக்கம், வேர்ப்பிடிப்பு இல்லாமல் மிதக்கும் உதிரி வர்க்கங்களுக்கு, இந்து அடையாளத்தை வழங்கி, தன் பின்னால் திரட்டிக் கொள்வதற்கான வாய்ப்பையும் ஆர்.எஸ்.எஸ். கும்பலுக்கு வழங்கியிருக்கிறது. தமிழகத்தில் இந்த ஆண்டு கொள்ளை நோய் போலத் திடீரென்று பரவிய விநாயகர் சிலைகளும், அவற்றைச் சுற்றித் திரட்டப்பட்ட கூட்டமும் இதனை மெப்பிக்கின்றன. பொறுக்கித்தின்னும் வாய்ப்புக்காக அலைந்து கொண்டிருந்த எல்லாவிதமான பிழைப்புவாதிகளும் கிரிமினல்களும், ஒரு குங்குமத் தீற்றை நெற்றியில் நெடுக்காக இழுத்து விட்டுக் கொண்டு களத்தில் குதித்திருக்கிறார்கள்.
காற்றில் பரவும் துர்நாற்றத்தைப் போல அரசியலிலும் சமூகத்திலும் வெகு வேகமாகப் பரவி வருகிறது இந்துத்துவம். தடுத்து நிறுத்தாமல் தாமதிக்கும் ஒவ்வொரு கணமும், சமூகத்தின் நாசி மெல்ல மெல்ல இந்தத் துர்நாற்றத்தை முகம் சுளிக்காமல் சுவாசிக்கப் பழகுகிறது. உயிருடன் கொளுத்தப்பட்ட முஸ்லிம்களின் பிணவாடையைச் சுவாசிப்பதற்குக் கூட, குஜராத் இந்து சமூகத்தின் நாசி இப்படித்தான் மெல்ல மெல்லப் பழகியிருக்கக் கூடும்.
- சூரியன் வினவு.com

கருத்துகள் இல்லை: