புதன், 16 ஏப்ரல், 2014

சோனியா கன்யாகுமரியில் பிரசாரம் ஏன் ? திமுகவிடம் பறிபோன காங்கிரஸ் சிறுபான்மையோர் ஒட்டு வங்கி

இன்று, காங்கிரஸ் தலைவர் சோனியா, கன்னியாகுமரி லோக்சபா தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமாருக்காக, நாகர்கோவிலில் பிரசாரம் செய்ய உள்ளார். தமிழகத்தில், சோனியா, இங்கு மட்டும் தான் பிரசாரம் செய்கிறார்.மத்திய நிதி அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி போட்டியிடும் சிவகங்கையிலோ, மூத்த காங்கிரஸ் தலைவர்கள் மணிசங்கர் ஐயர், இளங்கோவன் போட்டியிடும், மயிலாடுதுறை, திருப்பூர் தொகுதிகளிலோ, மாநில தலைநகர் சென்னையிலோ அவர் பிரசாரம் செய்யாததற்கு காரணம் என்ன? அதேபோல், காங்கிரஸ் துணை தலைவர் ராகுல், தமிழகம் பக்கமே திரும்பி பார்க்காததற்கு காரணம் என்ன?


காங்கிரஸ் தலைமைக்கு நெருக்கமான, தமிழக காங்கிரஸ் விசுவாசி ஒருவர் அனுப்பிய கடிதம் தான் காரணம் என, காங்கிரஸ் வட்டாரங்களில் பேசப்படுகிறது. காங்கிரஸ் வட்டாரங்கள் கொடுத்த தகவல் படி, அந்த கடிதத்தில் எழுதப்பட்டு உள்ளதாவது:தமிழகத்தில், பல தொகுதிகளில், காங்கிரஸ், ஐந்தாவது இடத்தில் தான் வர முடியும். இங்கு, கட்சி தலைவர்கள் அனைவரும் சுயநலத்தோடு நடந்து கொண்டதன் விளைவுதான், இன்று கட்சி தனித்து விடப்பட்டு இருப்பதற்கு காரணம்.இங்கு, காங்கிரசுக்கு, பாரம்பரியமாகவே 10 சதவீத ஓட்டுகள் உண்டு. ஆனால், இந்த முறை அப்படி இருக்காது. காங்கிரசுக்காக ஓட்டுப் போட்டு வந்தவர்களில், கருணாநிதி எதிர்ப்பு நிலையில் இருப்பவர்களில் அரை சதவீதத்தினர், ஜெயலலிதாவுக்கு ஓட்டளிப்பர். தேசிய சிந்தனை உள்ளவர்கள், மோடிக்காக, பா.ஜ.,விற்கு ஓட்டளிப்பர்; இவர்களின் எண்ணிக்கை 1 சதவீதம். மேலும், 4 சதவீத காங்கிரஸ் வாக்காளர்கள், தோற்கும் கட்சிக்கு ஓட்டளிக்க வேண்டாம் என, தி.மு.க.,விற்கு ஓட்டளிப்பர். அவர்கள்
பெரும்பாலும், சிறுபான்மையினர் அல்லது தலித்துகள். மீதமுள்ள 4.5 சதவீதம் பேர் தான் காங்கிரசுக்கு ஓட்டு போடுவார்கள்.இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளதாக தெரிகிறது. மேலும், ஒவ்வொரு தொகுதியிலும், காங்கிரஸ் பெறவுள்ள ஓட்டுகளின் எண்ணிக்கையும், அதில் பட்டியலிடப்பட்டு உள்ளது.அந்த கடிதத்தில் உள்ள தகவல்கள் சரியா என, சில கருத்து கணிப்பு நிறுவனங்கள் மூலம் சோனியா சரிபார்த்து உள்ளார். அந்த நிறுவனங்களின் முடிவுப்படி, அந்த கடிதத்தில் இருந்த அனைத்து தகவல்களும் சரி என, தெரிந்ததும் தான், சோனியாவும், ராகுலும், தமிழக பிரசாரத்திற்கு வர மறுத்துவிட்டனர்.மேலும், கடித தாக்கத்தால், கட்சி மேலிடம், வேட்பாளர்களுக்கு கொடுக்கவிருந்த நிதி உதவியை கொடுக்க வேண்டாம் என, சோனியா முடிவெடுத்து இருக்கிறார். 'இனிமேல் நிதி உதவி அளித்து பிரயோஜனம் இல்லை, அந்த நிதியை வடமாநிலங்களில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு கொடுத்தாலாவது வெற்றி வாய்ப்பு உண்டு' என, காங்கிரஸ் மேலிடம் முடிவெடுத்துஉள்ளது.கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடும் வசந்தகுமார் மட்டும், அன்றிலிருந்து இன்று வரையில், இங்கிருக்கும் கட்சியினரின் கோஷ்டி கானங்களுக்குள் சிக்காமல், தனித்து செயல்பட்டு கொண்டிருக்கிறார். தனக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், சோனியாவின் புகழ் பாடுவதை மட்டும் தொடர்ந்து செய்து கொண்டு இருக்கிறார்.தான் நடத்தும் 'டிவி' சேனலையும், முழுக்க முழுக்க கட்சி ஆதரவு சேனலாக நடத்துகிறார். 'அப்படிப்பட்டவருக்கு மட்டும் பிரசாரம் செய்தால் போதும், கட்சி தோற்கும் என, தெரிந்து போட்டியிடாமல் ஒதுங்கிய தலைவர்களுக்கு மத்தியில், கட்சி பணத்தை எதிர்பாராமல், தன் கைக்காசை செலவு செய்து போட்டியிடுகிறார்' என, கடிதம் எழுதிய அந்த விசுவாசி மூலம் வசந்தகுமாருக்கு சிபாரிசு போகவே தான், சோனியா சம்மதித்து உள்ளார்.

இதனால், வசந்தகுமார் மீது வாசன், தங்கபாலு, சுதர்சன நாச்சியப்பன், சிதம்பரம், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போன்ற தலைவர்களுக்கு கடுமையான மனத்தாங்கல் உருவாகி உள்ளது. இருந்தாலும், அவர் கன்னியாகுமரியில் பெரிய அளவில் ஓட்டுகளை வாங்கி விட்டால், தேர்தலுக்குப் பிறகு, அவரையே தமிழக காங்கிரஸ் தலைவராக்கலாம் என, சோனியா முடிவெடுத்து இருப்பதாக தெரிகிறது. அதற்கான அங்கீகாரமாகத்தான், இப்போது, அவர் போட்டியிடும் தொகுதிக்கு மட்டும், சோனியா பிரசாரத்துக்கு வருகிறார் என, வசந்தகுமாரின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.அதேபோல், அவர்கள், 'தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை, காங்கிரசுடன் இணைத்ததால் தான், தமிழகத்தில், காங்கிரஸ் ஓரளவுக்கு பலமாக இருப்பதாக, வாசன் சொல்லிக் கொண்டு இருக்கிறார். ஆனால், கட்சி தலைமைசேகரித்து வரும் புள்ளி விவரங்கள், அப்படி இல்லை என்று, அவர்களுக்கு உணர்த்தி உள்ளதாக காங்கிரசார் தெரிவிக்கின்றனர். அதனால் தான், வாசனுக்கு கொடுத்து வந்த முக்கியத்துவத்தை, தலைமை, குறைத்துவிட்டதாக கூறப்படுகிறது' என, தங்கள் தலைவருக்கு ஆதரவான கருத்தை முன்வைக்கின்றனர்.

தமிழகத்தில் உள்ள 13 சதவீத சிறுபான்மையின ஓட்டுகள் மற்றும் 18 சதவீத தலித் ஓட்டுகளில், கணிசமான பங்கு காங்கிரசுக்கு வந்து கொண்டு இருந்தது. ஆனால், அந்த ஓட்டுகளை திருப்ப, தி.மு.க., கூட்டணியில் கடுமையான முயற்சி எடுத்து, அதில் வெற்றி பெற்று விட்ட விவரங்கள் கூட, சோனியாவின் கவனத்துக்கு போயிருக்கின்றன. தேர்தலுக்கு முன்பாகவே, தமிழக காங்கிரஸ் தோல்வி குறித்து, சோனியாவுக்கு தகவல் போய்விட்டது. அதனால், தேர்தல் முடிவுகள் அதிர்ச்சியாக இருக்காது. ஆனால், தேர்தலுக்குப் பின்னால், சோனியா தமிழக காங்கிரசில் செய்யப் போகும் மாற்றங்கள், இங்கிருக்கும் காங்கிரஸ் தலைவர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருக்கும் என, காங்கிரஸ் வட்டாரங்களில் பேச்சு உலவுகிறது.

--நமது சிறப்பு நிருபர்- dinamalar.com 

கருத்துகள் இல்லை: