திங்கள், 24 ஜூன், 2024

கல்வராயன் மலையில் கள்ளச்சாராய வேட்டைக்கு சென்ற 7 போலீசார் திடீர் மாயம்! தேடும் பணி தீவிரம்!

 tamil.oneindia.com  -  Vignesh Selvaraj  :  கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கல்வராயன் மலையில் கள்ளச்சாராய வேட்டைக்கு சென்ற திருச்சி பட்டாலியன் போலீசார் 7 பேர் மாயமானதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்ததால் 59 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும், நூற்றுக்கும் அதிகமானோர் தற்போது சிகிச்சையில் இருந்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் கள்ளச்சாராயத்தை தடுக்கத் தவறிய ஆளும் திமுக அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.
kallakurichi illicit liquor tamil nadu Kalvarayan hill Police



பாஜக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், திமுக அரசுக்கு நெருக்கடி கொடுத்து வரும் நிலையில், கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளது அரசு. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலி வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கள்ளக்குறிச்சி கல்வராயன் மலைப்பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கள்ளச் சாராயத்தை பறிமுதல் செய்ய போலீசார் தேடுதல் வேட்டை மேற்கொண்டுள்ளனர். கள்ளச்சாராயம் உற்பத்தி மையமாக இந்த கல்வராயன் மலை, சமூக விரோதிகளால் மாற்றப்பட்டு உள்ளது.

சேலம், தருமபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களை இணைக்கும் அடர் வனப்பகுதியாக உள்ளது கல்வராயன் மலை. கல்வராயன் மலையில் உள்ள நீரோடைகளில் வரும் தண்ணீரை பயன்படுத்தி சில சமூக விரோதிகள் கள்ளச்சாராயம் தயார் செய்து பல்வேறு இடங்களில் விற்பனை செய்து வருகின்றனர்.

கள்ளச்சாராய பலி சம்பவத்தை தொடர்ந்து, கல்வராயன் மலையில் தமிழ்நாடு சிறப்பு காவல் படை, பட்டாலியன் போலீசார் அடங்கிய குழு கல்வராயன் மலையில் சாராயம் தயாரிக்கும் ஊறல்களைக் கண்டுபிடித்து அழிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தடுத்தாம்பாளையம் அடர்ந்த வனப் பகுதியில் இருந்த 20 போலீசாரில் 13 பேர் உணவு சாப்பிட, வனப்பகுதியை விட்டு வெளியேறி உள்ளனர். மீதமுள்ள 7 போலீசாரும் 2 மணி நேரத்திற்கும் மேலாகியும் வெளியே வராததால் போலீசார் அச்சமடைந்துள்ளனர். மாயமான 7 பேரையும் எஞ்சிய போலீசார் தேடி வருகின்றனர்.

மாயமான 7 பேரும் திருச்சி பட்டாலியனை சேர்ந்தவர்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள் வழி மாறிச் சென்றிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கருத்துகள் இல்லை: