-
நம் நாட்டில் வாரிசு அரசியலை தொடங்கி வைத்த பெருமை காங்கிரஸ் கட்சிக்கு உண்டு. இந்த வழக்கம் கிட்டத்தட்ட எல்லா தேசிய, பிராந்திய கட்சிகளுக்கும் தற்போது பரவிவிட்டது. வரும் மக்களவை தேர்தலில் வழக்கம்போல் வாரிசுகள் பலர் வேட்பாளர்களாக களம் இறங்கியுள்ளனர்.நேரு குடும்பத்தின் வாரிசுகளான சோனியாவும் ராகுலும் காங்கிரஸ் சார்பிலும், மேனாகாவும் அவரது மகன் வருணும் பாரதிய ஜனதா சார்பிலும் உ.பி.யில் வேட்பாளர்களாக உள்ளனர். ராஜஸ்தானில் அம்மாநில முதல்வர் வசுந்தரா ராஜேயின் மகன் துஷ்யந்த்சிங் பாஜக சார்பில் மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார்.
உ.பி.யில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங், அவரது மருமகள் டிம்பிள் யாதவ், சகோதரர் மகன் தர்மேந்தர் யாதவ், ஆகியோர் மீண்டும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் முலாயம் சிங்கின் கடைசி மகன் பிரித்தீக் யாதவும் போட்டியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.இதே மாநிலத்தில் ராஷ்டிரிய லோக் தளம் கட்சியின் தலைவரும் மத்திய அமைச்சருமான அஜீத்சிங், அவரது மகன் ஜெயந்த் சௌத்ரி ஆகிய இருவரும் மீண்டும் போட்டியில் உள்ளனர். ஜெயந்த்தின் மனைவியும் களம் இறங்க இருப்பதாகக் கருதப்படுகிறது.பிஹாரில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ் கால்நடைத் தீவன ஊழலில் சிக்கி சிறைசெல்ல நேரிட்டபோது மனைவி ராப்ரியை முதல்வராக்கினார். அதே வழக்கில் கடந்த ஆண்டு தண்டிக்கப்பட்டதால் லாலு போடியிட முடியாமல் போனது. எனினும், ராப்ரியுடன் சேர்த்து, தனது மகள் மிசா பாரதியையும் களம் இறக்கி விட்டார் லாலு.3 முறை டெல்லி முதல்வராக இருந்த ஷீலா தீட்சித் தற்போது கேரள ஆளுநராகிவிட்டார். அவரது மகன் சந்தீப் தீட்சித் இரண்டாவது முறையாக டெல்லியில் போட்டியிடுகிறார். கர்நாடகத்தில் மூத்த அமைச்சர் ஆர்.வி.தேஷ்பாண்டேவின் மகன் பிரஷாந்த் தேஷ்பாண்டே முதல்முறையாக வேட்பாளராகி இருக்கிறார்.மேலும், ஹரியானாவில் முதல்வர் பூபேந்தர்சிங் ஹூடாவின் மகன் தீபேந்தர் ஹூடா, பஞ்சாபில் முன்னாள் முதல்வர் கேப்டன் அம்ரீந்தர் சிங்கின் மனைவி பிரணீத் கௌர், மகராஷ்ட்டிரத்தில் முன்னாள் முதல்வர் நாரயண் ரானேவின் மகன் நிலேஷ் ரானே, குஜராத்தில் முன்னாள் முதல்வர் மாதவ்சிங் சோலங்கியின் மகன் பாரத்சிங் சோலங்கி ஆகியோரும் மீண்டும் போட்டியிடுகிறனர்.மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது சகோதரர் மகன் அபிஜித்தை திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட வைக்கிறார். தெலங்கானாவில் தெலங்கானா ராஷ்டிர சமிதியின் தலைவர் சந்திரசேகரராவின் மகள் கே.கவிதா, மகன் கே.டி.ராமாராவ், மருமகன் ஹரீஷ் ராவ் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.தமிழகத்தில்...தமிழக காங்கிரஸில், ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி, இரா.அன்பரசுவின் மகன் அருள் அன்பரசு, கிருஷ்ணசாமியின் மகன் விஷ்ணு பிரசாத், ரங்கராஜன் குமாரமங்கலம் மகன் மோகன் குமாரமங்கலம், ஜெய்மோகன் மகன் விஜய் இளஞ்செழியன், நாசே.ராமச்சந்திரனின் மகன் நாசே.ராஜேஷ், ராமசாமி உடையாரின் மகன் தேவதாஸ் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதில், இன்னும் அறிவிக்கப்பட இருக்கும் 9 தொகுதிகளிலும் வாரிசுகள் இடம்பெறலாம்.அதிமுகவில் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்தன், திமுகவில் சோளிங்கர் முன்னாள் எம்எல்ஏ ரங்கநாதனின் மகன் இளங்கோ, தூத்துக்குடி பெரியசாமியின் மகன் ஜெகன் ஆகியோர் முதன்முறையாக போட்டியிடுகின்றனர். பாமக தலைவர் ராமதாஸின் மகன் அன்புமணி, மாநிலங்களவையில் இருந்து முதன் முறையாக மக்களவைக்கு வேட்பாளராகி உள்ளனர்.இதுபோல், அரசியல் வாரிசுகளை கம்யூனிஸ்ட் கட்சிகளில் மட்டும் ஏனோ காணமுடிவதில்லை. எனினும், தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் பாப்பா உமாநாத்தின் மகள் உ.வாசுகி போட்டியிடுகிறார். இவர் கடந்த நாற்பது வருடங்களாக கட்சிப் பணியாற்றி வருபவர்.
சனி, 22 மார்ச், 2014
வாரிசு அரசியலை வளர்க்கும் மக்களவைத் தேர்தல்:
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக