வெள்ளி, 18 ஏப்ரல், 2014

அன்பழகன்:அதிமுகவும் பாஜகவும் இருவேறு கட்சிகள் போல காட்டிக் கொள்ள சண்டை போடுகின்றனர்

இருவரும் வேறு என்பதை காட்டிக் கொள்ள அதிமுகவும், பாஜகவும்
ஒருவருக்கு ஒருவர் கண்டித்துக் கொள்கிறார்கள் : அன்பழகன் பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் பொங்கலூர் பழனிச்சாமி போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து நேற்று பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் பிரச்சார கூட்டம் நடந்தது. கூட்டத்தில் தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் கலந்து கொண்டு வேட்பாளர் பொங்கலூர் பழனிசாமியை ஆதரித்து பேசினார் அப்போது அவர்,   ‘’தமிழ்நாட்டில் நான் பிரச்சாரம் செய்ய சென்ற இடங்களில் எல்லாம் தி.மு.க.வுக்கு அமோக ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். கடந்த தேர்தலில் ஏமாந்து விட்டதை மக்கள் உணர்ந்துள்ளனர். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் நிறைவேற்றாத திட்டத்தை தி.மு.க. தலைவர் கலைஞர் தமிழகத்தில் நிறைவேற்றி உள்ளார். உதாரணமாக விவசாய கடன் ரூ.7 ஆயிரம் கோடி தள்ளுபடி, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், விசைத்தறி நெசவாளர்களுக்கு 500 யூனிட் வரை இலவச மின்சாரம் என பல திட்டங்களை நிறைவேற்றி உள்ளார். தி.மு.க. ஆட்சியின்போது நியமிக்கப்பட்ட மக்கள் நலப்பணியாளர்கள் 13 ஆயிரத்து 500 பேரை முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஒட்டு மொத்தமாக நீக்கி விட்டார்.
நடைபெறுகின்ற பாராளுமன்ற தேர்தலை மக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். மாநில அரசுக்கு பாடம் புகட்ட வந்த தேர்தல் என்று மக்கள் அனைவரும் நினைக்கிறார்கள்.
தி.மு.க. தலைவர் கலைஞர் தீர்மானிப்பவர்தான் பிரதமராக வருவார். தலைவர் கலைஞரின் ஆதரவால் நான் எம்.எல்.ஏ., அமைச்சர் ஆனேன். நல்ல எண்ணத்தின் விளைவால் அவரை நான் போற்றுகிறேன், ஆதரிக்கிறேன்.


காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் தி.மு.க. அங்கம் வகித்தபோது, சட்டசபையில் தலைவர் கலைஞர் முதல்–அமைச்சராக இருந்த சமயத்தில் ஈழத்தமிழர்களுக்காக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பிரதமருக்கு கடிதம் எழுதினார். ஆனால் பிரதமர் மன்மோகன்சிங் தமிழர்களை பாதுகாக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழக மீனவர்களை காக்க காங்கிரஸ் கட்சி நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் கூட்டணியில் இருந்து விலக வேண்டியதாகி விட்டது.
தமிழ்நாட்டில் மோடி அலை வீசவில்லை. அரசியல் ஆலோசனை சொல்லும் கம்யூனிஸ்டு கட்சிகளை ஜெயலலிதா கழட்டி விட்டு விட்டார். பாஜகவில் சேர்ந்து ஆட்சியில் இடம் பெறலாம் என்று நினைக்கிறார். இருவரும் வேறு என்பதை காட்டிக் கொள்ள அ.தி.மு.க.வும், பா.ஜனதாவும் ஒருவருக்கு ஒருவர் கண்டித்துக் கொள்கிறார்கள்’’என்று கூறினார். நக்கீரன்.com 

கருத்துகள் இல்லை: