செவ்வாய், 10 நவம்பர், 2026

’ஹேக்கர்களின் கைவரிசை’; தமிழக அரசின் கோடிக்கணக்கான நிதி திடீர் மாயம்!

 நக்கீரன்  :;தமிழக அரசின் வங்கிக் கணக்குகள்  ஹேக் செய்யப்பட்டு கோடிக்கண்கான ரூபாய் நிதி கையாடல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   
தமிழக ஊரக வளர்ச்சித் துறையின், அரசு நிதி பரிவர்த்தனைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டு வந்த வங்கிக் கணக்குகளை ஹேக் செய்த சில மர்ம நபர்கள், மூன்று ஊராட்சி ஒன்றியங்களின் சில குறிப்பிட்ட வங்கிக் கணக்குகளிலிருந்து சுமார் ரூ.22.10 கோடி திருடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  
இது குறித்தான முதற்கட்ட விசாரணையில், இந்த சம்பவம் வெளிநாடுகளிலிருந்து சில நபர்களால் நடத்தப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. குறிப்பாக, நைஜீரியாவிலிருந்து இந்த மோசடி சம்பவம் நடத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அரசு நிதி பரிவர்த்தனைகளுக்கான வங்கிக் கணக்குகளில் மர்ம நபர்கள் ஊடுருவி இவ்வளவு பெரிய தொகையைக் கையாடல் செய்திருப்பது அதிகாரிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   



இது குறித்து வழக்குப் பதிவு செய்த சென்னை சைபர் கிரைம் காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சம்பந்தப்பட்ட வங்கிக் கணக்குகளிலிருந்த பணம் எந்தெந்த வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டது. அந்த பணத்தை எவ்வாறு திரும்ப மீட்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், அரசின் நிதிக்கே பாதுகாப்பு இல்லாத சூழலில், சாதாரண மக்களின் வங்கிக் கணக்குகளில் உள்ள பணத்திற்கு எப்படி பாதுகாப்பு இருக்கும்? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.  

கருத்துகள் இல்லை: