சனி, 13 நவம்பர், 2010

Tamil Flim Va Quater Cuttingதயாநிதி அழகிரியின் கிளவுட் நைன் மூவிஸ் வெளியிட்டிருக்கும் படம் வ குவாட்டர் கட்டிங். அவரது தயாரிப்பில் இதே பட ஹீரோ நடித்து சமீபத்தில் வெளிவந்து சக்கை போடு போட்ட தமிழ்ப்படம் மாதிரி தரமான படமாக இருக்கும் என்று நம்பி தியேட்டருக்குப் போனால் ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது. படத்தின் டைட்டிலில் கடைசி நேரத்தில் ஒட்டிக் கொண்ட `வ` மாதிரியே படமும் புரியாத புதிராகத்தான் இருக்கிறது என்பது கொடுமை.  மாலை 6 மணிக்கு ஆரம்பமாகும் கதை மறுநாள் காலை 6 மணியுடன் முடிவதுதான் வ படத்தின் ஒரே ஹைலைட்.

கதைப்படி ஹீரோ சிவா ஊரில் இருந்து கிளம்பி சென்னை வருகிறார், துபாய்க்கு விமானம் ஏறுவதற்காக... வந்த இடத்தில் தன் அக்காள் கணவர் எஸ்.பி.பி.சரணுடன் வண்டியில் கிளம்பி ஒரு குவாட்டருக்கும், கட்டிங்கிற்காகவும் அலைவதுதான் வ படத்தின் மொத்த கதையும்! இதை சுவாரஸ்யமாக சொல்கிறேன்பேர்வழி என சொதப்பி எடுத்திருக்கின்றனர் இயக்குனர் தம்பதிகளான புஷ்கர் - காயத்ரி இருவரும். இவர்களது முதல் படமான ஆட்டோ எனும் ஓரம்போ படத்திலாவது ஸ்கிரீன்ப்ளே சுமார் என்றாலும் ‌டேக்கிங்ஸ் பிரமாதமாக இருந்தது. இதில் ஸ்டோரி, ஸ்கிரீன்ப்ளே, டேக்கிங்ஸ் எல்லாமே வீக்! டயலாக் மட்டுமே சில இடங்களில் ஆறுதல்.

துபாய்க்கு ப்ளைட் ஏற வந்த ஹீரோ குறைந்தபட்சம் குவாட்டர் - கட்டிங் இல்லாமல் அந்த இரவை கழிக்க முடியாது எனும் நிலையில் காந்தி ஜெயந்தி, மஹாவீர் ஜெயந்தி போன்ற மதுவிடுதிகளுக்கு விடுமுறையான ஒரு நாளில் தன் அக்காள் புருஷனையும் கூட்டிக் கொண்டு அலைவது காமெடிக்கு வேண்டுமானால் ஓ.கே. ஆனால் அதையே ஒரு முழு படக் கதையாக நினைத்துக் கூட பார்க்க முடியாது என்றாலும் அதுதான் வ படத்தின் மொத்தக் கதையும் என்பது வேதனை!

ஆனாலும் அரசியல் பொதுக்கூட்டத்தில் குவாட்டரும், பிரியாணி பொட்டலமும் தருகிறார்கள் என ஹீரோ சிவா ஓடுவதும், அங்கு கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போலீசுக்கு ‌பயந்து ஓடுவதும், ஸ்டார் ஓட்டலில் எப்படியும் கட்டிங்காவது கிடைக்கும் என பேரருக்கு பணம் கொடுத்து பிரச்னையில் சிக்கி, பின் விரட்டியடிக்கப்படுவதும், அப்படியும் அடங்காமல் ஹீரோவே பேரர் வேஷத்தில் ஹோட்டலுக்குள் புகுந்து சரக்கு தேடிப்பார்த்து கிடைக்காமல் ஏமாறுவதும், இறுதியாய் சூதாட்ட கிளப்பில் கிடைக்குமென சீட்டாடப் போய் வசமாய் சிக்குவதும், பின் மாமன் சரண் புண்ணியத்தில் ஹீரோ தப்புவதும் சுவாரஸ்யமான திருப்பங்கள். ஆனாலும் இதெல்லாம் ஒரு படத்தில் வடடிவேலுவோ, வையாபுரியோ நடிக்க ‌வேண்டிய காமெடி காட்சிகள் என்ற அளவில் ரசிக்க வேண்டியவை என்பதை சொல்லவும் வேண்டுமா? ஆனால் இதையே முழுப்படத்திற்கும் கதையாக்கி, காட்சிகளாக்கி இருக்கும் இயக்குனர்களின் துணிச்சல், ரசிகர்களுக்கு இருக்குமா? என்பது கேள்விக்குறியே!

சிவா, எஸ்.பி.பி. சரண் உள்ளிட்ட நான்கைந்து கேரக்டர்கள்தான் படத்தின் மொத்த நட்சத்திரங்கள் என்பது ஒரு விதத்தில் பலமாக தெரிந்தாலும், ஒரு விதத்தில் பலவீனமாகவும் தெரிகிறது. சிவா, சரண் இருவது நல்ல நடிப்பும், நீரவ் ஷாவின் ஒளிப்பதிவும் ஜி.வி.பிரகாஷ்குமாரின் இசையும், ஆண்டனியின் படத்தொகுப்பும் வ படத்திற்கு பெரிய பலம்!

புஷ்கர் - காயத்ரி தம்பதியரின் எழுத்தும், இயக்கமும் வ படத்தை பார்த்து வாவ் என்று வாய்பிளக்கவும் விடவில்லை! உவ்வே என்று வாய்திறக்கவும் விடவில்லை!

கருத்துகள் இல்லை: