செவ்வாய், 18 மார்ச், 2014

பிரசாத் கலர் லேப் மூடப்பட்டது ! படச்சுருளுக்கு ஓர் இரங்கற்பா ! டிஜிட்டல் திரைப்படங் கள் அதிகமாக உருவாக்கப்படுகின்றன !


ஒளிப்பதிவு செய்யப்பட்ட படச்சுருளைத் திரையில் ஓடும் வகையில் புராஸஸிங் செய்து வந்தது பிரசாத் பிலிம் லேபரட்டரி. இந்தியாவில் படச்சுருள் படங்களுக்கான காலம் முடிவுக்கு வந்துள்ளதைத் தொடர்ந்து இது மூடப்பட்டது. சினிமா தொடங்கிய காலம் முதல் இருந்துவந்த பழக்கம் மாறியதால் இதுவரையான ஏற்றத்தாழ்வுகளுடன் கூடிய வாழ்வின் பாதையும் மாறிவிட்டது.
'ஆதாமிண்ட மகன் அபு'சமீப காலமாக டிஜிட்டல் திரைப்படங் கள் அதிகமாக உருவாக்கப்படுகின்றன. ஆனால் இந்தியாவின் பெரிய பிலிம் லேபரட்டரியான பிரசாத் கலர் லேப் தனது இயக்கத்தைக் கொஞ்சம் கொஞ் சமாக நிறுத்தத் தொடங்கியபோது பிலிமில் படமெடுக்கும் காலம் முடிவுக்கு வருகிறது என்னும் யதார்த்தம் நம்மைத் தாக்கியது. படச்சுருளை கேமராவில் மாட்டிப் படப்பிடிப்புக்குச் சென்று படமாக்குவார்கள். பின்னர் லேபில், கையுறை அணிந்த கைகளால் அந்தச் சுருளைக் கழுவி நெகட்டிவாகவும் பாஸிட்டிவாகவும் மாற்றுவார்கள். படச்சுருளைத் தனித்தனி காட்சிப் பிம்பங்களாக வெட்டுவார்கள். தேவையான காட்சிக் கோவையை உருவாக்குவார்கள். லேபின் இருட்டறைக் கொடியில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிம்பங்கள் அடங்கிய சுருள் ஒரு புறம் தொங்கிக் கொண்டிருக்கும். மறுபுறம் தேவையற்ற பிழையான பிம்பங்கள் அடங்கிய படச்சுருள் கிடக்கும். பின்னர் படச்சுருளில் ஒலி ஏற்றப்படும். தேவையான வண்ண மாற்ற வேலையும் நடைபெறும். இறுதி யாகத் திரையிடும் நிலையிலான படச்சுருள்கள் ரீல் பெட்டியில் அடுக்கப் பட்டுத் திரையரங்குக்கு அனுப்பப்படும். சுருண்டு கிடந்த படச்சுருள் புரொஜக்டரின் வழியே நொடிக்கு 24 பிம்பங்களாக ஓடும்போது கண்ணெதிரே திரையில் சினிமா எனும் மாயலோகம் பரவும். படச்சுருளில் சினிமா உருவாக்கப்பட்ட இந்த நூறாண்டுக் கதை முடிவுக்கு வரும் காட்சியின் பிம்பங்கள் கொஞ்சம் கொஞ்சமாக நம் கண்ணிலிருந்து மறைந்து ஞாபக அடுக்குகளில் தங்கத் தொடங்கின.
இதற்கெல்லாம் மேலாகப் படச் சுருளைக் கைகளால் தொடும்போது கிடைத்த அந்த ஸ்பரிசம், நாசி உணர்ந்த மணம் இவையெல்லாம் நினைவிலிருந்து அகலாது. இப்படிப் படச்சுருள் களோடும் திரைப்படத்தோடும் ஒட்டி உறவாடியவர்களின் வாழ்க்கையை டிஜிட்டல் சினிமா மாற்றிவிட்டது. படச்சுருளின் ரூபத்தை டிஜிட்டல் தொழில்நுட்பம் அழித்துவிட்டது.
இது தனிப்பட்ட இழப்பு அல்ல. “உண்மையிலேயே நீங்கள் அற்புதமான சில்வர் ஹேலைட் பிம்பங்களை இழந்து விட்டீர்கள், அவற்றின் தோற்றம், மதிப்பு மிக்க வண்ணக் கலவை, அவை உருவாக்கிய உணர்வு ஆகியவற்றை இழந்து விட்டீர்கள்” என்கிறார் எஸ் சிவராமன். இவர் பிரசாத் கலர் லேப் தொடங்கப்பட்ட 1976இல் அந்நிறுவனத்தில் சேர்ந்தவர்.
ஆயிரக்கணக்கான திரைப் படங்களில், நாட்டின் முக்கியமான இயக்குநர்களுக்காகவும் ஒளிப்பதிவாளர் களுக்காகவும் சிவராமன் பணியாற்றி யுள்ளார். தற்போது டிஜிட்டல் சினிமா வரவால் பிரசாத் லேப் மூடப்படுவதற்கு சாட்சியாக நிற்கிறார். டிஜிட்டல் பிம்பத்தில் ஒளித்துணுக்குகள் ஒரே நேர்கோட்டில் அமையும். ஆனால் பிலிமில் வெவ்வேறு விகிதத்தில் அமையும். எனவே பிம்பங்கள் மிக நேர்த்தியாகவும் துல்லியமாகவும் இருக்கும். டிஜிட்டல் சினிமாவை உருவாக்கக் குறைந்த காலமே தேவைப்படும். உலகத்தின் எந்த மூலையில் இருந்து வேண்டுமானாலும் விவரங்களைச் சேர்க்கலாம். எடுத்துக் காட்டாக, காட்சிகளை சென்னையில் தொகுக்கலாம். ஒலியை லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து பதிவுசெய்யலாம். டிஜிட்டலில் படச்சுருள் இல்லை என்பதால் தேவையைவிடப் பத்து மடங்குவரை அதிகமான காட்சிகளைப் படமாக்கிவிடுகிறார்கள். இதனால் படத்தொகுப்பு வேலை பெரும் சுமை யாகிறது. படச்சுருள் பயன்படுத்திப் படமாக்கியபோது ஏற்பட்ட தயாரிப்புச் செலவைவிட டிஜிட்டல் சினிமாவை உருவாக்க அதிக செலவாகிறது என்பதே உண்மை. ஏனெனில் படச் சுருள் பயன்படுத்தப்படும் மரபான கேம ராவைவிட டிஜிட்டல் சினிமாவுக்குப் பயன்படும் ஏரி அலெக்ஸா போன்ற கேமராவின் பயன்பாட்டுக் கட்டணம் அதிகம். டிஜிட்டல் சினிமாவில் தொழில்நுட்ப உதவியுடன் எடிட்டிங் மேசையிலேயே தேவையான துல்லியத்தைக் கொண்டுவர முடியும். எனவே படச்சுருளைக் கொண்டு படமாக்கியபோது ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த முக்கியத்துவம் இதில் கிடைப்பதில்லை.
டிஜிட்டல் கேமரா பயன்படுத்த எளிதாக உள்ளதென்கிறார் ஒளிப்பதிவாளர் மது அம்பாட். மேம்பட்ட தரத்தில் காட்சிகளைப் பதிவுசெய்ய முடிகிறது என்றும் அவர் கூறுகிறார். ‘ஆதாமின்ட மகன் அபு’ திரைப்படத்திற்காக 2011ஆம் ஆண்டில் தேசிய விருது பெற்ற மது அம்பாட் அப்படத்தின் காட்சிகளை ஏர்ரி டி 21 கேமராவில்தான் படம்பிடித்துள்ளார்.
டிஜிட்டல் சினிமாவிலும் பல நன்மைகள் உள்ளன. கழிவாகும் படச்சுருள் சூற்றுச்சூழலுக்கு கேடுவிளை விக்கக்கூடியது. ஆனால் டிஜிட்டல் சினிமா சுற்றுச்சூழலுக்கு உகந்தது. எடிட்டிங் வேலைசெய்யும்போது படச் சுருளைக் கவனமாகப் பாதுகாக்க வேண்டும். டிஜிட்டல் சினிமாவில் இந்தப் பிரச்சினையே இல்லை. படத்தை வெளியீடு செய்வதும் எளிது. பிரதிகளின் எண்ணிக்கைக்கான செலவு பற்றிய கவலையே இல்லை. திரையரங்குகளுக்குத் திரையீட்டிற்காகப் படங்களை அனுப்புவதும் எளிது.
முன்பு நம்மிடம் புழங்கிய வீடியோ கேஸட்டுகள் சிடி, டிவிடி, ஹெச்டி, 3டி எனப் பலவிதமான பரிமாணங்களை அடைந்துவிட்டன. எனவே ஒரு படத்தை எந்தத் தொழில்நுட்பத்தில் பாதுகாத்து வைப்பது என்பதே முடிவுசெய்யப்படவில்லை. டிஜிட்டல் சினிமாவின் அளவைத் தேவை
யான அளவுக்கு குறைத்து அதிக எண்ணிக்கையிலான படங்களைச் சேமிக்க ஹார்ட் டிஸ்க் போன்ற தொழில் நுட்பங்கள் உதவுகின்றன. ஆனால் படங்களை அழுத்தி அதன் அளவைக் குறைக்கும் செயலில் தொழில்நுட்பப் பழுதால் திரைப்படத்தில் குறைபாடு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.
டிஜிட்டல் சினிமா ஏராளமான இளைஞர்களைத் திரைப்படத் துறைக்கு இழுத்து வந்துள்ளது. மலையாளப் பட உலகம் இதற்குச் சான்றாக உள்ளது. புதிய இயக்குநர்களும் தொழில்நுட்பக் கலைஞர்களும் நடிகர்களும் திரைத்துறைக்கு வந்து வித்தியாசமான படங்களைக் கொடுத்துப் பெரிய அளவிலான வெற்றி பெறுகிறார்கள். ஏற்கனவே திரைப்படத் தயாரிப்பில் ஈடுபட்டுவரும் தயாரிப்பாளர்கள் டிஜிட்டல் சினிமாவால் பாதிப்படைந் துள்ளனர். அதிகப் பொருள் செலவில் வழக்கமான கதையமைப்பில் அவர்கள் உருவாக்கும் திரைப் படங்கள் முன்பு போல் வசூலை வாரிக்குவிப்பதில்லை. புதிய டிஜிட்டல் சினிமா உருவாக்கம் திரைப்படத்துறையில் நம்பகத்தன்மை யற்ற சூழலை ஏற்படுத்தியுள்ளதாகவும் சினிமா சந்தையைப் பாழ்படுத்துவ தாகவும் திரைப்படத் துறையினர் பலர் எரிச்சலடைகிறார்கள்.
நிறபேதம் நீக்கிய டிஜிட்டல்
கறுப்பு நிறம் கொண்டவர்களுக்கு வழக்கமான திரைப்படம் செய்துவந்த அநீதியை டிஜிட்டல் சினிமா அறவே நீக்கிவிட்டது. படச்சுருளால் உருவான திரைப்படத்தில் சருமத்தின் தோற்றத்தில் நடுநிலை காணப்படாது. கறுப்பு நிறம் கொண்ட நடிகர்கள் அடர்கறுப்பு சூட் அணிந்திருந்தால் திரையில் வெள்ளைச் சட்டையையும் பற்களையும் மட்டுமே பார்க்க இயலும். கறுப்பு நிறம் தன்மீது விழும் ஒளியை முழுமையாக உமிழாது. குறிப்பிட்ட சதவிகித ஒளியை உள்வாங்கிவைத்துக் கொள்ளும். எனவே கறுப்பு நிற நடிகர்கள் திரையில் தெரிய அதிக வெளிச்சம் தேவைப்படும். ஒளிப்பதிவாளர்கள் கறுப்பு நடிகர்களை கேமராவுக்கு முன்னர் நிறுத்தும்போது அவர்கள் உடம்பில் வாஸலின் போன்ற பொருளைத் தடவுவார்கள். அப்போதுதான் உடம்பில் படும் ஒளி பிரதிபலித்து கேமராவுக்குத் திரும்பும்.
டிஜிட்டல் கேமரா கறுப்பு நிறத்தில் காணப்படும் நுண்ணிய வேறுபாடு களையும் அப்படியே படமாக்கும் ஆற்றல் கொண்டது. மேலும் படத்தொகுப்பின் போதும் தேவையான மாற்றங்களைச் செய்ய டிஜிட்டல் தொழில்நுட்பம் கைகொடுக்கிறது. கோடாக் நிறுவனம் ஷிர்லே என்னும் விளம்பர மாடலின் சருமத்தை அடிப்படையாகக் கொண்டே தங்கள் பிலிம் ரோலின் தரத்தை நிர்ணயித்தார்கள். கறுப்பு சாக்லேட் உற்பத்தியாளர்களும், கறுப்பு நிற ஃபர்னிச்சர்களை உருவாக்குபவர்களும் தங்கள் விளம்பரப் படங்கள் தரமற்று இருக்கிறது என கோடாக் நிறுவனத்திடம் புகார் செய்தனர். அதன் பின்னரே கறுப்பு நிறத்தைப் படமாக்கும் வகையில் அவர்கள் படச்சுருளைத் தயாரித்தார்கள். டிஜிட்டல் சினிமா என்னும் தொழில்நுட்ப மாற்றம் இந்த வரலாற்றுப் பிழையைப் போக்கிவிட்டது.
நீண்ட காலத்துக்குப் பாதுகாக்கும் வசதி இன்று டிஜிட்டல் தொழில் நுட்பத்திற்கு வசப்படாமல் இருக்கலாம். ஆனால் கறுப்புத் தோல்களின் அடியில் மறைந்துகிடந்த உணர்வுகளை டிஜிட்டல் தொழில்நுட்பமே இன்று வெளிச் சத்துக்குக் கொண்டுவருகிறது.
©‘ஃப்ரண்ட் லைன் 2014’ தமிழில். ந.செல்லப்பா  tamil.thehindu.com

கருத்துகள் இல்லை: