சீமான் புகைப்படம் காணோம்!
இலங்கைக்குப் பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும், போர்க் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய முதல்வர் ஜெயலலிதாவுக்கு 'நாம் தமிழர்’ கட்சி சார்பில் நன்றி சொல்வதற்கு சீமான் சென்றார். அவருடன் இயக்குநர் மணிவண்ணனும் சென்றார்.
''நீங்கள்தான் சைதாப்பேட்டையில் பொதுக்கூட்டம் நடத்திப் பாராட்டிவிட்டீர்களே! அப்புறம் நேரிலும் வாழ்த்துச் சொல்ல வேண்டுமா?'' என்ற முதல்வர், ''என்னைச் சந்திக்க வந்த ஹிலாரியிடம் இலங்கைபற்றிதான் முக்கால் மணி நேரம் பேசினேன். அதைக் கேட்ட ஹிலாரி, 'நீங்களே இலங்கை அரசிடம் பேசலாமே?’ என்றார். 'இதை மத்திய அரசுதான் செய்ய வேண்டும்’ என்று நான் சொன்னேன்!'' என்றாராம்.
''நாம் மத்திய அரசுடன் இதுபற்றிப் பேசினால், அவர்கள் சம்பிரதாயமாகத்தான் பேசுகிறார்கள். என்னைச் சந்திக்க வந்த இலங்கைத் தூதரிடம், 'இன்றைய நிலவரத்தை அறிய தூதுக் குழு அனுப்பினால், நீங்கள் சொல்லும் இடத்தைத்தான் பார்க்க வேண்டுமா?’ என்று கேட்டேன். அவர் மௌனமாக இருந்தார். என்னைப் பொறுத்த வரையில், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில்தான் மாறுதல் வேண்டும்!'' என்று நீண்ட நேரம் பேசினாராம் முதல்வர். ஆனால், முதல்வரும் சீமானும் சந்தித்த படத்தைப் பிரசுரிக்க வேண்டாம் என்று தலைமைச் செயலகத்தில் இருந்து அனைத்து நாளிதழ்களுக்கும் சொன்னதுதான் ஆச்சர்யமான சமாசாரம்.
''சீமான் சந்திப்புக்கு முன்னதாக டி.ஜி.பி. மற்றும் சென்னை கமிஷனர் ஆகிய இருவரும் முதல்வரை சந்தித்தார்கள். சீமான் சென்ற பிறகு மறுபடியும் இவர்கள் முதல்வரைச் சந்தித்தனர். சீமான் மீது புகார் கொடுத்த விஜயலட்சுமி பற்றி ஏதாவது சொன்னார்களா எனத் தெரியவில்லை. போட்டோ போடக்கூடாது என்று சொன்னதன் பின்னணி இதுவாகக்கூட இருக்கலாம்!'' என்கிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக