சென்னை: பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை எதிர்க்கும்
விஷயத்தில் அதிமுகவும், திமுகவும் திடீர் கூட்டணி அமைத்துள்ளன.
1967ம் ஆண்டு அண்ணா தலைமையில் காங்கிரஸ் வீழ்த்தப்பட்டு திமுக தமிழக ஆட்சி
அரியணையில் ஏறியது. அதன்பிறகு திமுகவிலிருந்து எம்ஜிஆர் தலைமையில் அதிமுக
உருவானது. அப்போது முதலே, திராவிட கொள்கையை பேசியே கடந்த 47 ஆண்டுகளாக
இவ்விரு கட்சிகளும்தான் தமிழகத்தில் ஆட்சி நடத்தி வருகின்றன.
தேர்தல் நேரத்தில் மட்டும் பழைய சோற்றுக்கு சேர்த்துக்கொள்ளும்
ஊறுகாயைப்போல காங்கிரசை இரு திராவிட கட்சிகளும் தொட்டுக்கொள்வது வழக்கம்.
காமராஜருக்காகவே காங்கிரசுக்கு வாக்களித்து பழக்கப்பட்டுள்ள தென்மாவட்டத்து
முதியவர்களால் காங்கிரஸ் நானும் இருக்கிறேன் என்பதை காண்பித்துக்
கொண்டிருந்தது.
தேர்தல் நேரத்து கூட்டணியில் எந்த கட்சியுடன் காங்கிரஸ் உள்ளதோ அந்த
சின்னத்துக்கே வாக்களித்து காங்கிரஸ்காரர்கள் பழக்கப்பட்டுவிட்டார்கள்.
ஆனால் இலங்கை பிரச்னை தமிழக காங்கிரசாரின் பிழைப்பில் மண்ணை
அள்ளிப்போட்டுவிட்டது. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக
தேய்ந்துகொண்டுள்ளது அக்கட்சி.
காங்கிரசுக்கே இந்த நிலை என்றால் அஸ்திவாரமே இல்லாத பாஜவின் நிலை
அந்தோ பரிதாபமாகத்தான் இருந்தது. ஆனால் தேமுதிக, மதிமுக, பாமக என
தமிழகத்தின் இரண்டாம்கட்ட அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்துவிட்டது பாஜக. அட..
தேர்தல் முடிவு ஒருபக்கம் கிடக்கட்டும், பாஜவை நம்பி இந்த அளவுக்கு ஒரு
கூட்டணி அமைந்ததையே தமிழக பாஜவினர் வரலாறு காணாத வெற்றியாக கொண்டாடி
வருகிறார்கள்.
மத்தியில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அனுசரித்து செல்வதுதான்
நல்லது என்ற நிலைப்பாட்டில் இருந்த திமுக, மோடியை எதிர்த்து எதற்கு வீணாக
வம்பில் மாட்டிக் கொள்வானேன் என்ற 'தொலைநோக்கு சிந்தனையுடன்' முதலில்
கப்சிப் என்று இருந்தது. கருணாநிதி ஒருபடி மேலேயே போய், மோடி எனது நண்பன்,
நல்ல உழைப்பாளி என்று சான்றிதழும் அளித்து தலை சுற்ற வைத்தார்.
ஆனால் இப்படியே பேசிக்கொண்டிருந்தால் சிறுபான்மையினர் ஓட்டுக்கள்
நமக்கு கிடைக்காது, தொங்கு நாடாளுமன்றம் அமைந்தாலும் மோடி அதிமுகவைதான்
கூட்டணிக்கு அழைப்பாரே தவிர திமுகவை கிடையாது என்ற உண்மையை ஸ்டாலின் மெல்ல
புரிய வைத்ததன் விளைவு, மதசார்பற்ற கோஷத்தை கருணாநிதி
கையிலெடுத்துவிட்டார்.
எந்த காரணத்தை கொண்டும் தேர்தல் முடிந்த பிறகு பாஜகவுடன் கூட்டணி
அமைப்பதில்லை என்றும் சூளுரைத்தார். மதில்மேல் பூனையாக இருந்த திமுக ஒரு
முடிவுக்கு வந்ததால் அவர்கள் எதிர்பார்த்தது போல சிறுபான்மையினர் மத்தியில்
ஆதரவு அதிகரித்துள்ளது.
எனவே மின்வெட்டு பிரச்னை, பாஜக மற்றும் மோடி எதிர்ப்புதான் திமுக
பிரசாரத்தின் ஆன்மாவாக மாறிப்போயுள்ளது.
தேர்தல் அறிவிப்பு வெளியாகும் முன்பே செங்கோட்டை நோக்கி புறப்பட
தயாராக இருந்தது அதிமுக ரயில். 'வருங்கால பிரதமர் அம்மா வாழ்க' என
ரத்தத்தின் ரத்தங்கள் போட்ட கோஷம் விண்ணை பிளந்தது. தேர்தல் அறிவிப்பு
வெளியாகி பிரசாரமும் ஆரம்பித்த பிறகு ரயிலின் ஒவ்வொரு பெட்டிகளாக கழன்று
இப்போது, மினி பஸ் போல காட்சியளிக்கிறது பிரதமர் கனவு.
பிரசாரத்தின்போது ஜெயலலிதா கூட, அதிமுக சுட்டிக்காட்டுபவர்தான் பிரதமராக
வேண்டும், அவரிடமிருந்து தமிழகத்துக்கு நன்மைகளை பெற்றுத்தருவேன் என்று
பேசத் தொடங்கியுள்ளார். இதற்கு காரணம் எதிர்பார்த்த அளவுக்கு 40க்கு
நாற்பது தொகுதிகளை வெல்ல முடியாது என்று உளவுத்துறை அளித்துள்ள
ரிப்போர்ட்தானாம்.
அதிமுகவின் சரிவுக்கு முக்கிய காரணம், அதன் வாக்குகள் இரண்டாக
பிரிந்து பாஜக கூட்டணிக்கு செல்வதுதான் என்று முதல்வரின் கவனத்திற்கு
வந்துள்ளது. பாஜகவுக்கும், அதிமுகவுக்கும் அறிவிக்கப்படாத கூட்டணி இருந்து
வருவதாகவே மக்கள் நினைப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை மணி அடித்துள்ளது.
இதைத் தான் திமுக பொருளாளர் ஸ்டாலின் மீண்டும் மீண்டும் கூறி பெரும்
ஆயுதமாக பயன்படுத்தி வருகிறார்.
எதற்கு அதிமுகவுக்கு ஓட்டுபோட்டு, அதை வைத்து மோடியை
பிரதமராக்குவானேன்... இந்த தலையை சுற்றி மூக்கை தொடும் வேலைக்கு பதிலாக
பாஜகவுக்கே நேரடியாக ஓட்டுபோட்டுவிடலாமே' என்று அதிமுக ஆதரவாளர்கள் நினைக்க
தொடங்கியதை அறிந்து சுதாரித்துக்கொண்டார் ஜெயலலிதா. இப்படியே போனால்
மத்தியில் ஆட்சியமைப்பவர்களிடம் பேரம் பேசும் சக்தியை அதிமுக இழந்துவிடும்,
நமது அடிப்படையே ஆட்டம் கண்டுவிடும் என்று நினைத்த ஜெயலலிதா மோடியை தாக்க
ஆரம்பித்துள்ளார்.
அதிலும் திருச்சி பொதுக்கூட்டத்தில் முதன்முறையாக தாக்க ஆரம்பித்தபோது
கூட காவிரி விவகாரத்தில் பாஜக துரோகம் இழைத்துவிட்டதாக ஜாக்கிரதையாக
அடியெடுத்து வைத்த ஜெயலலிதா, கிருஷ்ணகிரி கூட்டத்தில் நேரடியாக மோடியின்
குஜராத் வளர்ச்சியையே கேள்வி கேட்க தொடங்கியுள்ளார். இனிமேல் அவரது
பிரசாரமும் மோடியை குறிவைத்து நாலுகால் பாய்ச்சலில் பயணிக்கும் என்று
எதிர்பார்க்கலாம்.
இதன் மூலம் மறைமுகமாக திமுகவும் அதிமுகவும் ஒரே கொள்கைக்காக கூட்டணி
அமைத்துவிட்டன. திராவிட கட்சிகளின் கோட்டையாக உள்ள தமிழகத்தை எக்காரணத்தை
கொண்டும் தேசிய கட்சிகளின் பிடிக்கு விட்டுவிடக்கூடாது, ஊர் ரெண்டு பட்டால்
கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்ற பழமொழியை நிரூபித்து விடக்கூடாது என்று
கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய இருவருமே உறுதி பூண்டுள்ளதைப்போல தெரிகிறது.
Read more at: http://tamil.oneindia.in
Read more at: http://tamil.oneindia.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக