வியாழன், 11 நவம்பர், 2010

விடுதலைப்புலிகள் தடை நீடிப்பு விசாரணையில் `பவர் ஆப் அட்டர்னி' மூலம் மனு தாக்கல் செய்ய முடியாது

தீர்ப்பாயத்தின் தீர்ப்பை உறுதி செய்து ஐகோர்ட்டு உத்தரவு
விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கான தடை நீடிப்பு குறித்து விசாரிக்கும் தீர்ப்பாயத்தில் `பவர் ஆப் அட்டர்னி' மூலம் யாரும் மனு தாக்கல் செய்ய முடியாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கான தடையை நீட்டித்து 17.5.10 அன்று மத்திய அரசு அறிவிப்பாணை வெளியிட்டது. இது குறித்து விசாரணை நடத்தி உத்தரவு பிறப்பிப்பதற்காக தீர்ப்பாயம் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.விடுதலைப்புலிகள் இயக்க நிர்வாகியோ, அல்லது உறுப்பினரோ வந்து ஆஜராகி தீர்ப்பாயத்தில் தடையை நீக்கக்கோரி முறையிடலாம் என்று அறிவிக்கப்பட்டது.அதைத் தொடர்ந்து சுவிட்சர்லாந்தில் வசிக்கும் விஜயரத்னம் சிவனேசன் என்பவர், கோபிச்செட்டிபாளையம் அருகேயுள்ள வடுகபாளையம் ராமையன் தோட்டத்தைச் சேர்ந்த கலையரசு என்பவரை தனது `பவர் ஆப் அட்டர்னி'யாக நியமித்து தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவை தீர்ப்பாயம் நிராகரித்துவிட்டது. எனவே அதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் சிவனேசன் மனு தாக்கல் செய்தார். தனது மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பாயம் 28.10.10 அன்று பிறப்பித்த தீர்ப்பை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
கிட்டுவுடன் கைது
இந்த மனுவை தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் விசாரித்தனர். அவர்கள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:- சிவனேசன் 1983-ம் ஆண்டு நவம்பர் மாதம் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் சேர்ந்துள்ளார். அங்கு அவர் வீடியோ கேமராமேனாக பணியாற்றி இருக்கிறார். 1998-ம் ஆண்டு கிட்டு உட்பட 80 பேருடன் சிவனேசனும் தமிழக போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் இலங்கை பாயிண்ட் பெட்ரோவில் உள்ள உள்ள இந்திய ராணுவ முகாமில் அடைக்கப்பட்டார். பின்னர் கங்கேசன்துறை முகாமுக்கு மாற்றப்பட்டார். அங்கிருந்து அவர் 5.3.90 அன்று விடுதலை செய்யப்பட்டார். அதன் பின்னர் 9.3.90 அன்று அவர் விடுதலைப்புலிகள் இயக்கத்தைவிட்டு வெளியேறினார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் இந்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளன.
இந்நிலையில் கலையரசு என்பவரை `பவர் ஆப் அட்டர்னி'யாக சிவனேசன் நியமித்து, விடுதலை ப்புலிகள் இயக்கத்தை சட்டவிரோத இயக்கமாக அறிவித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று அவர் மூலம் தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை தீர்ப்பாயம் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது.
கலையரசு மூலம் தாக்கல் செய்யப்பட்ட சிவனேசனின் மனுவை விசாரிக்க தகுந்த முகாந்திரம் இல்லை என்று தீர்ப்பாயம் கூறியுள்ளது. தீர்ப்பாயத்தில் சிவனேசனே வந்து மனு தாக்கல் செய்வதற்கு எந்த இடைïறும் இல்லாத நிலையில், ஏன் `பவர் ஆப் அட்டர்னி' தேவை என்றும் தீர்ப்பாயம் குறிப்பிட்டுள்ளது. தீர்ப்பாயத்தின் இந்த கருத்தை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். `பவர் ஆப் அட்டர்னி'யாக காட்டப்பட்டுள்ளவர், விடுதலைப்புலிகள் இயக்கத்தின் உறுப்பினர் என்றோ, அல்லது அந்த இயக்கத்தின் செயல்பாடுகளுக்கு ஆதரவு அளிப்பவர் என்றோ மனுவில் எந்த இடத்திலும் கூறப்படவில்லை.
சட்டத்தின்நோக்கம்
தனிப்பட்ட நபர் அல்லது இயக்கம் ஆகியவற்றின் தீவிரவாத செயல்பாடுகளை தடுக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில்தான் சட்டவிரோத தடுப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டு, அதனடிப்படையில் இது போன்ற விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்திய ஒருமைப்பாட்டை காப்பதற்கும் அதை கெடுக்கும் தீவிரவாத செயல்களை களைவதற்கும்தான் இந்த சட்டம் பயன்படுத்தப்படுகிறது.இந்த சட்டத்தின் அடிப்படையில் ஒரு இயக்கத்தை தீவிரவாத இயக்கம் என்று அறிவித்து இருந்தால் அதை எதிர்த்து அந்த இயக்கத்தின் உறுப்பினர்தான் தீர்ப்பாயத்தில் தனிப்பட்ட முறையில் மனு தாக்கல் செய்ய முடியுமே தவிர, `பவர் ஆப் அட்டர்னி'களை நியமித்து மனு தாக்கல் செய்ய முடியாது. எனவே சிவனேசனின் மனுவை தீர்ப்பாயம் தள்ளுபடி செய்தது சரிதான். அந்த தீர்ப்பில் தலையிட பெரிய காரணங்கள் எதுவும் காணப்படவில்லை. எனவே சிவனேசனின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

கருத்துகள் இல்லை: