ஞாயிறு, 16 மார்ச், 2014

Digital ஆயிரத்தில் ஒருவன் படுதோல்வி ! அதிர்ச்சியில் திரையுலகம்! நிச்சயமாக எதிர்பார்க்கப்பட்ட வெற்றி மிஸ்ஸிங் !

மதுரை: பெரும் எதிர்பார்ப்புடன் மறு வெளியீடு செய்யப்பட்ட எம்.ஜி.ஆர். - ஜெயலலிதா நடித்த ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் மதுரையில் தோல்வி அடைந்துள்ளதாம். படத்தைத் திரையிட்ட தியேட்டர்களில் தற்போது அவற்றை எடுத்து வருகின்றனராம். தேர்தல் ஆணையத்தின் கடும் கெடுபிடிகளுக்கிடையே நேற்று முன்தினம் வெளியானது டிஜிட்டலில் புதுப்பிக்கப் பட்ட ‘ஆயிரத்தில் ஒருவன்' படம். இப்படத்தை ஒருமுறைப் பார்ப்பதென்பது பத்து பொதுக்கூட்டங்களைப் பார்ப்பதற்குச் சமம் என அதிமுக தொண்டர்கள் தெரிவித்து வந்தனர். வார இறுதியில் கூட்டம் குவியும் என எதிர்பார்த்த தியேட்டர் ஓனர்களுக்கு ஏமாற்றம் தான் கிடைத்துள்ளதாம். காரணம் படம் ரிலீசான பெரும்பான்மையான தியேட்டர்கள் ஈயோடிக் கிடக்கின்றனவாம்.
1965ம் ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் படம்தான் ஆயிரத்தில் ஒருவன். இந்தப் படத்தை தற்போது டிஜிட்டல் முறையில் புதுப்பித்து வெ்ளியிட்டுள்ளனர்.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நடித்த இப்படம் மதுரையில் தோல்வி அடைந்துள்ளது. இது திரையுலகினருக்கு ஆச்சரியத்தைக் கொடுத்துள்ளது.  
காரணம், பாக்ஸ் ஆபீஸில் ஒரு படம் ஹிட்டாகுமா இல்லையா என்பதை நிர்ணயம் செய்யும் முக்கிய மார்க்கெட் தளமான மதுரையிலேயே, அதுவும் எம்.ஜிஆருக்கும், அதிமுகவுக்கும் பெரும் திரளான ரசிகர் பட்டாளம் உள்ள ஊரில் இப்படம் தோல்வி அடைந்திருப்பதால் தியேட்டர்காரர்கள் அதிர்ச்சியடைந்துள்ளார்களாம்.
இதில் ஒரு தியேட்டரில் படம் மறு வெளியீடு செய்யப்பட்ட அடுத்த நாளே ஒரு காட்சிக்கு போதிய அளவில் ஆட்கள் வராததால் அந்த ஷோவையே ரத்து செய்யும் நிலை ஏற்பட்டதாம்
இதுகுறித்து தமிழ் ஜெயா தியேட்டரின் மேலாளர் பாண்டியன் கூறுகையில், நூன் ஷோவுக்கு வெறும் 3 பேர் வந்திருந்தனர். சரி, தொடர்ந்து வருவார்கள் என்ற நம்பிக்கையில் படத்தைப் போட்டோம். ஆனால் யாருமே வரவில்லை. இதனால் அரை மணிநேரத்திலேயே படத்தை நிறுத்தி விட்டு ஷோவைக் கேன்சல் செய்து 3 பேரிடமும் பணத்தைத் திரும்பக் கொடுத்து அனுப்பி விட்டோம்.
பழம்பெரும் இயக்குநர் பி.ஆர்.பந்துலு இயக்கத்தில் உருவான படம்தான் ஆயிரத்தில் ஒருவன். இதில் சர்வாதிகார முதலாளியை எதிர்த்துப் போராடி கொத்தடிமைகளை மீட்கும் கதாபாத்திரத்தில் எம்.ஜிஆர். நடித்திருப்பார். நம்பியார்தான் வில்லன்.
இந்தப் படம்தான் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் இணைந்து நடித்த முதல் படமும் ஆகும். எம்.ஜி.ஆரின் திரையுலக வாழ்க்கையில் மிகப் பெரிய வெற்றி பெற்ற படம் இது. மேலும் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா ஜோடி முதல் படத்திலேயே ஹிட் ஆனதும் இதில்தான்.
தமிழகம் முழுவதும் இந்தப் படம் 120 தியேட்டர்களில் போடப்பட்டுள்ளது. ஆனால் அதில் எத்தனை தியேட்டர்களில் தற்போது இது ஓடி வருகிறது என்பது தெரியவில்லை.
இந்தப் படத்திற்கு முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்து செய்தி வெளியிட்டிருந்ததும் நினைவிருக்கலாம். எனவே அதிமுகவினர் பெருமளவில் படத்தைப் பார்க்க வருவார்கள் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் மதுரைக்காரர்கள் கைவிட்டு விட்டது திரையரங்குகளை அதிர வைத்துள்ளது.
மற்ற ஊர்களின் நிலவரம் தெரியவில்லை. ஆனால் நிலைமை சரியில்லை என்றே செய்திகள் வருகின்றன.
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை: