டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் நடந்த
மஹிசாசுரன் வீரமரண நினைவேந்தல் கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க மாணவர்
பிரிவான ஏ.பி.வி.பியினர் கலவரம் செய்து விழாவை சீர்குலைத்துள்ளனர்.
மஹிசாசுரனை நாயகனாக சித்தரித்து வெளிவந்த “பார்வர்ட் பிரஸ்” ( Forward
Press) என்ற பத்திரிகை அலுவலகத்தை போலீசை கொண்டு அடித்து
நொறுக்கியுள்ளனர்
மஹிசாசுர நாளில் ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் ஏ.பி.வி.பி கலவரம்.
ஆரிய பார்ப்பனர்கள் இந்த மண்ணின் பூர்வகுடி மக்களை, பழங்குடிகளை
இனப்படுகொலை செய்ததை கொண்டாடும் பல்வேறு பார்ப்பன பண்டிகைளில் ஒன்று
துர்காபூஜை என்ற மஹிசாசுரன் படுகொலை கொண்டாட்டம். அதே சமயத்தில் மஹிசாசுரனை
தாழ்த்தப்பட்ட – பிற்படுத்தப்பட்ட – பழங்குடி மக்களின் நாயகனாக
முன்னிறுத்தும் பார்ப்பனிய எதிர்ப்பு மரபும் இங்கு இருந்து வருகிறது.அம்பேத்கர், பெரியார் போன்ற சீர்திருத்தவாதிகள் இது போன்ற விழாக்களை ஊக்குவித்துள்ளனர். தலித் மக்கள் ஆங்கிலேயர் படையில் சேர்ந்து, பார்ப்பன மன்னனை கொன்றோழித்த தினத்தை அம்பேதக்ர் கொண்டாட வலியுறுத்தியிருக்கிறார்.
தமிழகத்தில் இராவண லீலா நிகழ்வுகளை திராவிட இயக்கம் நடத்தியிருக்கிறது. மக்கள் கலை இலக்கியக் கழகம் அசுர கானம் என்ற பெயரில் பாடல் ஒலிப்பேழை வெளியிட்டுள்ளது: தமிழ் மக்கள் இசை விழாவையும் பல ஆண்டுகளாக நடத்தியிருக்கிறது.
அந்த வகையில் பார்ப்பனிய கண்ணோட்டத்தில் எழுதப்பட்டிருக்கும் வரலாற்றை பிற்படுத்தப்பட்ட-தாழ்த்தப்பட்ட-பழங்குடி மக்களின் பார்வையிலிருந்து மறுவாசிப்பு செய்ய வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டு, “வீரமரணமடைந்த மஹிசாசுரனுக்கு நினைவேந்தல் நிகழ்வு” என்று ஒரு நிகழ்வை அக்டோபர் 9-ம் தேதி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்திருந்தது, அகில இந்திய பிற்படுத்தப்பட்ட மாணவர் சங்கம். நேரு பல்கலைக்கழக மாணவர் விடுதியின் காவேரி மெஸ்சில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அப்போது அங்கு திரண்டு வந்த ஏ.பி.வி.பி குண்டர்கள் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த பிற்படுத்தப்பட்ட மாணவர் சங்கம் மற்றும் கலந்துகொண்ட மாணவர்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளனர். விடுதி உணவகத்தின் கதவுகள் மற்றும் கண்ணாடிகளை உடைத்து தங்கள் வெறியை காட்டியுள்ளனர். தங்களின் வன்முறை மூலம் நிகழ்ச்சியை நடக்கவிடாமல் தடை செய்துள்ளனர்.
இதே போல கடந்த ஆண்டு ஹைதராபாத்தில் உஸ்மானியா பல்கலைக்கழகத்துக்கு அருகில் உள்ள ஆங்கிலம் மற்றும் வெளிநாட்டு மொழிகளுக்கான பல்கலைக்கழகத்தில் அசுரர்கள் வாரம் கொண்டாட ஏற்பாடு செய்த மாணவர்கள் மீது ஏ.பி.வி.பியினரின் தூண்டுதலின் பேரில் பிணையில் வெளி வர முடியாத பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. அது குறித்து ஏற்கனவே எழுதியிருந்தோம்.
ஏபிவிபி யின் இந்த அடாவடி செயலை செயலை கண்டித்து ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர் சங்கம் மாணவர்களை திரட்டி போராட்டம் நடத்தியுள்ளது.
நிகழ்வில் கல்ந்துகொண்ட ஒரு மாணவர் இது குறித்து கூறும்போது “ஏபிவிபி யினரும் இதே காவேரி மெஸ்சில் தான் தங்களின் துர்கா பூஜைக்கான சிலைகளை வைத்து வழிபட்டனர்.அப்போது யாரும் இதை எதிர்க்கவில்லை ஆனால் இன்று தலித்துகள் தங்களின் நாயகன் மஹிசாசுரன் படுகொலை செய்யப்பட்டதை நினைவுகூரும் போது ஏபிவிபியினர், அந்தப் பகுதி குண்டர்களின் துணையுடன் தாக்குதலில் ஈடுபடுகிறார்கள்” என்று கூறி தன் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
சமீபத்தில் நடந்த நேரு பல்கலைகழக மாணவர் தேர்தலின் அனைத்து பதவிகளிலும் சி.பி.எம்.எல் (லிபரேசன்)-ன் மாணவர் அமைப்பான AISA-விடம் படுதோல்வியடைந்த ஏ.பி.வி.பி தனது கோபத்தை இந்த வன்முறை மூலம் தீர்த்துக் கொண்டுள்ளது. AISA-வின் வெற்றியைவிட “நக்சல்பாரி ஜிந்தாபாத்” “லால் சலாம்” போன்ற முழக்கங்கள் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகங்களில் எதிரொலிப்பது ஆளும்வர்க்க எடுபிடிகளான ஏபிவிபி-யினருக்கு எரிச்சலூட்டியிருக்கிறது.
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வன்முறை வெறியாட்டத்தை தொடர்ந்து, இந்துத்துவவாதிகளின் தூண்டுதலில் பேரில் அதே நாள் இரவில் “மஹிசாசுரன் சிறப்பிதழாக” வெளிவந்த தலித்-பிற்படுத்தப்பட்ட மாத இதழான பார்வர்ட்பிரஸ் பத்திரிகை அலுவலகம் டெல்லி போலீசாரால் சூறையாடப்பட்டது. அதன் பிரதிகள் பறிமுதல் செய்யப்பட்டதோடில்லாமல் அதன் நான்கு ஊழியர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பார்வர்ட் பிரஸ் பத்திரிகை “நீதிமன்ற உத்தரவோ அல்லது வேறு எந்த ஆணையும் இல்லாமல் போலீசார் பத்திரிகை அலுவலகத்தை அடித்து நொறுக்கி ஊழியர்களை கைதுசெய்ததோடில்லாமல் நகரின் பல இடங்களிலிருந்தும் எங்கள் பத்திரிகை பிரதிகளை கைப்பற்றி வருகிறார்கள். பகுஜன் – சிரமன கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட அக்டோபர் மாத இதழில் பல்வேறு பல்கலைக்கழகங்களின் அறிவுஜீவிகள், புகழ்பெற்ற எழுத்தாளர்களின் கட்டுரைகள் இடம்பெற்றிருக்கின்றன. இதில் மஹிசாசுரன்-துர்கா கதையை பிற்படுத்தப்பட்ட மக்களின் பார்வையிலிருந்து மறுவாசிப்பு செய்து கட்டுரைகள், படங்கள் மூலம் விளக்கப்பட்டுள்ளது.
யாரையும் புண்படுத்துவது நோக்கம் எங்களுக்கு இல்லை. பகுஜன் கலாச்சாரம் மற்றும் நாகரிகத்தின் அடையாளங்களை கண்டுபிடிப்பதும், அதை மீட்டுருவாக்கம் செய்வதும் தான் எங்கள் நோக்கம். சொல்லப்படும் புனித நூல்களை பகுஜன் பார்வையிலிருந்து மறுவாசிப்பு செய்யும் மரபு நீண்ட நெடியது. எங்களுக்கு முன்பே அது ஜோதிராவ் பூலேவிலிருந்து ஆரம்பித்து அம்பேத்கர், பெரியார் என்று நீள்கிறது.
இது கருத்து சுதந்திரத்தின் மீதான தாக்குதல். பார்பனிய பா.ஜ.க சக்திகளின் உத்தரவின் பேரில்தான் இது நிகழ்த்தப்பட்டுள்ளது. தலித்-பிற்படுத்தப்பட்ட-பழங்குடி மக்களின் இதழான எங்களை இந்த பார்ப்பன சக்திகள் எப்போது அருவெறுப்பகத்தான் பார்த்திருக்கிறார்கள். கடந்த ஆண்டு பல முறை எங்களை தாக்கியிருக்கிறார்கள். இந்த தாக்குதல்கள் எங்களை மேலும் பலமாக்கியிருக்கிறதே ஒழிய வேறு எதையும் சாதிக்கவில்லை. இந்த பிரச்சனையிலிருந்தும் நாங்கள் மீண்டு வருவோம்” என்று தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது.
இதோடு பிரேம்குமார் மணி என்பவரது கட்டுரையின் சில பகுதிகளையும் தங்கள் கண்டன அறிக்கையில் பதிவு செய்துள்ளனர். அவை முன்வைக்கும் கேள்விகள் முக்கியமானவை.
“பழங்குடிகளின் நாயகர்களான அசுரர்கள் கொல்லப்பட்டது எப்படி கொண்டாடத்தக்க விழாவானது? கொலையை கொண்டாடும் இந்த மனநிலை எதைக் குறிக்கிறது? இதே போன்று குஜராத் படுகொலைகளையோ இல்லை பீகாரின் தலித் படுகொலைகளையோ கொண்டாடினால் அதை நாம் எப்படி பார்ப்போம். ஆம் அசுரர்கள் தோற்றுவிட்டார்கள்தான். அதற்காக ஆண்டுதோறும் அதை ஏன் கொண்டாட வேண்டும். இதைக் கொண்டாடுவதன் மூலம் நீங்கள் தான் மக்களை அவமதிக்கிறீர்கள்” என்று பார்ப்பன கொண்டாட்டங்களை கேள்விக்குள்ளாக்குகிறது அந்த கண்டன அறிக்கை.
மாறாக, “மஹிசாசுரன் வீரமரணமடைந்த நாளை நினைவுகூறுவதன் மூலம் நாங்கள் யாரையும் புணபடுத்தவில்லை. நாம் ஏன் தோற்றோம் என்பதை எடுத்துக்காட்ட விரும்புகிறோம். கடந்த காலத்தை கற்றுக்கொள்வதன் மூலம் தான் நிகழ்காலத்தில் எங்களை உயர்த்திக்கொள்ள முடியும். எங்களின் எல்லா சின்னங்களும் அழிக்கப்பட்டுவிட்டன. கிடைக்கும் சில தரவுகளின் மூலம் தான் எங்கள் ஏகலைவன் அர்ஜூனனைவிட திறமையாளன் என்பதை அறியமுடிகிறது. ஆனால் அரசு, திறமை குறைந்த அர்ஜுனன் பெயரில்தான் விருதுகள் தருகிறது. வரலாற்றிலிருந்து எங்கள் நாயகர்கள் வெளியேற்றப்பட்டுள்ளார்கள். எங்கள் குறியீடுகள் அவமதிக்கப்பட்டுள்ளன. எங்கள் நாயகர்களின் கட்டைவிரல்கள், தலைகளை வெட்டிய மரபை நாங்ள் கேள்வி கேட்க விரும்புகிறோம். அவர்களின் அவமானம் எங்களின் அவமானம்.” என்று பார்ப்பன கலாச்சாரத்தை கேள்விக்குள்ளாக்கும் தமது நடவடிக்கைகளின் நோக்கத்தை விளக்குகின்றனர்.
இந்த கேள்விகளுக்கு பதிலளிக்க எந்த ஆர்.எஸ்.எஸ் காரனும் தயாராக இல்லை. அவர்களின் ஒரே பதில் வன்முறை. அரச அதிகாரம் மூலம் கேள்வி கேட்பவனின் குரல்வளையை நெறிப்பது. இதைதான் நந்தன் காலம் முதல் இன்று வரை செய்து வருகிறார்கள்.
இத்தகைய பாசிஸ்டுகள் தங்களை ஜனநாயகவாதிகள் போல காட்டிக்கொள்ள தவறுவதில்லை. அதில் ஒன்றுதான் இந்துத்துவம என்பது அனைத்து வழிபாடுகளையும் அங்கீகரிக்கரிப்பது, அதில் நாத்திகம் உள்ளிட்டு ‘பாரத’ கலாச்சாரத்தின் அனைத்தும் அடக்கம் என்று சில கபடதாரிகள் பசப்புகிறார்கள்.
இது உண்மை எனில், ‘மாபெரும் பாரத கலாச்சாரத்தின்’ சில புதல்வர்கள் அதே பாரதத்தின் கொல்லப்பட்ட புதல்வரான மகிசாசுரனுக்கு நினைவுநாள் நடத்துவது ஆர்.எஸ்.எஸ் அம்பிகளுக்கு பதற்றத்தையும், நடுக்கத்தையும் உண்டாக்குவது ஏன்? மஹிசாசுரன் என்ன ஐரோப்பிய மையவாத சிந்தனை கொண்டவரா? இல்லை பாபருக்கு பக்கத் துணையாக வந்தவரா? இல்லையே பார்ப்பனர்கள் வருவதற்கு முன்னரே ‘பாரதத்தில்’ இருந்தவர்கள் தானே. பின்னே ஏன் நடுக்கம் பதற்றம் எல்லாம்.
உண்மையில் இந்து மதம் என்றழைக்கப்படும் பார்ப்பனியம் சற்றும் சகிப்புத் தன்மை அற்றது. அதை எதிர் கொண்டு தமது உரிமைகளை நிலைநாட்டியது இங்கேயிருக்கும் உழைக்கும் மக்களின் போராட்டமே அன்றி அது இந்து மதத்தின் பொறுமை அல்ல. மாறாக பார்ப்பனியத்தின் வேரே, ஆரிய-பார்ப்பன-சமஸ்கிருத கலாச்சார மேலாதிக்கம்தான்.
குமரித்தாய் வழிபாட்டிற்கு கத்தோலிக்கம் தடை விதிப்பதாகவும், இந்துத்துவம் தான் பன்முகத்தன்மை கொண்டது என்றும் நாமெல்லாம் மாபெரும் பாரத கலாச்சாரத்தின் புதல்வர்கள் என்றும் கூறி குமரித்தாயின் ஜனநாயக உரிமைக்கு போர்க்கொடிதூக்கும் ஜோ.டி.குரூஸ் போன்றவரகள் அதே மாபெரும் பாரத கலாச்சாரத்தின் புதல்வர்களான அசுரர்களுக்கு நினைவேந்தலை தடை செய்யும் இந்த்துத்துவம் பற்றி என்ன கருதுகிறார்கள்? பேய்க்கு வாழ்க்கைப்பட்ட பிறகு இம்சைதானே நீதி?
இந்துத்துவத்தின் சாதிய வர்ணாசிரம ஜீன்களிலேயே பன்முகத்தன்மைக்கோ சமத்துவத்திற்கோ இடமில்லை. ஆதிக்க ஆரிய-பார்ப்பன-சமஸ்கிருத மொழி வழி கலாச்சாரத்தின் பாதுகாவலர்கள் தான் இந்த்துவம். அதில் அசுர-திராவிட-தேசிய இன மொழிவழிபட்ட கலாச்சாரத்திற்கு என்றைக்குமே இடமில்லை. அதை இழிவுபடுத்துவது தான் இந்துத்துவம். மாற்று கருத்துக்களை இடமளிக்காத பாசிஸ்டுகள்தான் பார்ப்பன இந்துத்துவவாதிகள் எனபதை மீண்டும் ஒரு முறை இந்த நிகழ்வின் மூலம் உணர்த்தியுள்ளனர்.
அடுத்தாக ஐரோப்பிய பார்வையில் இந்திய வரலாறு எழுதப்பட்டிருப்பதாகவும் அதை இந்தியப் பார்வையில் மாற்றி எழுத வேண்டும் என்று சமீப காலமாக கதைத்து வருகிறார்கள் இந்த்துவவாதிகள். அதே இந்துத்துவவாதிகள் தான் சூத்திர இந்தியனின் பார்வையில் வேத, புராண வரலாறை மறுவாசிப்பு செய்தால் வன்முறையை கட்டவிழ்த்து விடுகிறார்கள். எனில் இவர்கள் கூறும் இந்தியப் பார்வை என்பது என்ன? அது ஆதிக்க ஆரிய-பார்ப்பன-சமஸ்கிருத பார்வை மட்டுமே என்பது தெளிவாகிறது. ஆக இவர்கள் கூறும் தேசியம் என்பது பார்ப்பன தேசியம்.
நாமெல்லாம் இந்துக்கள் என்று கூறினால் யார் இந்து? ஏன் என் முன்னோரை கொன்றாய் என்று கேளுங்கள்!
- ரவிvinavu.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக