சனி, 29 ஜூன், 2024

பட்டாசு ஆலை வெடி விபத்து.. சாத்தூர் ... உயிரிழந்த 4 பேருக்கு தலா ரூ.3 லட்சம்!

 மின்னம்பலம் - Kavi :  சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
சாத்தூர் அருகே அச்சங்குளத்தை சேர்ந்த சகாதேவன் என்பவருக்கு சொந்தமாக பட்டாசு ஆலை ஒன்று பந்துவார்பட்டியில் செயல்பட்டு வருகிறது.
இங்குள்ள 6 அறைகளில் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. வழக்கம் போல் இன்று ஊழியர்கள் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்தனர். மருந்து கலவை செய்து கொண்டிருக்கும் போது ஒரு அறையில் உராய்வு ஏற்பட்டு விபத்து ஏற்பட்டுள்ளது.



இதில் பட்டாசுகள் வெடித்து சிதறியதில் அந்த கட்டிடமே தரைமட்டமானது. இந்த விபத்தில் அச்சங்குளத்தைச் சேர்ந்த போர்மேன் ராஜ்குமார், சூரங்குடியைச் சேர்ந்த மாரிச்சாமி, சத்திரப்பட்டியைச் சேர்ந்த மோகன்ராஜ், செல்வகுமார் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் ராமச்சந்திரன் என்பவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவர்களின் உடல்கள் சாத்தூரில் உள்ள அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து உயிரிழந்தவர்களின் உறவினர்கள் பட்டாசு ஆலை முன் வந்து கதறி அழுதது காண்போரை கண் கலங்கச் செய்தது.

இந்த விபத்து தொடர்பாக சாத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சம்பவ இடத்தில் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா ஆகியோர் ஆய்வு நடத்தினர்.

இதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் கூறுகையில், “பட்டாசு கலவை செய்யும் அறையில் நேற்று பணி முடிந்து வேதிப்பொருட்களை முறையாக அப்புறப்படுத்தாமல் இன்று காலை மருந்து கலவை செய்ததால் உராய்வு ஏற்பட்டு விபத்து ஏற்பட்டது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.  இந்த ஆலை முறையான அனுமதி பெற்று செயல்பட்டு வந்துள்ளது. அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக மருந்துகளை பயன்படுத்திய 80 பட்டாசு ஆலைகளின் உரிமங்கள் கடந்த மூன்று மாதத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளன ” என்றார்.

இந்நிலையில் பட்டாசு ஆலை உரிமையாளர் சகாதேவனை போலீசார் தேடி வருகின்றனர். அவரது மகன் குருசாமி பாண்டியன் ஆகியோர் மீதும் 5 பிரிவுகளின் கீழ் சாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இதில் குருசாமி பாண்டியன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த விபத்து குறித்து இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 3 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார்.
பிரியா

கருத்துகள் இல்லை: