tamil.oneindia.com - Nantha Kumar R : டெல்லி: இந்தியா சுதந்திர அடைந்ததில் இருந்து இதுவரை லோக்சபா சபாநாயகர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு வந்தார்.
ஆனால் முதல் முறையாக தற்போது பாஜக கூட்டணி மற்றும் ‛இந்தியா' கூட்டணி சார்பில் தனித்தனியாக வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் தேர்தல் மூலம் சபாநாயகர் தேர்வு செய்யப்பட உள்ளார்.
இந்நிலையில் தான் லோக்சபா சபாநாயகர் தேர்தல் எப்படி நடக்கும்?,
பாஜக கூட்டணியை வீழ்த்தி ‛இந்தியா' கூட்டணி வேட்பாளர்களால் வெல்ல முடியுமா? என்பது பற்றி இங்கு பார்ப்போம்.
லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்தன. மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்தது. அதன்பிறகு ஜுன் 4ல் ஓட்டு எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.
இதில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. தனித்து ஆட்சியை பிடிக்க 272 தொகுதிகளில் வெல்ல வேண்டும் என்ற நிலையில் எந்த கட்சிக்கும் அந்த எண்ணிக்கை கிடைக்கவில்லை.
பாஜக தனிப்பெரும் கட்சியாக 240 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதையடுத்து பாஜக தனது கூட்டணி கட்சிகளின் 52 எம்பிக்களின் ஆதரவில் மத்தியில் ஆட்சியை அமைத்தது. பாஜக தலைமையிலான என்டிஏ எனும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தற்போது 293 எம்பிக்களின் ஆதரவு உள்ளது.
1946க்கு பிறகு, வரலாற்றில் முதல்முறை லோக்சபா சபாநாயகர் பதவிக்கு தேர்தல்! ஓம் பிர்லா VS சுரேஷ் போட்டி1946க்கு பிறகு, வரலாற்றில் முதல்முறை லோக்சபா சபாநாயகர் பதவிக்கு தேர்தல்! ஓம் பிர்லா VS சுரேஷ் போட்டி
இதனால் மீண்டும் நரேந்திர மோடி 3வது முறையாக பிரதமராகி உள்ளார். மத்திய அமைச்சரவை அமைக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி உள்பட 72 பேர் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர். அதேபோல் ‛இந்தியா' கூட்டணிக்கு மொத்தம் 236 எம்பிக்கள் உள்ளன. இதில் அதிகபட்சமாக காங்கிரஸ் கட்சிக்கு 98 எம்பிக்கள் (ராகுல் காந்தி வயநாடு எம்பி பதவியை ராஜினாமா செய்ததால் ஒன்று குறைக்கப்பட்டுள்ளது) உள்ளன.
இந்நிலையில் தான் புதிதாக தேர்வான எம்பிக்கள் பதவியேற்கும் வகையில் நாடாளுமன்ற கூட்டம் வரும் ஜுன் 24ம் தேதி தொடங்கியது. இதையடுத்து இடைக்கால சபாநாயகராக ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பாஜக எம்பி பர்த்ருஹரி மஹ்தாப் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை இன்று ஜனாதிபதி திரெளபதி முர்மு பிறப்பித்துள்ளார். இதையடுத்து நேற்று முதல் நாடாளுமன்றம் தொடங்கியது. புதிதாக தேர்வான எம்பிக்கள் பதவியேற்றனர். இன்று 2வது நாளாக எம்பிக்கள் பதவியேற்று வருகின்றனர்.
இதையடுத்து நாளை புதிய சபாநாயகரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற உள்ளது.
இதில் பாஜக தலைமையிலான கூட்டணி சார்பில் மீண்டும் ராஜஸ்தான் கோட்டா தொகுதி எம்பியான ஓம்பிர்லா சபாநாயகர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
இவர் இன்று மனுத்தாக்கலும் செய்தார். இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு இதுவரை சபாநாயகர் என்பவர்கள் ஒருமனதாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதனால் மத்தியில் கூட்டணி ஆட்சி அமைந்தாலும் கூட சபாநாயகர் தேர்தலில் வேட்பாளரை நிறுத்த வேண்டாம் என்று ‛இந்தியா' கூட்டணி கட்சி தலைவர்களிடம் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார். அப்போது ‛இந்தியா' கூட்டணிக்கு துணை சபாநாயகர் பதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
அதனை ராஜ்நாத் சிங் ஏற்கவில்லை. இதையடுத்து ‛இந்தியா' கூட்டணி சார்பிலும் லோக்சபா சபாநாயகர் தேர்தலில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டன. ‛இந்தியா' கூட்டணி சார்பில் கேரளாவை சேர்ந்த காங்கிரஸ் எம்பி கொடிக்குன்னில் சுரேஷ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
இதனால் சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக நாளை லோக்சபா சபாநாயகர் பதவிக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் இந்த தேர்தல் எப்படி நடக்கும்? சபாநாயகர் எப்படி தேர்வு செய்யப்படுவார்கள்? என்பது பற்றி பலருக்கும் சந்தேகம் எழுந்துள்ளது. அதற்கு விடை இந்த செய்தியில் உள்ளது. அதாவது லோக்சபா சபாநாயகர் தேர்வு என்பது வாக்கெடுப்பு முறையில் நடத்தப்படும். அதாவது லோக்சபாவில் மொத்தம் 543 எம்பிக்கள் உள்ளன. இதில் சிம்பிள் மெஜாரிட்டிக்கு 272 எம்பிக்களின் ஆதரவு வேண்டும்.
"துணை சபாநாயகர் யார்!" பாஜக கூட்டணிக்குள் எழுந்த சிக்கல்? முக்கிய பதவி யாருக்கு செல்கிறது.. பரபர
அந்த வகையில் தான் லோக்சபா சபாநாயகர் தேர்வும் நடக்கும். அதாவது நாளைய தினம் நடக்கும் லோக்சபா சபாநாயகர் தேர்தலின்போது பாஜக கூட்டணி வேட்பாளர் ஓம்பிர்லா, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ‛இந்தியா' கூட்டணி வேட்பாளர் கொடிக்குன்னில் சுரேஷ் ஆகியோரில் யாருக்கு 272 அல்லது அதற்கு மேற்பட்ட எம்பிக்களின் ஆதரவு உள்ளதோ அவர்கள் சபாநாயகராக தேர்வு செய்யப்படுவார். இதில் எம்பிக்கள் தங்களின் ஆதரவை குறிப்பிட்ட வேட்பாளர்களின் பெயரை கூறும்போது கையை உயர்த்தி தெரிவிப்பார்கள். எம்பிக்களின் எண்ணிக்கையை கணக்கிட்டு இடைக்கால சபாநாயகர் பர்த்ருஹரி மஹ்தாப் ரிசல்ட் முடிவை அறிவிப்பார்.
அதன்படி பார்த்தால் தற்போதைய சூழலில் பாஜக தலைமையிலான கூட்டணிக்கு லோக்சபாவில் 293 எம்பிக்களின் ஆதரவு உள்ளது. மாறாக ‛இந்தியா' கூட்டணிக்கு 236 எம்பிக்கள் மட்டுமே உள்ளன. இன்னும் சுயேச்சை, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் உள்பட பிற கட்சிகளின் எம்பிக்களை சேர்த்தாலும் கூட ‛இந்தியா' கூட்டணிக்கு 272 என்ற மேஜிக் நம்பரை எட்டுவது கஷ்டம். இதனால் பாஜக கூட்டணியின் வேட்பாளர் ஓம்பிர்லாவை நாளைய தேர்தலில் வென்று மீண்டும் லோக்சபா சபாநாயகராக பதவியேற்க அதிக வாய்ப்புள்ளது என்று சொல்லப்படுகிறது.
அதேவேளையில் நாம் இன்னொரு விஷயத்தை நினைவில் கொள்ள வேண்டும். ஏனென்றால் அரசியலில் எப்போது வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். தற்போது மத்தியில் பாஜக கூட்டணி ஆட்சி நடக்கும் நிலையில் கூட்டணி கட்சி எம்பிக்கள் சபைக்கு வராமல் இருப்பது அல்லது ஓம்பிர்லாவுக்கு பதில் ‛இந்தியா' கூட்ணியின் கொடிக்குன்னில் சுரேசுக்கு வாக்களித்தால் நிலைமை என்பது வேறுவிதமாக மாறிவிடும். உதாரணத்துக்கு பாஜக கூட்டணிக்கு 293 எம்பிக்கள் உள்ள நிலையில் சுமார் 20 பேர் வரவில்லை என்றால் மெஜாரிட்டிக்கு தேவையான ஓட்டுகள் 272ல் இருந்து குறையும். இதனால் நாளைய சபாநாயகர் தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் இந்த லோக்சபா தேர்தலில் தொடக்கம் முதலே பாஜகவுக்கு எதிர்க்கட்சிகளின் ‛இந்தியா' கூட்டணி கடும் போட்டி கொடுத்தது. அதோடு யாரும் எதிர்பார்க்காத வகையில் 28 கட்சிகள் ஒன்றிணைந்து பாஜகவுக்கு தனி மெஜாரிட்டி கிடைக்காமல் செய்துள்ளது. இத்தகைய சூழலில் தான் பாஜக கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. கூட்டணி ஆட்சியை பொறுத்தமட்டில் எப்போது வேண்டுமானாலும் குழப்பம் ஏற்படலாம்.
அதுவும் தற்போது பாஜக கூட்டணியில் உள்ள ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சிக்கு 16 எம்பிக்களும், பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சிக்கு 12 எம்பிக்களும் உள்ளனர். இவர்கள் 2 பேரும் பாஜகவுடன் ஏற்கனவே கூட்டணியை முறித்தவர்கள். அதோடு கூட்டணி மாறும் தன்மை கொண்டவர். இதனால் தான் சபாநாயகர் பதவியை தக்க வைக்க பாஜக முயல்கிறது.
ஏனென்றால் லோக்சபா சபாநாயகர் நினைத்தால் கவிழும் ஆட்சியை காப்பாற்றவும் முடியும். நன்றாக இருக்கும் ஆட்சியை கவிழ்க்கவும் முடியும். ஏனென்றால் லோக்சபாவில் நிகழ்ச்சி நிரலை அவர் தான் முடிவு செய்வார். ஒத்திவைப்பு தீர்மானம், நம்பிக்கையில்லா தீர்மானம் உள்ளிட்டவற்றை அவர் தான் முடிவு செய்தார். மேலும் நீதிமன்றங்கள் கூட சில சந்தர்ப்பங்களில் சபாநாயகரின் முடிவில் தலையிட முடியாது. இதனால் தான் லோக்சபா சபாநாயகர் பதவியை கைப்பற்ற பாஜகவும், பாஜகவுக்கு சபாநாயகர் பதவி கிடைக்கவிடாமல் தடுக்க காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ‛இந்தியா' கூட்டணியும் களமிறங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக