சனி, 19 ஏப்ரல், 2014

அறிக்கை மூலம் மட்டுமே ராமதாஸ் கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவு

சென்னை: தமிழகத்தில் பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கூட்டணி கட்சிகளின் வெற்றிக்காக பாட்டாளி மக்கள் கட்சித் தொண்டர்களும், நிர்வாகிகளும் உழைக்க வேண்டும் என்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிக்கை மூலம் கேட்டுக்கொண்டுள்ளார்.
பா.ஜனதா கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுக, தேமுதிக மற்றும் பாஜக தலைவர்கள் தங்களது கட்சி வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியில் மட்டுமல்லாது, பாமக உள்ளிட்ட அனைத்து கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காகவும் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி ராமதாஸ் போட்டியிடும் தர்மபுரி உள்ளிட்ட தங்கள் கட்சி போட்டியிடும் இடங்களில் மட்டுமே பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இது கூட்டணியில் இடம்பெற்றுள்ள வைகோ, விஜயகாந்த் மற்றும் பாஜக தலைவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியதாக தகவல் வெளியானது.  அய்யா ரொம்பதான் கெட்டிகாரர் நிலவரம் புரிஞ்சிடுச்சு !இந்த தேர்தல் எக்கேடாவது கேட்டு தொலையட்டும் சட்டசபை தெர்தல்லை ஆவது மாம்பழ சின்னத்தை காப்பாத்த முடிவு எடுத்துட்டார்!இனி சமுதாய கூட்டணியா? திமுக கூட்டணியா ? 

இதனைத் தொடர்ந்து கூட்டணி கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்கு பாடுபடுமாறு தமது கட்சியினருக்கு வேண்டுகோள் விடுத்து ராமதாஸ் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மாநிலத்தில் அதிமுக, திமுக ஆகிய கட்சிகளும், மத்தியில் காங்கிரசும் இழைத்த துரோகங்கள் மற்றும் கொடுமைகளுக்கு கணக்கு தீர்க்கும் நாள் தான் வரும் 24 ஆம் தேதி ஆகும். தமிழகத்திற்கு எதிரான சக்திகளை வீழ்த்த வேண்டும் என்பதற்காகத் தான் பாஜக தலைமையில் பாமக, தேமுதிக, மதிமுக, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி, புதிய நீதிக் கட்சி ஆகியவை இணைந்து தேசிய ஜனநாயகக் கூட்டணி என்ற வலிமையான அணியை உருவாக்கியிருக்கின்றன.
மத்தியில் நரேந்திர மோடி தலைமையில் வலுவான ஆட்சியை அமைத்து, அதன்மூலம் தமிழகம் இழந்த உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும், தமிழகத்தைச் சீரழித்த அதிமுக, திமுக ஆகிய கட்சிகளுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் என்பது தான் தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகளின் நோக்கம் ஆகும். தமிழக மக்களின் விருப்பமும் இது தான். தமிழகத்தில் அதிமுக, திமுகவுக்கு மாற்றாக ஓர் அணி உருவாகாதா? என்று ஏங்கிக் கொண்டிருந்த மக்கள் இப்போது நாம் அமைத்துள்ள கூட்டணியை மனதார வாழ்த்தி வரவேற்கின்றனர்.
சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் நமது அணிக்கு வெற்றி என்ற பயிரை தமிழக மக்கள் விளைவித்துள்ளனர். அதை சிந்தாமல் சிதறாமல் அறுவடை செய்ய வேண்டிய மிகப்பெரிய பொறுப்பும், கடமையும் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கு உள்ளது.
தமிழகத்தில் நீலகிரி நீங்கலாக 38 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றால் தான் தமிழகத்தின் நலனுக்காக நாம் நினைப்பதையெல்லாம் சாதிக்க முடியும். அத்தகைய வெற்றிக்காக கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஒருதாய் மக்களாக கைகோர்த்து உழைக்க வேண்டும். ஊர் கூடினால் தான் தேர் இழுக்க முடியும் என்பதை உணர்ந்து தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள அனைத்துக் கட்சிகளும் வெற்றி ஒன்றே இலக்கு என நினைத்து பாடுபட வேண்டும். குறிப்பாக பாரதிய ஜனதா, தேசிய முற்போக்கு திராவிடக் கழகம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி, புதிய நீதிக் கட்சி ஆகிய கட்சிகளின் வெற்றிக்காக பாட்டாளி மக்கள் கட்சித் தொண்டர்களும், நிர்வாகிகளும் ஒருபடி கூடுதலாக உழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
அதேபோல் புதுவையில் போட்டியிடும் பாமக வேட்பாளர் ஆர்.கே.ஆர். அனந்தராமனையும் வெற்றி பெறச் செய்வதற்காக கூட்டணி கட்சிகளுடன் இணைந்து பாமகவினர் பாடுபட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன் எனக் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: