75 சதத்துக்கு ஒரு பரப்புக் காணி வேண்டினன். அந்தக் காணி இப்ப 25 ஆயிரம் விக்குது என்று சொல்லும் வீரகத்தி, இரண்டரைச் சதத்துக்கு வாங்கிய முட்டை 20 ரூபாவாக விற்பதாகவும் கூறினார்.

சிங்களவர்கள் என்றோ, தமிழர்கள் என்றோ, முஸ்லிம்கள் என்றோ தம்மை அடையாளப்படுத்தாமல் இலங்கையர்கள் வாழ்ந்த காலம் ஒன்று இருந்ததா என்று தேடி, காலி, கண்டி, யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளுக்குப் பயணம் செய்த அருணாசலம் கண்ணன் என்பவர், யாழ்ப்பாணத்தில் இந்த வீரகத்தியைச் சந்தித்து அவர் தொடர்பான விபரங்களை வெளியிட்டுள்ளார்.
காலி, கண்டி, யாழ்ப்பாணத்தில் மொத்தம் 36 பேரைச் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடி ஒலிப்பதிவுகளையும், படங்களையும் வெளியிட்டுள்ள கண்ணன், யாழ்ப்பாணத்தில் பிறந்து, பிரித்தானியாவில் வளர்ந்தவர். 2005 முதல் மீண்டும் இலங்கைக்குத் திரும்பிவிட்ட மானுடவியலாளரான கண்ணன், அமெரிக்க மையத்தின் நிதியுதவியுடன் ‘i’am என்ற இந்த நிகழ்ச்சியைச் செய்து, iam.lk என்ற இணையத்தளம் மூலம் அவற்றை அனைவருடனும் பகிர்ந்துகொண்டுள்ளார்.
வீரகத்தியின் கதை
10 வயதில் காலிக்குத் தொழில் தேடிப் போய் அங்கு கடை வைத்திருந்த வீரகத்தி, 1920 இல் வேலணைக்குத் திரும்பி தோட்டம் செய்ததாகக் கூறுகிறார். 1930இல் திருமணம்.
8 ஆண் பிள்ளைகளுக்கும், 4 பெண் பிள்ளைகளுக்கும் தந்தையான இவர், தமது ஆண் பிள்ளைகளில் 6 பேரை இழந்துவிட்டார். இன்று தமது மனைவி மற்றும் மகள்மாருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்துவரும் வீரகத்தி, தமது நீண்ட ஆயுளுக்கான இரகசியங்களையும் வெளியிட்டுள்ளார்.
“காலையில் 5 மணிக்கு ஒரு பால் ரீ. 9 மணிக்கு ஒரு பிளேன்ரீ. 10 மணிக்கு ஒரு மெல்லிய சாப்பாடு. மதியம் 1 மணிக்கு சாப்பாடு. பின்னேரம் ஒரு பிளேன்ரீ, இரவு பிட்டு, அல்லது இடியப்பம். இதுதான் என்ர சாப்பாடு” என்று கூறும் அவர், கள்ளு, சாராயம் அருந்தும் பழக்கமும் தமக்கு இருப்பதாகவும் சிரித்தவாறு கூறுகிறார்.
உடன் கள்ளு தேவாமிர்தம்
“பனையாலை இறக்கின உடன அவன் கொண்டுவந்து கள்ளு வைப்பான். குடிச்சால் தேவாமிர்தம் போலத்தான் இருக்கும். சாராயமும் குடிக்கிறனான். இறைச்சி சாப்பிடுவன். கணவாய், நண்டு, கூழைச் சாப்பிடலாம்” என்று தனது நீடித்த ஆயுளின் இரகசியத்தை வெளிப்படுத்துகிறார் வீரகத்தி.
“75 சதத்துக்கு ஒரு பரப்புக் காணி வேண்டினன். அந்தக் காணி இப்ப 25 ஆயிரம் விக்குது” என்று சொல்லும் வீரகத்தி, இரண்டரைச் சதத்துக்கு வாங்கிய முட்டை 20 ரூபாவாக விற்பதாகவும் கூறினார்.
“ 4 சதத்துக்கு நெல்லு வாங்கினம். முத்துச் சம்பா 10 சதம். சீரகச் சம்பா 9 சதம். பச்சை அரிசி 8சதம். இப்ப அரிசி ஒரு கொத்து என்ன விலை விக்குது?” என்று கேட்கும் வீரகத்தி, “எல்லாம் காலம் மாறிப் போச்சு. நாங்கள் என்ன செய்யிறது?” என்கிறார் சிரித்தபடி.
”எது சரி?”
“அளவோடை போய்ச் சேர முடியாமல், பாவம் செய்தவைதான் நீண்ட காலம் இருக்கீனம் எண்டு ஒருவர் சொல்லிறார். செய்த புண்ணியத்தாலைதான் நீண்ட காலம் இருக்கிறன் என்று இன்னொருத்தர் சொல்லிறார்” என்று கூறும் 105 வயதான வீரகத்தி,
“எது சரி பிழை எண்டு எனக்குத் தெரியேல்லை” என்று முடிக்கிறார்.
- யாழ்ப்பாணம் இன்று -
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக