வெள்ளி, 13 நவம்பர், 2026

உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் உடல்நலம் காரணமாக உயிரிழந்துள்ளார்.

 ஸ்டாலின் தி : அஞ்சலி: நீதிபதி சி.சு. கர்ணன்.
மேனாள் உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் உடல்நலம் காரணமாக உயிரிழந்துள்ளார். 
அவருக்கு வயது 71 ஆகிறது. கடலூர் மாவட்டம், மங்கலம்பேட்டை அருகில் உள்ள கர்நத்தம் சிற்றூரில் தலித் குடும்பத்தில் பிறந்தவர் கர்ணன். அவருடைய இயற்பெயர் கருணாநிதி.
 அவரின் தந்தை அரசுப் பள்ளி ஆசிரியராக இருந்து, நல்லாசிரியர் விருதை குடியரசுத் தலைவரிடம் பெற்றவர். விருத்தாசலம் அரசு கலைக்கல்லூரியில் பல்கலைக்கழக புகுமுன் வகுப்பை முடித்து, சென்னை புதுக் கல்லூரியில் இளங்கலை அறிவியல் படிப்பையும், சென்னை சட்டக்கல்லூரியில் சட்டப் படிப்பையும் முடித்தார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றிய அவர், சென்னை மாநகர குடிநீர் வடிகால் துறையின் சட்ட ஆலோசகராகவும் பணியாற்றினார். தமிழ்நாடு அரசு சார்பிலான சிவில் வழக்கறிஞராகவும் மத்திய அரசு நிலைக்குழு வழக்கறிஞராகவும் செயலாற்றினார். சுமார் 25 ஆண்டுகள் வழக்கறிஞராக இயங்கிய அவர் 2009 இல் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.அதன் பிறகு கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 
கர்ணன் அவர்கள் சாதியத்தையும் ஊழலையும் வெறுத்தவர். அவை நீதித்துறையிலும் நிலவுவதை நீதித்துறையிலும் பொதுவிலும் முறையிட்டார். அதற்காகவே அவர் பல்வேறு இன்னல்களையும் அவமதிப்புகளையும் சந்திக்க நேர்ந்தது. 2017ஆம் ஆண்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கு கடிதம் எழுதிய கர்ணன், அதில் 20 நீதிபதிகளின் பெயர்களைக் குறிப்பிட்டு அவர்கள் ஊழலில் ஈடுபடுவதாக பட்டியலிட்டார். கர்ணனின் நடவடிக்கை தொடர்பாக அதிருப்தி அடைந்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர், கர்ணனுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலிக்கப்படும் எனத் தெரிவித்து அவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். ஆனால் கர்ணனோ யாரும் எதிர்பாராத நிலையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிராகவும் மேலும் ஏழு நீதிபதிகளுக்கு எதிராகவும் பட்டியல் இன/பழங்குடியினர் வன்கொடுமை சட்டப்படி ஐந்து ஆண்டுகளுக்கு தண்டனை விதிக்கும் உத்தரவை அதிரடியாக பிறப்பித்தார். நீதிபதி கர்ணனுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாமாக தொடர்ந்த உச்ச நீதிமன்றம் அதில் அவர் நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டது. நீதிபதி கர்ணன் அந்த உத்தரவை ஏற்க மறுத்தார். அதனால் அவருக்கு ஆறுமாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது உச்ச நீதிமன்றம். ஆறுமாதம் சிறை தண்டனையையும் அனுபவித்தார். பதவியில் இருக்கும் உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதும், அவர் ஆறு மாத சிறை தண்டனையை அனுபவித்ததும் இந்திய சட்டத்துறை வரலாற்றில் புதிய நிகழ்வாக பதிவாகி உள்ளது. அவர் கூறிய குற்றவாளிகளை விசாரணை செய்யாமல் அவரையே குற்றவாளியாக கருதி தண்டித்த பெருமையை நீதித்துறை கொண்டிருக்கிறது.
கர்ணன் சர்ச்சைகளை உருவாக்கினார், வீண் வாதங்களை நடத்தினார், நீதிபதியாக இருந்து கொண்டே தலைமறைவாக ஆனார் என்றெல்லாம் அவர் மீது பல விமர்னங்கள் பொதுவில் வைக்கப்படுகின்றன. இவற்றையெல்லாம் கடந்து, அவர் சாதியத்தையும், ஊழலையும், அவை  நீதித்துறையில் ஆதிக்கம் செலுத்தப்படுவதையும் கடுமையாக வெறுத்தார், எதிர்த்தார் என்பதுதான் முக்கியமானவை. அவருடைய அத்தகைய குணாம்சம் புரிந்து கொள்ளப்படாமல் போகும்போதெல்லாம் அவர் சர்ச்சைக்குரிய மனிதராக தெரிந்தார் என்றும் நாம் கூறலாம். 
நீதிபதி கர்ணன் அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்!

கருத்துகள் இல்லை: