சனி, 13 நவம்பர், 2010

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்‌ஷ்மன் கதிர்காமர் கொலை நடந்த இடத்தில் விசாரணை : வழக்கில் திடீர் திருப்பம்!


முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்‌ஷ்மன் கதிர்காமர் படுகொலை வழக்கில் திடீர் திருப்பம் ஒன்று ஏற்பட்டுள்ளது. கொழும்பு மேல்நீதிமன்றம் படுகொலை இடம்பெற்ற இடத்தில் இவ்வழக்கை விசாரிக்கத் தீர்மானித்துள்ளது.2005 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் அவரது கொழும்பு-07 இல்லத்தில் வைத்து ஸ்னைப்பர் துப்பாக்கியால் கதிர்காமர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இப்படுகொலை தொடர்பாக கொழும்பு மேல்நீதிமன்றத்தில்முத்தையா சகாதேவன், இஸினோர் ஆரோக்கியநாதன் ஆகிய இருவர் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இப்படுகொலைக்கு சதித் திட்டம் தீட்டியமை, உதவி, ஒத்தாசை செய்தமை, மரணத்தை ஏற்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன. இவ்வழக்கு கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி குமுதினி விக்ரமசிங்க முன்னிலையில் நேற்று எடுத்துக் கொள்ளப்பட்டது.
அப்போது இரு எதிரிகளையும் ஆதரித்து சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி. தவராசா ஆஜராகி வாதாடினார். அவர் கொலை நடந்த இடத்தில் இவ்வழக்கு விசாரிக்கப்பட வேண்டும் என்று மன்றில் ஏற்கனவே கோரி இருந்தார்.
வழக்காளியான சட்டமா அதிபரின் சார்பில் அரச சட்டத்தரணி சி.குலரட்ண ஆஜரானார். அவர் படுகொலை இடம்பெற்ற இடத்தில் வழக்கு விசாரணை நடத்தப்படுகின்றமையில் எவ்வித ஆட்சேபனையும் சட்டமா அதிபருக்கு கிடையாது என்றார்.இதையடுத்து படுகொலை இடம்பெற்ற இடத்தில் அடுத்த மாதம் முதலாந் திகதி மதியம் 2.00 மணிக்கு வழக்கு விசாரணை இடம்பெறும் என்று நீதிபதி அறிவித்தார்.

கருத்துகள் இல்லை: