செவ்வாய், 18 மார்ச், 2014

மாயமான மலேசிய விமான மர்மத்தில் திருப்பம்: இதோ இதுதான் தெளிவான விளக்கம்!

மாயமான மலேசிய விமானத்தில் இருந்து தரைக்கு வந்த “ஆல் ரைட், குட்நைட்” என்ற இறுதி சொற்கள் கூறப்படுவதற்கு முன்னரே, விமானத்தில் முதல் செட் ட்ரான்ஸ்மிஷன் டிவைஸ் செயலிழக்க வைக்கப்பட்டு விட்டது என்பதை, புலனாய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். இது ஒரு பெரிய திருப்பம்தான் என இன்று காலை எழுதியிருந்தோம்.
“இதை சற்றே விளக்கமாக எழுத வேண்டும். அதே நேரத்தில் டெக்னிகலான இந்த விஷயத்தை அனைவருக்கும் புரியும் விதத்திலும் எழுத வேண்டும். சிறிது நேரம் கொடுங்கள்..” எனவும் குறிப்பிட்டிருந்தோம். இதோ, இந்த விவகாரத்தை எளிமையாக கொடுத்திருக்கிறோம்.
“ஆல் ரைட், குட்நைட்” என்ற இறுதி சொற்கள் கூறப்படுவதற்கு முன்னரே, விமானத்தில் முதல் செட் ட்ரான்ஸ்மிஷன் டிவைஸ் செயலிழக்க வைக்கப்பட்டு விட்டது என்று குறிப்பிடப்படுவது, விமானத்தின் ACARS (Aircraft Communications Addressing and Reporting System) என்பதைதான்.
இது, விமானி, தரையுடன் பேசும் தொடர்பு சாதனம் அல்ல. இந்த ACARS, விமானத்தின் மெயின்டெனன்ஸ் தொடர்பான தரவுகளை தரைக்கு அனுப்பும் சிஸ்டம்.
விமானத்தின் காக்பிட்டில், இரு விமானிகளுக்கும் நடுவே, எதிரேயுள்ள பானலில், அவர்கள் தரையுடன் பேசும் தொடர்பு சாதனத்துக்கான (ரேடியோ) சுவிட்ச் உள்ளது. இதை ஆஃப் செய்துவிட்டால், விமானத்தின் காக்பிட்டில் இருப்பவர்கள் பேசுவது தரைக்கு கேட்காது. தரையில் இருந்து சொல்வது, இவர்களுக்கு கேட்காது.

விமானங்களை இயக்கும் அநேக விமானிகள் இதை ஆன் செய்வதும், ஆஃப் செய்வதுமாக இருப்பார்கள். காரணம், தாம் பேசும் அனைத்து விஷயங்களையும் தரையில் இருப்பவர்கள் தெரிந்து கொள்வதை பலர் விரும்புவதில்லை. (ஆனால், அனைத்து காக்பிட் உரையாடல்களும், விமானத்தில் உள்ள பிளாக் பாக்ஸில் பதிவாகும்)
விமானங்கள் பற்றி துல்லியமாக தெரிந்த ஒருவருக்கு, இந்த ரேடியோ தொடர்பை ஆஃப் பண்ணிவிட்டால், தரையுடன் உள்ள அனைத்து சிக்னல் தொடர்புகளும் துண்டிக்கப்படாது என்பது நன்றாகவே தெரியும்.
ரேடியோ ஆஃப் செய்யப்பட்டாலும், தரைக்கு சிக்னல் அனுப்பிக் கொண்டிருக்கும் மற்றொரு டிவைஸ், நாம் ஏற்கனவே குறிப்பிட்ட ACARS. விமானங்கள் பற்றி துல்லியமாக தெரிந்த ஒருவருக்கு இதுவும் நன்றாக தெரியும். இதனால், கீழே சிக்னல் போகாமல் செய்ய வேண்டுமென்றால், இந்த டிவைஸையும் நிறுத்த வேண்டும்!
இதையும் நிறுத்தி விட்டால், அதன்பின் தரையில் உள்ள சிவிலியன் டவர்களில் உள்ள ராடார்களில் விமானத்தில் இருந்து சிக்னல் ஏதும் வராது. ஆனால், ACARS நிறுத்தப்பட்டாலும், ராணுவ ராடார்கள், மற்றும் கடற்படை கப்பல்களில் உள்ள ராடார்கள், மற்றும் உளவு விமான ராடார்களில் சிக்னல் கிடைக்கும் என்பது வேறு விஷயம். 
பொதுவாக சர்வதேச ரூட்களில் பறக்கும் விமானிகளுக்கு மற்றொரு விஷயம் தெரியும். அது என்னவென்றால், தரையில் உள்ள ராணுவ சிக்னல் ரிசீவிங் இன்ஸ்டலேஷன்கள், சிவிலியன் விமான சிக்னல்களை பற்றி பெரிதாக அக்கறை கொள்வதில்லை.
இதனால், ACARS நிறுத்தப்பட்டு விட்டால், யாருடைய கவனத்திலும் படாமல் பறக்கலாம், யாருக்காவது சந்தேகம் ஏற்பட்டு இந்த விமானத்தை தேடும்படி அலர்ட் கொடுக்காதவரை!
இதுவரை புரிந்தது அல்லவா? இனி அடுத்த விஷயத்தை பார்க்கலாம்.
மலேசியன் விமானத்தின் காக்பிட்டில் இரு விமானிகள் இருந்தார்கள் என வைத்துக் கொள்வோம். ஒரு விமானி ரேடியோ மூலம் தரையுடன் தொடர்பு கொண்டு “ஆல் ரைட், குட்நைட்” என்று இயல்பாக சொல்கிறார். அதற்கு முன், அருகேயிருந்த மற்ற விமானி, ரேடியோவில் பேசிய விமானிக்கு தெரியாமலேயே, ACARS தொடர்பை துண்டித்து விட்டிருக்கலாம் அல்லவா?
அப்படியானால், இதில் என்ன பெரிய திருப்பம் இருக்க முடியும்?
ஒரு விமானி, மற்ற விமானிக்கு தெரியாமல் ரகசியமாக ACARS தொடர்பை துண்டிக்க முடியாது என்பதுதான், இதிலுள்ள சூட்சுமம்.
காரணம், விமானத்தின் காக்பிட்டில் இருந்து கீழேயுள்ள உரையாடல் (ரேடியோ) தொடர்பை நிறுத்த வேண்டும் என்றால், நாம் முன்னரே குறிப்பிட்டது போல, இரு விமானிகளுக்கும் நடுவே, எதிரிலுள்ள பானலில் உள்ள ஒரு சுவிட்சை தட்டிவிட்டால் போதும். ஒரு விமானி அறியாமல் மற்ற விமானியால் அதை செய்ய முடியும்.
ஆனால், ACARS தொடர்பை துண்டிக்க வேண்டுமென்றால், அது ஒரு பல ஸ்டெப்புகளை கொண்ட நடைமுறை. அதை manually shut down செய்ய வேண்டும்.
இந்த நடைமுறையில், காக்பிட் கன்ட்ரோலில் உள்ள பல ஷட்-ஆஃப் சீக்குவென்ஸ்களை செய்ய வேண்டும். இப்படி பல கன்ட்ரோல்களை நிறுத்தியபின், அதன்பின் விமானத்தில் உள்ள கம்ப்யூட்டர் ஸ்கிரீனில் சில கமாண்ட்டுகளை கொடுக்க வேண்டும். அதற்கு, காக்பிட்டில் உள்ள கீபோர்ட்டை பயன்படுத்த வேண்டும். ஸ்டெப்-பை-ஸ்டெப்பாக இந்த ஷட்-ஆஃப் சீக்குவென்ஸ்களை செய்ய சுமார் 5 நிமிடங்களுக்கு மேல் பிடிக்கும்.
அருகில் உள்ள விமானிக்கு தெரியாமல் செய்ய முடியாது.
ஒருவேளை அருகிலுள்ள விமானி காக்பிட்டை விட்டு வெளியே போன நேரத்தில் செய்திருக்கலாம் என்றாலும், அந்த விமானி திரும்பி வந்ததும், அவருக்கு முன்னால் உள்ள பானலில் ‘ACARS OFF’ என்ற எழுத்துக்கள் மின்னி மின்னி மறையும். அந்த விமானி என்ன நடக்கிறது என்பதை சுலபமாக புரிந்து கொண்டு விடுவார்.
அதற்கு பின்னரும் – அதாவது, ACARS நிறுத்தப்பட்டு விட்டது என்பதை தெரிந்துகொண்ட பின்னரும் – ஒரு விமானி தரையுடன் தொடர்பு கொண்டு “ஆல் ரைட், குட்நைட்” என்று கூறுகிறார் என்றால், அதன் அர்த்தம் என்ன?
“இது ஒரு பெரிய திருப்பம்தான்” என இன்று காலை நாம் எழுதியதன் தொழில்நுட்ப விளக்கம் இதுதான்.
காலையில் நாம் எழுதியபோது-
“காக்பிட்டில் இருந்து பேசிய நபருக்கும், ACARS-ஐ செயலிழக்க வைத்த நபருக்கும் இடையே தொடர்பு இருக்க வேண்டும். அல்லது – இருவரும் ஒரே நபராக இருக்க வேண்டும்” என்று எழுதியதன் அர்த்தம் இப்போது புரிகிறதா?
இப்போது, மர்மக் கதையில் திடீர் திருப்பம் ஏற்படுவதுபோல, “ஆல்ரைட்.. குட்நைட்” என்று கூறியவர், விமானத்தின் கோ-பைலட் ஃபாரிக் அப் ஹமீத் என்பது தெரியவந்து அதிர வைத்துள்ளது என எழுதியதன் அர்த்தமும் இதுவேதான்!
viruvirupu.com

கருத்துகள் இல்லை: