திங்கள், 27 ஏப்ரல், 2026

ஏழு ஆம் ஆத்மி ராஜ்யசாபா எம்பிக்கள் பாஜகவுக்கு தாவல் .. ஒப்புதல் தந்த மாநிலங்களவை தலைவர் சி பி ராதாகிருஷ்ணன்

 மின்னம்பலம் - Mathi : ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகி 7 எம்.பிக்கள் பாஜகவில் இணைந்ததற்கு மாநிலங்களவைத் தலைவரான துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஒப்புதல் அளித்துள்ளார்.
மாநிலங்களவையில் ஆம் ஆத்மி கட்சி 10 எம்.பிக்களைப் பெற்றிருந்தது. இவர்களில் ராகவ் சத்தா உள்ளிட்ட 7 மாநிலங்களவை எம்.பி.க்கள் கூண்டோடு பாஜகவுக்கு தாவினர்.
இந்நிலையில் தாங்கள் பாஜகவில் இணைந்ததை அங்கீகரிக்க கோரி மாநிலங்களவைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு 7 எம்.பிக்களும் கடிதம் அனுப்பினர். மேலும் 7 பேர் மீதும் கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க ஆம் ஆத்மி கட்சி கோரியது.



பாஜகவில் 7 பேரும் இணைந்ததை ஏற்று ஒப்புதல் அளித்த மாநிலங்களவைத் தலைவர் சி.பி,ராதாகிருஷ்ணன், கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற ஆம் ஆத்மியின் கோரிக்கையை நிராகரித்தார்.
பாஜகவில் இணைந்த 7 எம்.பிக்கள்

    ராகவ் சத்தா
    ஹர்பஜன் சிங்
    சந்தீப் பதக்
    அசோக் மிட்டல்
    விக்ரம்ஜித் சாவ்னே
    ஸ்வாதி மாலிவால்
    ராஜிந்தர் குப்தா

கட்சித் தாவல் நடவடிக்கை நிராகரிப்பு ஏன்?

கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் (10-வது அட்டவணை) விதிகளின்படி, ஒரு கட்சியின் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் வேறொரு கட்சியுடன் இணைந்தால், அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட மாட்டார்கள்.

இந்த விதியின் கீழ், 10 உறுப்பினர்களில் 7 பேர் விலகியதால், இது சட்டப்படி “இணைப்பு” (Merger) என மாநிலங்களவை தலைவரால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், ஆம் ஆத்மி கட்சி விடுத்த தகுதி நீக்க கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களவையில் பலம்

மாநிலங்களவையில் மொத்தம் 245 எம்.பிக்கள் உள்ளனர். இவர்களில் 233 பேர் மாநில சட்டசபை, சட்டமேலவை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்; 12 பேர் ஜனாதிபதியால் நியமிக்கப்படுகின்றனர்.

மாநிலங்களவையில் அரசியல் சாசன திருத்த மசோதா உள்ளிட்டவைகளை மத்திய அரசு நிறைவேற்றுவதற்கு 3-ல் 2 பங்கு எம்.பிக்கள் ஆதரவு தேவை. அதாவது 163 எம்.பி.க்களின் ஆதரவு தேவைப்படும்.

தற்போது ஆம் ஆத்மியின் 7 எம்.பிக்கள் இணைந்ததால் பாஜகவின் மாநிலங்களவை பலம் 113 ஆக உயர்ந்தது; பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பலம் 148 ஆக உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel

கருத்துகள் இல்லை: