தமிழக பாரதிய ஜனதா கூட்டணியில் தேமுதிக 14, பா.ம.க. 8, பா.ஜ.க. 8,
ம.தி.மு.க.7 தொகுதிகளில் போட்டியிடும் என்று பாஜகவின் தேசியத் தலைவர்
ராஜ்நாத்சிங் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
லோக்சபா தேர்தலுக்கான பாஜக கூட்டணியில் மதிமுக, தேமுதிக, பாமக, கொங்குநாடு
மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி ஆகியவை இணைந்துள்ளன. இந்த
கட்சிகளுடனான தொகுதிப் பங்கீட்டு இழுபறி தமிழக தேர்தல் அரசியல்
வரலாற்றிலேயே இல்லாதவகையில் உச்சபட்சமான குழப்பமாக இருந்தது.
இதனால் பாரதிய ஜனதா கூட்டணி பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இன்று..நாளை என பல மாதங்களாக இழுபறியாகவே இருந்து வந்தது. இந்த நிலையில்
ஒருவழியாக பல அதிருப்திகளுக்கு மத்தியில் பாஜக கூட்டணிக் கட்சிகளிடையே
தொகுதிப் பங்கீடு முடிந்துள்ளது. இதைத் தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சியின்
கூட்டணி பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவதற்காக பாஜக தேசியத்
தலைவர் ராஜ்நாத் சிங் இன்று பிற்பகல் சென்னை வந்தார்.
சென்னை விமான நிலையத்தில் பாஜக தலைவர்கள் பொன். ராதாகிருஷ்ணன் இல. கணேசன்
ஆகியோர் ராஜ்நாத்சிங்கை வரவேற்றனர். அதேபோல் பாஜக கூட்டணிக் கட்சியான
மதிமுகவின் பொதுச்செயலர் வைகோவும் தொண்டர்களுடன் சென்று ராஜ்நாத்சிங்கை
வரவேற்றார்.
பின்னர் சென்னையில் ஹோட்டல் ஒன்றில் ராஜ்நாத் சிங்கை கூட்டணிக்
கட்சித் தலைவர்கள் சந்தித்துப் பேசினர். தேமுதிகவின் தலைவர் விஜயகாந்த்,
மதிமுகவின் பொதுச்செயலர் வைகோ, பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர்
அன்புமணி ராமதாஸ், தலைவர் ஜி.கே. மணி, இந்திய ஜனநாயகக் கட்சியின்
பாரிவேந்தர், புதிய நீதிக் கட்சியின் ஏ.சி. சண்முகம், கொங்கு நாடு மக்கள்
தேசியக் கட்சியின் ஈஸ்வரன் உள்ளிட்டோர் ராஜ்நாத்சிங்குடன் ஆலோசனை
நடத்தினர்.
இந்த ஆலோசனை முடிவடைந்த பின்னர் அனைத்து கூட்டணிக் கட்சித் தலைவர்களும்
கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர் அப்போது செய்தியாளர்களிடம் பேசிய
ராஜ்நாத்சிங் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தேமுதிக,
பாட்டாளி மக்கள் கட்சி, மதிமுக, இந்திய ஜனநாயகக் கட்சி, கொங்குநாடு மக்கள்
தேசியக் கட்சி ஆகியவை இடம்பெற்றுள்ளதாக அறிவித்தார்.
தொகுதி பங்கீடு- தேமுதிகவுக்கு 14
அத்துடன் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் கட்சிகளுக்கான
தொகுதிப் பங்கீட்டு விவரத்தையும் ராஜ்நாத்சிங் அதிகாரப்பூர்வமாக
வெளியிட்டார்.
பாஜக அணியில்
தேமுதிக- 14
பாமக -8
பாஜக- 8
மதிமுக- 7
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி- 1
இந்திய ஜனநாயக கட்சி- 1 தொகுதிகளில் போட்டியிடும் என்று அறிவித்தார்
ராஜ்நாத்சிங்.
இந்த அறிவிப்பின்போது இந்தக் கூட்டணி உருவாக காரணமாக இருந்த காந்திய
மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியனும் அங்கிருந்தார்.
சிங்கக்குட்டிகள் சிறு நரியிடம் பிச்சை கேட்காது என்று
வீராவேசமாக முழங்கியிருந்தார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ். ஆனால் இன்று
வேறு வழியில்லாமல் தேமுதிகவிடம் பணிந்து போக வேண்டிய நிலைக்குத்
தள்ளப்பட்டுள்ளார்.
சேலம், கள்ளக்குறிச்சி தொகுதிகள் தொடர்பாக தேமுதிகவிடம் பணிந்து போக
முடியாது என்பதைத்தான் தர்மபுரியில் நடந்த டாக்டர் அன்புமணி ராமதாஸ்
அறிமுகக் கூட்டத்தின்போது டாக்டர் ராமதாஸ் கோபமாக இப்படிப் பேசியிருந்தார்.
''சிறு நரியுடன் கூட்டணி வைத்த சிங்கக்குட்டி''... தர்மபுரி கூட்டத்தில் அவர் பேசுகையில், நீங்கள் சிங்கக் குட்டிகள். சிங்கக்
குட்டிகள் சிறு நரியிடம் பணிந்து போகாது. அந்த நிலைக்கு ஆளாகாது என்று
பேசியிருந்தார். இதன் மூலம் தேமுதிகவை அவர் சீண்டிப் பார்த்தார்.
பதிலுக்கு தேமுதிகவினரும் இப்படிப் பிராண்டியிருந்தனர். சிங்கம்னா சிங்கிளா
நிக்க வேண்டியதுதானே, எதுக்கு கூட்டணிக்கு அலையனும் என்று அவர்களும்
காட்டமாக பதிலடி கொடுத்திருந்தனர்.
இப்படியாக சூடான விவாதம் வெடித்திருந்த நிலையில்தான் இன்று ராஜ்நாத் சிங்
முன்னிலையில் 'சிறு நரி' விஜயகாந்த்துடன், 'சிங்கக்குட்டி' அன்புமணி
அருகருகே அமர்ந்து ஜோராக காணப்பட்ட காட்சியை தமிழகம் கண்டு ரசித்தது. அதை
விட முக்கியமாக 'சிறு நரி' விஜயகாந்த்துக்கு 'சிங்கக்குட்டி' அன்புமணி
பொன்னாடை வேறு போர்த்தி சிரிக்கச் சிரிக்கப் பேசி அசத்தியும் விட்டார்.
கூடவே பாமகவின் மற்ற சிங்கக்குட்டிகளான ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி
உள்ளிட்டோரும் புன்னகை தவழ நின்றிருந்தனர்.
tamil.oneindia.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக