Krishna Kumar L : இனிய பொன் நிலா கூட இளையராஜாவுக்கு சொந்தமில்லை
தான் இசையமைத்த பாடல்களை தன்னிடம் அனுமதி பெறாமல் பயன்படுத்தி இருப்பதாக குற்றம் சாட்டி,
‘குட் பேட் அக்லி’ படக்குழுவினரிடம் 5 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு இளையராஜா நோட்டீஸ் அனுப்ப இருப்பதாக சமீபத்தில் ஊடகங்களில் செய்திகள் வந்தன.
இளையராஜா இசையமைத்த பாடல்களுக்கு முழுமையான உரிமை அவரிடம் இல்லை என்று சொன்னால், இசைக்கடவுளின் பக்தர்கள் கோபித்துக் கொள்கிறார்கள்.
தமிழ்நாட்டில் அவ்வளவாக ஊடகங்கள் கண்டுக் கொள்ளாத சமீபத்திய தகவல் ஒன்று உண்டு. அதாவது இசைஞானியே தன் பாடலை பயன்படுத்திக் கொள்ள அனுமதித்தும், அவருக்கு அந்த உரிமை இல்லை என்று டெல்லி உயர்நீதி மன்றத்தில் இரண்டரை மாதங்களுக்கு முன்பு தீர்ப்பு வந்திருக்கிறது.
தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் சமீபத்தில் ‘அகத்தியா’ என்றொரு திரைப்படத்தை வெளியிட்டிருந்தது. இளையராஜாவின் இளைய மகனான யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.
இந்தப் படத்தில் இளையராஜாவின் நூறாவது படமான ‘மூடுபனி’ படத்தில் இடம்பெற்ற ‘என் இனிய பொன் நிலாவே’ பாடலை மீண்டும் பயன்படுத்த முடிவெடுத்தார்கள். கங்கை அமரன் எழுதி, ‘மூடுபனி’யில் பாடிய ஜேசுதாஸின் மகனான விஜய் ஜேசுதாஸை பாடவைத்து ரெக்கார்டிங்கும் செய்து விட்டார் யுவன்ஷங்கர்ராஜா.
படத்தின் முன்னோட்ட காட்சிகளை இணையத்தில் கண்ட ’சரிகமா இந்தியா’ நிறுவனம், உடனடியாக டெல்லி உயர்நீதி மன்றத்தில் இப்பாடலை பயன்படுத்த தடை விதிக்குமாறு வழக்கு தொடர்ந்தது. இந்திய சினிமாவில் ஆரம்பக் காலம் தொட்டே இசை வணிகத்தில் ஈடுபட்டு வந்த எச்.எம்.வி. நிறுவனம்தான் இப்போது ‘சரிகமா’வாகியிருக்கிறது.
‘மூடுபனி’க்கு இசையமைத்த இளையராஜாவிடம் உரிய அனுமதியை பெற்றுதான் ‘அகத்தியா’வுக்கு அப்பாடலை பயன்படுத்துகிறோம் என்று ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது வேல்ஸ் ஃபிலிம்ஸ். இளையராஜா தரப்பும் கோர்ட்டில், தான் இசையமைத்த பாடலுக்கு தன்னிடமே காப்பிரைட் இருக்கிறது என்று மனு தாக்கல் செய்திருந்தது.
இரு தரப்பு வாதங்களையும் விசாரித்த நீதிமன்றம், ‘மூடுபனி’ படத்தின் பாடல்களுக்கு இளையராஜா உரிமை கோர முடியாது என்று தெளிவாக தீர்ப்பு வழங்கிவிட்டது. பிப்ரவரி 25, 1980-ஆம் ஆண்டு ‘மூடுபனி’ படத்தை தயாரித்த ராஜா சினி ஆர்ட்ஸ் நிறுவனத்துக்கும், எச்.எம்.வி இசை நிறுவனத்துக்குமான ஒப்பந்தத்தின் அடிப்படையில் அப்படத்தின் பாடல்களுக்கு இசையமைப்பாளரான ராஜா உரிமை கோர முடியாது என்பதே தீர்ப்பு.
தீர்ப்பில் கூறப்பட்டிருக்கக்கூடிய முக்கியமான வரிகள் இவை :
“It is undisputed that the defendant no. 3 (Ilayaraja) is only the music composer and not the lyricist of the song in question. Therefore, the defendant no. 3 by no terms, can be considered as the author of the lyrics of the song in question, which forms part of the sound recording, in which the plaintiff has copyright in terms of agreement with the producer of the film in question. Thus, the defendant no. 3 had no authority to assign any right for use of the lyrics of the song, on which he has no copyright.”
இதிலிருந்து தெளிவாக புரியக்கூடிய விஷயம், ஒரு திரைப்பாடல் தயாரிப்பில் இசையமைப்பாளர், பாடலை எழுதாத பட்சத்தில் தன்னை அப்பாடலுக்கு author என்று உரிமை கோரமுடியாது. அது தவிர்த்து தயாரிப்பாளருக்கும் இசையமைப்பாளருக்குமான ஒப்பந்தம், தயாரிப்பாளருக்கும் இசை நிறுவனத்துக்குமான ஒப்பந்தம் என்று பல்வேறு காரணிகள், யாருக்கு உரிமை என்பதை தீர்மானிக்கிறது.
அவ்வகையில் இளையராஜாவின் நூறாவது படமான ‘மூடுபனி’ படத்தின் பாடல்களுக்கு கூட இளையராஜா உரிமையற்றவர் ஆகிறார்.
‘குட் பேட் அக்லி’ படத்தின் தயாரிப்பாளர், இளையராஜாவிடம் அனுமதி வாங்கி பாடல்களை பயன்படுத்தி இருந்தால், அதுவும் கோர்ட்டில் நின்றிருக்காது. இப்போது உரிமை பெற்றிருப்பவர்களிடம் பணம் செலுத்தி அனுமதி வாங்கியிருக்கிறோம் என்று தயாரிப்புத் தரப்பு சொல்வதே சரியான நிலைப்பாடு.
ஆர்வம் இருப்பவர்கள் 'Saregama v. Vels Films International' என்கிற வழக்கை டெல்லி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புகளில் தேடி வாசிக்கலாம்.
இது தொடர்பான ஆய்வின் போது வேறொரு சுவாரஸ்யமான தகவலையும் அறிந்தேன்.
‘மூடுபனி’ படத்தின் தயாரிப்பாளர் யார் என்கிற மர்மம்தான் அது.
ராஜா சினி ஆர்ட்ஸ் என்கிற நிறுவனம் தயாரித்ததாக படத்தின் விளம்பரங்களை காணும்போது அறிய முடிகிறது. ஆனால், தயாரிப்பாளரின் பெயரே எங்கும் குறிப்பிடப்படவில்லை. படத்தின் டைட்டிலிலும் கூட தயாரிப்பு நிர்வாகியின் பெயர் இருக்கிறதே தவிர, படத்தின் தயாரிப்பாளர் பெயர் இல்லை.
நிறுவனத்தின் பெயரை வைத்துப் பார்க்கையில் ஒருவேளை ராஜாவே தன்னுடைய 100வது படத்தை uncredit ஆக தயாரித்திருப்பாரோ என்கிற யூகம் கூட எழுகிறது. ஒரு வேளை அப்படி இருந்தால், அவரது நிறுவனமே எச்.எம்.வி நிறுவனத்தோடு செய்துக் கொண்ட ஓர் ஒப்பந்தம், இன்று அவரை தோற்கடித்திருக்கிறது என்று ஆகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக