வியாழன், 17 ஏப்ரல், 2014

ஆழ்துளை கிணற்றில் குழந்தைகள் விழுவதை தடுப்பது எப்படின்னு இன்னும் ஆராய்ச்சி பண்ணிக்கிட்டு இருக்காங்களாம்


25 மணி நேர போராட்டத்துக்கு பிறகு ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சடலமாக மீட்பு

தமிழகத்தில் ஆழ்துளை கிணற்றில் குழந்தைகள் தவறி விழுந்து இறக்கும்
சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. இதை தடுப்பது எப்படி என்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் தலைமை செயலகத்தில் நேற்று நடைபெற்றது. தமிழக அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். தமிழகத்தின் பல்வேறு இடங்களில் விவசாய நிலங்கள் மற்றும் வீடுகளில் தண்ணீருக்காக 200 அடி முதல் 300 அடி வரை ஆழ்துளை குழாய் கிணறு (போர்வெல்) அமைக்கின்றனர். இவ்வாறு போர்வெல் தோண்டும் இடங்களில் தண்ணீர் இல்லை என்றால், குழியை மூடாமல் அப்படியே விட்டுவிடுகிறார்கள். இதனால் விவசாய நிலங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களின் குழந்தைகள், குறிப்பாக 2 முதல் 3 வயது வரை உள்ள குழந்தைகள், அந்த ஆழ்துளை கிணற்றின் விழ நேரிடுகிறது. இப்படி சுமார் 6 முதல் 8 இஞ்ச் அகலமே உள்ள ஆழ்துளை கிணற்றில் குழந்தைகள் விழுவது தமிழகத்தில் தொடர்கதை ஆகிவிட்டது. ஆழ்துளை கிணற்றில் குழந்தைகள் விழுவதை தடுப்பது எப்படின்னு இன்னும் ஆராய்ச்சி பண்ணிக்கிட்டு இருக்காங்களாம்
இவ்வாறு தவறி விழும் குழந்தைகளை, பல மணி நேரம் போராடியும் உயிருடன் மீட்க முடிவதில்லை. கடந்த சில தினங்களுக்கு முன்கூட திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோயில் அருகே விவசாய நிலத்தில் ஆழ்துளை கிணற்றில் 2 வயது குழந்தை விழுந்தது. மீட்பு குழுவினரின் தீவிர முயற்சியாலும், அதிநவீன ரோபோ கருவியின் உதவியாலும் அந்த குழந்தை அதிர்ஷடவசமாக உயிருடன் மீட்கப்பட்டது. ஆனால் இந்த சம்பவம் நடந்த மறுநாளே, திருவண்ணாமலை அருகே மீண்டும் ஒரு குழந்தை சுமார் 300 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்து, 15 அடியில் சிக்கி கொண்டது. அந்த குழந்தையை நேற்று முன்தினம் பகலில் இருந்து, நேற்று வரை போராடியும் காப்பாற்ற முடியவில்லை.

இதுபோன்ற ஆழ்துளை கிணற்றை தகுந்த மூடியை கொண்டு மூடாமல், அதற்கு பதில் கோணி பையால் மூடுகின்றனர். அவ்வாறு மூடப்படும் கோணி பை மக்கி போகிறது. குழி இருப்பது தெரியாமல் குழந்தைகள் ஆழ்துளை கிணற்றில் விழ நேரிடுகிறது. இதுகுறித்து பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாததே விபத்துக்கு காரணம் என்று சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வந்தனர். இதுபோன்ற விபத்து ஏற்படாமல் இருப்பதற்காகவும், சம்பந்தப்பட்ட விவசாய நிலத்துக்கு சொந்தமானவர் மீதும், போர்வெல் நிறுவனம் மீதும் கடும் நடவடிக்கை எடுப்பது குறித்தும் தலைமை செயலகத்தில் நேற்று மாலை, தலைமை செயலாளர் மோகன் வர்க்கீஸ் சுந்தர் தலைமையில் உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் உள்துறை செயலாளர் அபூர்வ வர்மா, டிஜிபி ராமானுஜம், தீயணைப்புதுறை உயர் அதிகா£ரிகள், மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறாமல் இருப்பது குறித்தும், இதை தடுக்க நடவடிக்கை எடுப்பது குறித்தும் நீண்ட நேரம் ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் விரைவில் வெளியாகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து தலைமை செயலகத்தில் விசாரித்தபோது, ‘‘விவசாய நிலம் மற்றும் வீடுகளுக்கான ஆழ்துளை கிணறு அமைக்கும்போது, சம்பந்தப்பட்ட அரசு துறைகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். விபரீத சம்பவம் நடந்தால் ஆழ்துளை குழாய் கிணறு போட ஏற்பாடு செய்தவரும், அந்த போர்வெல் நிறுவனமும்தான் பொறுப்பேற்க வேண்டும்.

அவர்களுக்கு கடுமையான தண்டனை விதிப்பது குறித்தும், சங்கரன்கோயிலில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை உயிருடன் மீட்க உதவிய ரோபோ கருவியை மாவட்டத்தில் உள்ள ஒரு தீயணைப்பு நிலையத்துக்கு வாங்குவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது‘‘ என தெரிவித்தனர். இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் கிடாம்பாளையம் கிராமம் காந்தி நகர் பகுதியில் தோண்டப்பட்ட ஆழ்துளை கிணற்றில் விழுந்து ஒன்றரை வயது குழந்தை சுஜித் இறந்ததற்கு முதல்வர் ஜெயலலிதா தனது இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும் அந்த குழந்தையின் குடும்பத்துக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.1 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை: