வெள்ளி, 18 ஏப்ரல், 2014

இந்தியா இதுவரை சந்தித்திராத மோசமான பிரதமர் வேட்பாளர்

யசோதாபென் - மோடினைவியை மறைத்த மோடி விவகாரத்தில், பாஜக ‘ஒழுக்க சிகாமணிகள்’ முன்வைக்கும் கருத்து என்ன?  ஒருவருடைய தனிப்பட்ட விவகாரங்களில் மூக்கை நுழைக்கக் கூடாதாம், அது அநாகரீகமாம். இது வரை மோடி போட்டியிட்ட தேர்தல்களுக்கு தாக்கல் செய்த வேட்புமனுக்களில் திருமணம் குறித்த விபரத்தை குறிப்பிடாமல் வெற்றிடமாக விட்டு விட்டது, அவரது தனிப்பட்ட விருப்பமாம். அப்போதைய விதி முறைகளின் படி அது தவறில்லை என்பவர்கள், இப்போதுதான் உச்சநீதிமன்றம் அனைத்து விபரங்களையும் குறிப்பிடா விட்டால், வேட்பு மனு செல்லுபடியாகாது என்று கூறி விட்டது என்கிறார்கள். அதனால், சட்டத்துக்கு அடிபணிந்து தன்னுடைய திருமண உறவு பற்றிய விபரத்தை மோடி வேட்பு மனுவில் குறிப்பிட்டிருப்பதாக பாஜக சமாளிக்கிறது.
யசோதாபென் – மோடி
இது பாஜகவோடு மோடியை ‘வளர்ச்சி’க்காக ஆதரிக்கும் அறிவு ஜீவிகளின் விளக்கமும் கூட. ஒரு தலைவனின் வாழ்க்கை திறந்த புத்தகமாக இருந்தாலும் அதில் சில இருட்டு பக்கங்கள் வைத்திருக்க உரிமை உண்டு என்கிறார்கள். எனில் மோனிகா லிவின்ஸ்கி விவகாரத்தில் அந்த உரிமை கிளிண்டனுக்கு தரப்படவில்லையே, ஏன்? தனி நபர் உரிமையின் ‘தாயகமானா’ அமெரிக்காவிலேயே இது பிரச்சினைக்குள்ளானது எங்ஙனம்?
மோடி ஏன் மறைத்தார்?

அதாவது, சின்ன வயதில், அறியாத வயதில் பெரியவர்கள் அவருக்கு ஒரு திருமணத்தை செய்து வைத்து விட்டார்களாம். அவரது ஆர்வமோ ஆர்.எஸ்.எஸ்சில் சேர்ந்து நாட்டுக்கு சேவை செய்வதாகத்தான் இருந்ததாம். அதனால், ‘நான் வருவேன், போவேன், நாலு இடங்களுக்கு சுத்திக் கொண்டே இருப்பேன். எனக்கு இந்த வாழ்க்கை ஒத்து வராது’ என்று மனைவியிடம் சொல்லி விட்டு வீட்டை துறந்து கிளம்பி தேசத்தின் தொண்டிலேயே மூழ்கிப் போய் தன் சொந்த மனைவியைக் கூட மறந்து விட்டாராம். முதலில் திருமணம் செய்பவர்கள் தேசத்திற்கு தொண்டாற்ற முடியாது எனும் புனிதப் பார்ப்பனியம் இதில் உள்ளது. நாட்டிற்காக பாடுபடுபவர்களில், உயிர் துறந்தவர்களில் திருமணம் செய்தவர்கள் இருப்பது எல்லா நாடுகளிலும் உள்ளதுதான். அடுத்து, மோடி அப்படி மனைவியை ஒதுக்கிவைத்து விட்டு என்ன தேசத் தொண்டு செய்தார்?
1980-களில் குஜராத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிரான கலவரங்களை தலித்துகள் மீதான தாக்குதல்களாகவும், இஸ்லாமியர்கள் மீதான மதக் கலவரமாகவும் மாற்றி நடத்தியது; சென்ற இடத்திலெல்லாம் வெறுப்பையும், வன்முறையையும் விதைத்துச் சென்ற அத்வானியின் ‘ராமஜென்மபூமி’ ரத யாத்திரைக்கு குஜராத் பகுதி சாரதியாக இருந்து வழிநடத்தியது; இப்போது வாரணாசி தொகுதியை பறித்து கான்பூருக்கு அனுப்பப்பட்டிருக்கும் முரளி மனோகர் ஜோஷியின் ஏக்தா யாத்திரையை ஒருங்கிணைத்து நடத்தியது முதலான இந்துத்துவ திட்டங்களின் மூலம் குஜராத்தை இந்துத்துவத்தின் சோதனைக் களமாக வளர்த்தெடுப்பதில் முக்கிய பங்காற்றியவர் மோடி.
இதன்படி குஜராத்தில் சிறுபான்மை மக்கள் பலர் கொல்லப்படுவதற்கு குஜராத் மாநிலத்தை தயார் செய்த பணிதான் மோடியின் பெரும்பணி. அவரது மட்டுமல்ல, ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவின் பணியும் கூட. இதெல்லாம் ஆவணப்படுத்தப்பட்டிருந்தாலும், தனிப்பட்ட வாழ்க்கையில், முதலமைச்சர் ஆவதற்கு முன்பு அவர் நிகழ்த்திய திருவிளையாடல்கள் பற்றி பெரிய அளவில் விபரங்கள் வெளியாகவில்லை.
யசோதாபென்
யசோதாபென்
ஆனால், 2002-ம் ஆண்டு குஜராத் இனப்படுகொலை கலவரங்களுக்குப் பிறகுதான் யார் இந்த மோடி என்ற கவலை பலருக்கும் வந்தது. அதனால் முந்தைய ஆண்டுகளில் முதலமைச்சர் மோடியின் சொந்த வாழ்க்கை பற்றி நம்முடைய ‘புலனாய்வு பத்திரிகையாளர்கள்’ விசாரிக்க ஆரம்பித்தார்கள். வெளியே காட்டிக்கொண்டதைப் போல மோடி திருமணமாகாத ‘பிரம்மச்சாரி’ இல்லை, விவரம் வெளியே வருகிறது. அவருக்கு திருமணமாகி விட்டது என்று கேள்விப்பட்ட, அப்போது இந்தியன் எக்ஸ்பிரசின் அகமதாபாத் நிருபராக இருந்த தர்சன் தேசாய் மோடியின் மனைவியை தேடி புறப்பட்டிருக்கிறார்.
யசோதாபென் உடனான மோடியின் திருமணம் மோடிக்கு 8 வயதாகும் போது பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டது. 13 வயதில் திருமண விழா நடத்தப்பட்டது. 17-18 வயதில் இருவரும் சேர்ந்து வாழ்வதற்கான சடங்குகளை நடத்த இரு குடும்பத்தினரும் திட்டமிட்டிருந்த நாளுக்கு முன்னதாக அல்லது திருமணமாகி சில மாதங்களுக்குப் பிறகு வீட்டை விட்டு வெளியேறி விட்டார் மோடி என்று முரண்பட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
2002-ம் ஆண்டில் யசோதாபென் சிமன்லால் குறித்து விசாரிக்க அவரது சொந்த கிராமமான பிராமன்வாடாவுக்கு போயிருக்கிறார் தர்சன் தேசாய். அங்கு யசோதாபென்னின் உறவினர்கள், தெரிந்தவர்களிடம் பேசியதில் அவர் ஒரு அரசு தொடக்கப்பள்ளியில் வேலை செய்வதாக தெரிய வந்திருக்கிறது.
யாரோ ஒரு பத்திரிகையாளர் யசோதாபென் குறித்து விசாரித்துக் கொண்டிருக்கிறார் என்ற தகவல் பரவி தர்சன் தேசாயை ஒரு குண்டர் படை துரத்தியிருக்கிறது. “உனக்கு இங்கு என்ன வேலை, மரியாதையாக இடத்தை காலி பண்ணு” என்று மிரட்டியிருக்கிறது. அவர் ஒரு காரில் ஏறி அவசரமாக தப்பி வந்திருக்கிறார். மோடியின் தனிப்பட்ட விவகாரத்தை  யாரும் அறிந்து கொள்ள கூடாது என்று ஒரு அடியாட்படையே அங்கு பராமரிக்கப்பட்டு வந்திருக்கிறது.
தர்சன் தேசாய் செய்தி
2002-ல் தர்சன் தேசாய் எழுதி வெளியான இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி.
காரணம், நரேந்திர மோடியின் இமேஜ் டேமேஜ் ஆகி விடக் கூடாது என்பதுதான்.  இதற்காக அவரை திருமணம் செய்து கொண்ட பெண்ணைச் சுற்றி கோட்டை போல கண்காணித்திருக்கிறார்கள். மோடிக்கு இசட் ப்ளஸ் கமாண்டோக்கள் பாதுகாப்பு கொடுப்பது பாக் தீவிரவாதிகளிடமிருந்து பாதுகாக்க. மனைவிக்கான பாதுகாப்பு மற்றவர் சந்தித்து மானம் போய்விடக்கூடாது என்பதற்காக. இப்படி ஒரு அப்பாவிப் பெண்ணை வருடக்கணக்கில் துன்பப்படுத்தியிருக்கிறார்கள். இதனால் அந்த பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கையை சிறை வைத்திருக்கிறோம் என்று இந்த மதவெறிக்கும்பல் இப்போதும் ஒத்துக் கொள்ளாது.
ஆகவே யாருடனும், யசோதாபென் பேசி விடக் கூடாது, மோடியைப் பற்றி எந்தத் தகவல்களும் வெளி வந்து விடக் கூடாது என்று கவனமாக இருந்திருக்கிறார்கள்.
ஒரு சிறுமியிடம் யசோதாபென் ரஜோசனா என்ற கிராமத்தில் வேலை செய்வதை தெரிந்து கொண்ட தர்சன் தேசாய் அங்கே விரைந்திருக்கிறார். மோடி போய் விட்ட பிறகு யசோதாபென், பள்ளிப்படிப்பையும், ஆசிரியர் பயிற்சியையும் முடித்து விட்டு அகமதாபாத், தேக்வலி, ரூபால் போன்ற இடங்களில் ஆசிரியராக வேலை விட்டு 1991-முதல் ரஜோசனா தொடக்கப்பள்ளியில் வேலை செய்து வந்திருக்கிறார்.
ரஜோசனாவில் தர்சன் தேசாய், யசோதாபென்னை சந்தித்த போது அவர், “உங்களிடம் நான் எதுவும் பேச விரும்பவில்லை. நான் பேச ஆரம்பித்தால் நிறுத்த முடியாது. போன முறை ஒரு தொலைக்காட்சி சேனல் காரர்களுடன் நான் பேசிய பிறகு பெரும் கலாட்டா நடந்தது. நியாயம், அநியாயம் என்றெல்லாம் பேசி என்னை மீண்டும் தூண்டி விட முயற்சி செய்யாதீர்கள்.” என்று பேச மறுத்திருக்கிறார். எல்லாம் மோடி மற்றும் மோடி அடியாட்படையின் மீது உள்ள பயம்தான். பாருங்கள், கூண்டுக்கிளி தன்னை பிடித்து வைத்த எஜமானை அடையாளம் காட்ட கூட உரிமை இல்லை. ஆனால் மோடி தனது மனைவியை திருமணத்தை மறைத்த விசயம் தனிப்பட விருப்பமாம்.
அத்தோடு விடாமல் நமது பத்திரிகையாளர் வலியுறுத்தவே, “சரி, நான் பேசணும், அவ்வளவுதானே. கேட்டுக்கோங்க. என் கணவர் குஜராத் முதல் அமைச்சர் ஆனதில  எனக்கு ரொம்ப சந்தோஷம். அவர் நாட்டின் பிரதமராகவும் ஆகணும்னு நான் பகவானிடம் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்” என்றிருக்கிறார்.
“பற்றி எரிகிற குஜராத்தை கட்டுப்படுத்த தெரியாத அவரையா நாட்டின் பிரதமர் ஆக வேண்டும் என்கிறீர்கள்” என்று கேட்ட நிருபரிடம், பாரத நாரீகளின் அடிமை தர்ம விசுவாசத்தின்படி “அவர் ஒத்தை ஆளா அவரால் என்ன செய்ய முடியும்? முடிஞ்சதை செஞ்சுகிட்டு இருக்கார். இருந்தாலும், எனக்கு என்ன தெரியும். நான் ஒரு அரசாங்கத்தை எப்பவாவது நடத்தியிருக்கேனா என்ன?” என்றிருக்கிறார் அந்த பெண்.
அப்போது மோடியின் மனைவி மாத வாடகை ரூ 100 கொடுத்து பாத்ரூம்-டாய்லெட் வசதி கூட இணைக்கப்படாத ஒற்றை அறையில் வாழ்ந்து வந்திருக்கிறார். “மாதம் ரூ 10,000 சம்பளம் கிடைக்கிறது. பெரிய வீடு ஒன்றை எடுக்கலாமே” என்று கேட்டால், “ஒரு பெண் தனியாக வாழ்ந்தால், அக்கம்பக்கம் உள்ளவர்களைப் பற்றியும் கவலைப்பட வேண்டியிருக்கிறது. அதுதான் முக்கியம், வீட்டின் அளவு இல்லை” என்கிறார் அவர். இப்படி ஒரு பெண்ணை கொட்டடிச் சிறையில் அடைத்து வைத்து தனது இமேஜ்ஜை பாதுகாத்த அயோக்கியர் பிரதமரானால் பெண்கள் குறித்தும், அவர்களது பிரச்சினைகள் குறித்தும் எப்படி பார்ப்பார்?
வடோதராவில் வேட்புமனு தாக்கல் செய்யும் மோடி
வடோதராவில் வேட்புமனு தாக்கல் செய்யும் மோடி
இப்போது வேட்புமனுவில் யசோதாபென்னை மோடி தன் மனைவியாக குறிப்பிட்ட பிறகு,  பத்திரிகையாளர்கள் யசோதாபென் வசிக்கும் கிராமத்துக்கு விரைந்த போது அவர் ஊரில் இல்லை. ஏதோ புனித யாத்திரைக்கு அவர் கிளம்பி போய் விட்டதாக சொல்லப்பட்டது. “மோடி பிரதமர் ஆவதற்காக யசோதாபென் காலில் செருப்பு அணியாமல் ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டும் சாப்பிட்டு விரதம் இருந்ததாக” யசோதாபென்னின் அண்ணன் கமலேஷ்மோடி கூறியிருக்கிறார். அல்லது தற்போது நிறைய ஊடகங்கள் வருமென்பதால் யசோதா பென்னை கிட்டத்தட்ட எங்கோ தலைமறைவாக கடத்தி கொண்டு சென்றிருக்கிறார்கள் என்பது மட்டும் தெரிகிறது.
பத்திரிகையாளர்களிடம் பேசிய நரேந்திரமோடியின் சகோதரி வாசந்தி “நரேந்திரா, யசோதாவை தனது மனைவி என்று வெளிப்படையாக அறிவித்திருக்கிறார். யசோதாபென்னின் பிரார்த்தனைகள் வீண் போகவில்லை” என்று கூறியிருக்கிறார். அதாவது, கணவர் ஏதோ அரசியல் கட்டாயங்களுக்காக தன்னை மனைவி என குறிப்பிட்டு விட்டதோடு ஜென்ம சாபல்யம் அடைந்து விட்டதாக ஒரு மனைவி போற்ற வேண்டும் என்பதுதான் மோடியின், ஆர்.எஸ்.எஸ் வகைப்பட்ட பாரதம் பெண்களுக்கு அளிக்கும் ‘வளர்ச்சி’ப் பாதை.
மதவெறியோடு ஆணாதிக்கவெறியும் நிலவும் கட்சியில் உள்ள பெண்களான தமிழிசை சவுந்தரராஜனும், வானதி சீனிவாசனும், சுஷ்மா சுவராஜூம் என்ன சொல்வார்கள்? கொல்லப்பட்ட, வன்புணர்ச்சி செய்யப்பட்ட இசுலாமிய, கிறித்தவ பெண்களின் துயரங்களை உணராத இந்தப் பெண்கள் இதில் மட்டும் யசோதாவுக்காக குரல் கொடுப்பது சாத்தியமே இல்லை. 2004-ம் ஆண்டு சோனியா காந்தி மட்டும் நாட்டின் பிரதமர் ஆகி விட்டால், தலையை மொட்டை அடித்துக் கொண்டு, வெள்ளை உடை உடுத்தி, வேர்க்கடலை மட்டும் சாப்பிட்டு விதவையாக துக்கம் அனுசரித்து போராடப் போவதாக அறிவித்த பார்ப்பனீய பெண் அடிமைத்தனத்தை கடைப்பிடிக்கும் சுஷ்மா சுவராஜ், மோடி செய்தது சரிதான் என்று பேசுவார்.
மோடியின் சொந்த மாவட்டமான மேசானாவில் 1,000 ஆண் குழந்தைகளுக்கு பெண் குழந்தைகளின் எண்ணிக்கை 762 என்பது நாட்டிலேயே குறைவான விகிதமுடைய நகர்ப்புறங்களில் ஒன்று. அதாவது, பெண்களை மதிக்கும் சமூகத்தில் 1,000-க்கு 1,000 என்று இருக்க வேண்டிய விகிதம், மோடியின் சொந்த மாவட்டத்தில் ஆயிரத்துக்கு 238 பெண் குழந்தைகள் சமூக கொடூரங்களால் இல்லாமல் ஒழிக்கப்படுகிறார்கள். மோடியின் ஆர்.எஸ்.எஸ் பாணி வல்லரசு இந்தியாவில் பெண்களின் இடம் இதுதான் என்று புரிந்து கொள்ள வேண்டும்.
யசோதாபென் பற்றிய குறும்படம் (குஜராத்தியில்)
தன் மனைவி எளிமையான வாழ்க்கை வாழும் போது, நாட்டு மக்களுக்காக உழைத்துக் கொண்டிருந்த தலைவன் மோடி என்று மோடி ரசிகர்கள் புல்லரித்து கொள்ளலாம். ஆனால், இந்த காலகட்டத்தில், ‘சாய்வாலா’வாக (டீக்கடைக்காரராக) வாழ்க்கையைத் தொடங்கிய மோடி தனது தனிப்பட்ட பயன்பாட்டுக்காக இத்தாலியிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட “புல்காரி” கண்ணாடிகள், ஸ்விட்சர்லாந்திலிருந்து தருவிக்கப்பட்ட “மொவாடோ” கைக்கடிகாரங்கள், இத்தாலியின் “மோன்ட்பிளாங்க்” பேனாக்கள், அகமதாபாத்தில் மேட்டுக்குடியினருக்கு சிறப்பாக துணி தைத்துக் கொடுக்கும் அகமதாபாத்தின் “ஜேட் புளூ” உருவாக்கிய “மோடி குர்த்தா” பிராண்டட் சூட்டுகள் என்று லட்சக்கணக்கில் செலவு செய்து கொண்டிருந்தற்கெல்லாம் என்ன பொருள்?
ஆம். மோடி தனது பிரம்மச்சாரியத்தின் மகத்துவத்திற்காக மட்டும் அந்த பெண்ணை துன்புறுத்தவில்லை. தனது மேட்டுக்குடி இமேஜுக்கு பொருத்தமாக அந்த நாட்டுப்புறத்து பெண் பொருந்த மாட்டார் என்பதும் ஒரு காரணம்.
ஏழையின் கணவர் மோடி
நான் ஏழ்மையில் வளர்ந்தவன், வறுமையை அறிந்தவன்
1. டிசைனர் ஆடைகள்
2. ரூ 150 கோடி செலவிலான அலுவலகம்
3. Z+ பாதுகாப்பு
4. வெளிநாட்டு கண்ணாடிகள்
ஆண்டவன் எல்லோரையும் இப்படி ஏழையாக படைக்க மாட்டானா!
கிராமத்தில் ஒற்றை அறையில் தனிமை வாழ்க்கை நடத்தி வந்த கால கட்டத்தில் யசோதாபென்னை பள்ளியில் சந்தித்து பேச பள்ளி நிர்வாகம் அனுமதிக்காது. பள்ளி நேரம் முடிந்து அவர் வெளியில் வந்தாலும் கண்காணிப்புக்கு குண்டர் படை இருக்கும். யசோதாபென் யாரிடமும் எதுவும் பேசினாலும் காந்திநகரில் உள்ள மோடியின் அலுவலகத்துக்கு தகவல் சொல்லப்பட்டு விடும்.
2002-ம் ஆண்டு அவரை சந்திக்கப் போன தர்சன் தேசாய் அலைந்து திரிந்து, களைப்பாக நள்ளிரவில் அகமதாபாத்தில் தனது வீட்டுக்கு வந்து சேர்கிறார். சிறிது நேரத்திலேயே மோடியிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது.
“ஒனக்கு என்னதான் வேணும்?” என்கிறது அந்த இறுக்கமான குரல்.
“என்ன கேக்கறீங்கன்னு புரியலையே”
“ஒன்னோட பேப்பர்ல என்னை எதிர்த்து நிறைய எழுதறீங்க. அதை எல்லாம் பொறுத்துக்கிட்டேன். இன்னைக்கு என்ன செஞ்சுகிட்டு இருந்தேன்னு எனக்கு தெரியும். இன்னைக்கு நீ நடந்து கிட்டது அளவு மீறி போயிருக்கு. அதனால்தான் ஒனக்கு என்ன வேணும்னு கேட்கிறேன்”
கொஞ்சம் நெர்வஸ் ஆன தர்சன் தேசாய் “அப்படி எதுவும் இல்லீங்க, பத்திரிகை பத்தி என்ன பேசணுமோ எங்க ஆசிரியர்கிட்ட பேசிக்குங்க”
“சரி, நல்லா யோசிச்சிக்கோ”. என்று இணைப்பை துண்டித்திருக்கிறார் மோடி.
பிராமன்வாடாவில் தர்சன் தேசாயை துரத்திய குண்டர்கள் அவர்களது தலைவர் மோடிக்கு தகவல் சொல்லியிருக்கிறார்கள். தர்சன் தேசாயின் நகர்வுகளை தொடர்ந்து கண்காணித்து சரியாக வீட்டுக்கு வந்து சேரும் போது மோடிக்கு தகவல் போயிருக்கிறது. வீட்டில் அச்சுறுத்த வேண்டும் என்று போன் போட்டு பேசியிருக்கிறார்.
தர்சன் தேசாய்க்கு முன்பு இது குறித்து எழுதும்படி பொறுப்பு தரப்பட்ட இரண்டு நிருபர்கள் அதை செய்து முடிக்காமல் விட்டிருந்ததற்கு இத்தகைய மோடி பாணி அன்பான விசாரிப்பு கூட காரணமாக இருந்திருக்கலாம்.
ஆனால், பார்ப்பனீய பெண்ணடிமைத்தனத்தை கோட்பாடாகவே கடைப்பிடிப்பது, கொடூரமான போலீஸ் ஆட்சியை நடத்தி வருவது, சிறுபான்மை மக்களையும், தொழிலாளர்களையும் ஒடுக்கி வருவதைப் பற்றியெல்லாம் யாரும் கவலைப்படக் கூடாது, மோடி (கார்ப்பரேட்டுகளுக்கு) ‘வளர்ச்சி’யை தருகிறார் என்பதுதான் முக்கியம் என்று பல்வேறு அல்லக்கைகள் ஓதி வருகின்றனர்..
ஆர்.எஸ்.எஸ் விதிகளின் படி திருமணமாகியிருந்தால் ஒருவர் முழு நேர பிரச்சாரக் தகுதியை இழந்து விடுவார். ஸ்வயம் சேவகர்களிடையே பிரச்சாரக்குகளின் ஒளிவட்டம் இத்தகைய பிற்போக்கான ‘ஒழுக்க’ வாதத்தால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஆரம்பகாலத்தில் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் தனது பதவியை விட விரும்பாத மோடி தனது திருமணம் பற்றிய தகவலை ரகசியமாக வைத்திருந்திருக்கிறார்.
யசோதாபென்
யசோதாபென்
கட்சியில் பல உள்ளடி வேலைகளை செய்து சங்கர்சிங் வகேலா, கேசுபாய் பட்டேல் போன்ற பழம் பெருச்சாளிகளை ஓரம் கட்டி கடாசி விட்டு முதலமைச்சராக நியமனம் பெற்ற மோடி,  சட்ட மன்ற தேர்தல்களில் போட்டியிடும் போது வேட்புமனுவில் தனது திருமண உறவு பற்றிய விபரங்களை குறிப்பிடாமல் விட்டு வந்திருக்கிறார். “நான் ஒற்றை ஆள். எனக்கு முன்னேயும், பின்னேயும் குடும்பம் என்று யாரும் இல்லை. நான் தேசத்துக்காகத்தான் அர்ப்பணிப்புடன் பணி செய்கிறேன்” என்று சவடால் அடிப்பதையும் செய்யத் தவறவில்லை. அல்லது திருமணம் செய்து தலைவரானால் ஊழல் செய்தே தீருவார்கள் என்பது இதன் உட்கிடக்கை. அதன்படி பாஜகவில் உள்ள குடும்பம் குட்டிகளாக வாழும் தலைவர்கள் பலரும் ஊழல்வாதிகள் என்று பொருள் கொள்ள வேண்டுமாம்.
ஆனால், மாநில காவல் துறையையும், ‘பயங்கரவாத’ தடுப்புப் பிரிவையும், உளவுத் துறையையும் ‘பிரம்மச்சாரியான’ முதல்வரின் விருப்பப்படி ஒரு பெண்ணை பின்தொடர பயன்படுத்தலாம். இதை ஒரு  பிரம்மச்சாரி பிரச்சாரக் செய்வதை ஆர்.எஸ்.எஸ்சின் விதிகள் தடை செய்யவில்லை. திருமண விவகாரம் வெளியான மாதிரி இந்த பின்தொடருதல் விவகாரமும் சந்தி சிரிப்பதற்குள் பாஜகவே அதை முன் வந்து உண்மையை ஒத்துக் கொள்வது நல்லது. ஏதும் சிடி கிடி இருந்தால் பிறகு அதுதான் உலகத்தில் நம்பர் ஒன் ஹிட்டாகிவிடும். இருப்பினும் அதையும் சாதனையாக கூட சொல்வார்கள் இந்துமதவெறியர்கள்.
இந்நிலையில்தான் நரேந்திர மோடி வடோதரா நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக தாக்கல் செய்த வேட்பு மனுவில் திருமணம் பற்றிய கேள்விக்கு எதிராக திருமணமானவர் என்று எழுதி விட்டு மனைவியில் சொத்து விபரங்களைப் பற்றி தெரியவில்லை என்று குறிப்பிட்டிருக்கிறார்.
உண்மையை கூறாமல் விட்டு விட்டால் வேட்பு மனு நிராகரிக்கப்படவோ, அல்லது வெற்றி பெற்று இருந்தால் பதவியையே இழக்க நேரிடலாம் என்பதால் வேறு வழியில்லாமல், திருமணம் ஆனவர் என்றும், மனைவியின் பெயரையும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில் வெளிப்படுவது என்ன? பார்பனியம் பெண்களை எப்படி நடத்துமோ, பார்க்குமோ அதைத்தான் மோடி செய்துள்ளார். இந்த பச்சையான ஆணாதிக்கத்தை முதலாளித்துவ சுதந்திரத்தை வலியுறுத்துவோர் தனிநபர் உரிமை என்று மடைமாற்றி வருகின்றனர். அந்த வகையில் முதலாளித்துவமும், பார்ப்பனியமும் இணைந்திருப்பதும், மோடியை கார்ப்பரேட் கும்பல் ஆதரிப்பதும் வேறு வேறு அல்ல.
எனவே எக்கச்சக்கமாகச் சிக்கிக் கொள்ளும் வரை, மோடி சொக்கத்தங்கம்தான். அல்லது  யோக்கியன் வர்றான் செம்பை எடுத்து உள்ளே வை என்றும் கூட சொல்லலாம்.

கருத்துகள் இல்லை: