![]() |
முரசொலி_தலையங்கம் 27/04/26 : ஏப்ரல் 23 நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வரலாறு காணாத வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. 84.51 விழுக்காடு வாக்குகள் பதிவாகி இருக்கிறது.
ஒவ்வொரு தேர்தலிலும் வாக்குப்பதிவானது அதிகரித்தே வருகிறது. அந்த வகையில் இந்தத் தேர்தலிலும் வாக்குப்பதிவு அதிகரித்துள்ளது.
ஆனால், இதை வைத்து பல்வேறு வதந்திகளை பலரும் கிளப்பி வருகிறார்கள்.
ஆளும்கட்சி மீதான கோபம்’ என்று சில சில்லறைகள் முட்டாள் தனமாக ஊடகங்களில் ஊளையிட்டு வருகிறார்கள்.
கடந்த தேர்தலை விட 30 லட்சம் வாக்குகள் மட்டுமே அதிகம் ஆகி இருக்கிறது.
இளைஞர்கள், புதிய வாக்காளர்கள் வாக்கு இந்த தேர்தலில் அதிகம் ஆகிவிட்டது என்று சொல்வதும் உண்மையல்ல. அனைத்து தேர்தலிலும் இளைஞர்கள், புதிய வாக்காளர்கள் வாக்கு அதிகமாகி வருகிறது. படித்தவர்கள் அதிகமாவதும், வேலைக்குச் செல்பவர்கள் அதிகமாவதும், அதன் மூலமாக அரசியல் விழிப்புணர்வு பெற்றவர்கள் அதிகமாவதும் வழக்கமானதுதான். இதனால் வாக்களிப்பவர்களும் அதிகமாகி வருகிறார்கள்.
விழுக்காடுக்கும் எண்ணிக்கைக்கும் இருக்கும் வேறுபாட்டைப் பார்த்தால் அதிகமான அளவுக்கு வாக்குகள் பதிவாகவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
சென்னையைப் பொறுத்தவரையில் 2021 தேர்தலில் 24.16 லட்சம் பேர் வாக்களித்தார்கள். இந்த முறை 23.68 லட்சம் பேர் தான் வாக்களித்துள்ளார்கள்.
வட மாவட்டங்களில் 2021 தேர்தலில் 1.32 கோடி பேர் வாக்களித்தார்கள். இந்த முறை 1.38 கோடி பேர் வாக்களித்துள்ளார்கள்.
மத்திய மாவட்டங்களில் 2021 தேர்தலில் 80.82 லட்சம் பேர் வாக்களித்தார்கள். இந்த முறை 80.64 லட்சம் பேர்தான் வாக்களித்துள்ளார்கள்.
மேற்கு மாவட்டங்களில் 2021 தேர்தலில் 1.16 கோடி பேர் வாக்களித்தார்கள். இந்த முறை 1.21 கோடி பேர் வாக்களித்துள்ளார்கள்.
தென் மாவட்டங்களில் 2021 தேர்தலில் 1.11 கோடி பேர் வாக்களித்தார்கள். இந்த முறை 1.17 கோடி பேர் வாக்களித்துள்ளார்கள்.
விழுக்காடு அடிப்படையில் கூடினாலும், எண்ணிக்கை என்பது அவ்வளவு அதிகம் அல்ல. கடந்த 15 ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் குறைந்த அளவில் வாக்குகள் பதிவானது இப்போதுதான் என்று ‘தி இந்து’ ஆங்கில நாளேடு எழுதி உள்ளது. விழுக்காடு அடிப்படையில் அதிகம் என்றாலும் எண்ணிக்கை அடிப்படையில் குறைவு தான் என்பதை விரிவாக எழுதி இருக்கிறது ‘தி இந்து’.
வாக்காளர் பட்டியலை சுத்தம் ஆக்கியதுதான் முதல் காரணம். SIR என்ற பெயரால் ஒரு சதி நடக்க இருந்தது. அதனைத் தடுத்ததும் திராவிட முன்னேற்றக் கழகமே.
SIR ஐ வைத்து பீகாரில் லட்சக்கணக்கான வாக்குகளை நீக்கினார்கள். உண்மையில் இறந்தவர்கள், இடம் பெயர்ந்தவர்கள், இரண்டு இடங்களில் பேர் இருப்பவர்கள் என நீக்கினால் நம்மிடம் எதிர்ப்பு இல்லை. ஆனால் மொத்தம் மொத்தமாக நீக்கினார்கள் பீகாரில். ஒரு தொகுதியில் பட்டியலின மக்களை நீக்கினார்கள். இன்னொரு தொகுதியில் இசுலாமிய மக்களை நீக்கினார்கள்.
பீகாரில் லட்சக்கணக்கான வாக்காளர் பெயர் நீக்கம், அரியானாவில் 25 லட்சம் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டது, பிரேசில் பெண் ஒருவரது பெயர் அரியானா மாநில வாக்காளர் பட்டியலில் இருப்பது, மகாராஷ்டிரா தேர்தல் மோசடி, கர்நாடகா மகாதேவ்புரா தொகுதி போலி வாக்காளர் சேர்ப்பு என்று பல்வேறு மாநிலங்களில் பலவிதமான மோசடிகள் நடந்தது. இவை எதுவும் தமிழ்நாட்டில் நடந்துவிடாமல் தடுத்தது தி.மு.க.
“தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பில் உள்ள குறைகள் களையப்பட வேண்டும். உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலை வெளிப்படையாக கடைப்பிடிக்க வேண்டும். உரிய அவகாசம் தரப்பட வேண்டும். எக்கட்சிக்கும் சார்பற்ற நிலையில் தேர்தல் ஆணையம் முதலில் தன் மீதான நம்பிக்கையை நிலை நிறுத்திக் கொள்ள முன் வரவேண்டும். அதன் பிறகு முறைப்படி பின் வரும் காலங்களில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் சீராய்வு (S.I.R.) நடத்தலாம்”என்று அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டி தீர்மானித்தது தி.மு.க. உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. தேர்தல் ஆணையம் தனது வேலையை நிறுத்தாமல் தொடர்ந்தது. இந்த நிலையில் தேர்தல் ஆணையத்தை கண்காணித்தது தி.மு.க. அந்தப் பணிகளோடு தன்னை இணைத்துக் கொண்டது தி.மு.க.
S.I.R நடவடிக்கைகளுக்குப் பிறகு தமிழ்நாட்டின் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது. 97 லட்சத்து 37 ஆயிரத்து 831 வாக்காளர்கள் நீக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இரட்டைப் பதிவு உள்ளவர்களாக 3 லட்சத்து 98 ஆயிரத்து 278 பேர், உயிரிழந்தவர்களாக 26 லட்சத்து 94 ஆயிரத்து 672 பேர், 66 லட்சத்து 44 ஆயிரத்து 881 பேர் இடம் பெயர்ந்தவர்கள் என அறிவிக்கப்பட்டது. SIR பணிகளை தி.மு.க. தீவிரமாக கண்காணித்ததால், அதில் பெரிய அளவில் எதையும் தேர்தல் ஆணையத்தால் செய்ய முடியவில்லை.
பா.ஜ.க. ஆளும் மாநிலமாக இருந்தால் சதி செய்திருப்பார்கள். ஆனால் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியை மீறி பல்வேறு சதிகளைச் செய்து விட்டதாக அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டி வருகிறார். அது போன்ற நிலைமை தமிழ்நாட்டில் இல்லை.
கடந்த தேர்தலில் 6.41 கோடியாக இருந்த வாக்காளர் பட்டியல், இந்த தேர்தலில் 5.73 கோடியாகக் குறைந்தது. இறந்தவர்கள், இடம்பெயர்ந்தவர்கள், இரட்டைப் பதிவு பெற்றவர்கள் நீக்கப்பட்டதே இதற்குக் காரணம். இந்த வகையில் பார்த்தால், கடந்த தேர்தலுக்கும் இந்த தேர்தலுக்குமான வாக்களித்தவர் எண்ணிக்கை ஓரளவு சமம் தான்.
விழுக்காடு கணக்கை வைத்துக் கொண்டு, ‘ஏதோ தங்களால் தான் வாக்குப்பதிவு அதிகமானது’ என்று தற்குறித்தனமாக ஒருவர் அறிக்கைவிடுவது எல்லாம் அறியாமையே தவிர வேறல்ல. தலை சுற்றி விழும் போது, உலகமே தன்னால் சுற்றுவதாக நினைக்கும் முட்டாள் தனமே ஆகும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக