வெள்ளி, 12 நவம்பர், 2010

யோகி, புதுவை மனைவிமார் சாட்சியம்


பி.பி.சி
யாழ்ப்பாணத்தில் விசாரணைகளை நடத்திய படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னால் விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்களாகிய யோகரட்ணம் யோகி, புதுவை இரத்தினதுரை ஆகியோரின் மனைவிமார் தோன்றி சாட்சியமளித்துள்ளார்கள்.
கடந்த வருடம் மே மாதம் 18 ஆம் திகதி முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் தனது கணவர் யோகரட்ணம் யோகி மற்றும் புதுவை இரத்தினதுரை, லோரன்ஸ் திலகர், பேபி சுப்பிரமணியம் உட்பட 50க்கும் மேற்பட்டவர்கள் பொது மன்னிப்பு வழங்கப்படும் என இராணுவத்தினர் அளித்த உறுதிமொழியை ஏற்று அவர்களிடம் சரணடைந்ததாக யோகரட்ணம் யோகியின் மனைவி ஜெயவதி தமது சாட்சியத்தில் தெரிவித்திருக்கின்றார்.
இவ்வாறு சரணடைந்தவர்கள் பேரூந்து ஒன்றில் ஏற்றிச் செல்லப்பட்டதைத் தான் கண்டதாகவும், அதன்பின்னர் அவர்களைத் தேடிக்கண்டுபிடிப்பதற்கு பலவழிகளிலும் முயற்சித்த போதிலும் அந்த முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை என்றும் யோகரட்ணம் யோகியின் மனைவி தனது சாட்சியத்தில் கூறியிருக்கின்றார்.
அத்துடன் அவர்கள் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார்களா என்பது பற்றிய தகவல்களை அரசாங்கம் தெரிவிக்கவில்லை என்றும், எனவே அவர்கள் எங்கு வைக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பதைக் கண்டறிந்து தெரிவிக்க வேண்டும் என யோகரட்ணம் யோகியின் மனைவி ஜெயவதி ஆணைக்குழுவினரிடம் கோரியிருக்கின்றார்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணைகள் யாழ்ப்பாணத்தில் இன்று காலை ஆரம்பமாகவிருந்த போதிலும் கொழும்பில் நிலவிய சீரற்ற கால நிலை காரணமாக அவர்கள் விமானம் மூலம் யாழ்ப்பாணத்தைச் சென்றடைவதில் தாமதம் ஏற்பட்டது. இதன் காரணமாக அரியாலையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த விசாரணைகள் பிற்பகல் 3.30 மணிக்கே ஆரம்பமாகியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அரியாலையில் நடைபெற்ற விசாரணைகளின்போது காணாமல் போயுள்ள தமது கணவர்கள், பிள்ளைகள் தொடர்பான முறைப்பாடுகளே கூடுதலாக ஆணைக்குழுவின் முன்னால் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
அரியாலையில் நடைபெற்ற விசாரணைகளையடுத்து, நீர்வேலியில் இந்த ஆணைக்குழுவின் அமர்வு இரவு 8 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றுக் கொண்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த ஆணைக்குழுவின் விசாரணைகள் யாழ்ப்பாணத்தில் நாளையும் தொடர்ந்து நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
இதற்கிடையில் வடமாகாணத்தில் வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களைப் போன்று மன்னாரிலும் இந்த ஆணைக்குழு சாட்சியங்களைப் பதிவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் அவர்கள் வேண்டுகோள் விடுத்திருக்கின்றார். இந்த வேண்டுகோளை ஆணைக்குழு ஏற்றிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், மன்னாரில் எப்போது இந்த ஆணைக்குழு தனது அமர்வை நடத்தும் என்பது பற்றிய விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
 

கருத்துகள் இல்லை: