செவ்வாய், 25 ஜூன், 2024

விக்கிலீக்ஸ் - ஜூலியன் அசாஞ்ச் விடுதலை

  BBC News தமிழ் -, பெர்ண்ட் டெபுஸ்மேன் : நீண்ட கால சட்டப் போராட்டத்திற்கு பின்னர், விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச் தன் மீது சுமத்தப்பட்ட குற்றங்களை அமெரிக்க அதிகாரிகளிடம் ஒப்புக்கொண்டு, அதுதொடர்பாக ஒப்பந்தம் செய்துகொண்டதையடுத்து, அவர் விடுதலையாகி பிரிட்டனிலிருந்து வெளியேறியதாக, விக்கிலீக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க தேசிய ஆவணங்களை பெற்று, அதனை வெளியிட சதி செய்ததாக 52 வயதான அசாஞ்சே மீது குற்றம் சுமத்தப்பட்டது.
இராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற போர்கள் தொடர்பாக, விக்கிலீக்ஸ் வெளியிட்ட ஆவணங்கள் மூலம் பலரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டதாக பல ஆண்டுகளாக அமெரிக்கா வாதாடியது.



கடந்த ஐந்து ஆண்டுகளாக பிரிட்டன் சிறையில் இருந்த அசாஞ்ச், அங்கிருந்து அவர் அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்படுவதை எதிர்த்துப் போராடி வந்தார்.

பிபிசி-யின் அமெரிக்க கூட்டாளியான சி.பி.எஸ் ஊடகம், அசாஞ்ச் அமெரிக்க காவலில் இனியும் இருக்க மாட்டார் என்று கூறியுள்ளது.

நீதித்துறை அளித்துள்ள கடிதத்தின்படி, அசாஞ்ச் ஆஸ்திரேலியா திரும்புவார்.

வாட்ஸ் ஆப்

பெல்மார்ஷ் சிறையின் சிறிய அறையில் 1,901 நாட்கள் கழித்தநிலையில், திங்கட்கிழமை அங்கிருந்து அவர் வெளியேறியதாக, எக்ஸ் சமூக ஊடகத்தில் விக்கிலீக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

“அவர் பின்னர் மதியத்தில் ஸ்டான்ஸ்டெட் விமான நிலையத்தில் விடுவிக்கப்பட்டு அங்கிருந்து பிரிட்டனுக்கு விமானம் மூலம் சென்று அங்கிருந்து ஆஸ்திரேலியா திரும்புவார்,” என விக்கிலீக்ஸ் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

விக்கிலீக்ஸ் வெளியிட்ட வீடியோவில், நீல நிற சட்டை மற்றும் ஜீன்ஸ் அணிந்துள்ள ஜூலியன் அசாஞ்ச், விமானத்தில் புறப்படுவதற்கு முன்னர் காரில் சென்றார்.

ஆஸ்திரேலியா கூறியது என்ன?
அசாஞ்ச்-இன் ஆதரவாளர்களுக்கு எக்ஸ் சமூக ஊடகத்தில் நன்றி தெரிவித்துள்ள அவருடைய மனைவி ஸ்டெல்லா அசாஞ்சே, “இது நனவாக பல ஆண்டுகளாக அணிதிரண்டவர்களுக்கு நன்றி,” என தெரிவித்துள்ளார்.

தன் குற்றங்களை ஒப்புகொள்வதாக ஜூலியன் செய்துகொண்ட ஒப்பந்தம், ஜூன் 26, புதன் கிழமையன்று வடக்கு மரியானா தீவுகளில் உள்ள நீதிமன்றத்தில் இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொலைதூர பசிபிக் தீவான வடக்கு மரியானா, ஹவாய் அல்லது வட அமெரிக்காவில் (Continental US) உள்ள கூட்டாட்சி நீதிமன்றங்களை விட ஆஸ்திரேலியாவுக்கு சிறிது அருகில் உள்ளது.

ஆஸ்திரேலியா அரசின் செய்தித்தொடர்பாளர், “இந்த வழக்கு நீண்ட காலத்திற்கு இழுத்தடிக்கப்பட்டதாக,” கூறியதாக ஏ.எஃப்.பி செய்தி முகமை தெரிவிக்கிறது.

சி.பி.எஸ் ஊடகம் அசாஞ்ச்சின் வழக்கறிஞர் ரிச்சர்ட் மில்லரை தொடர்புகொண்ட போது அவர் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். அமெரிக்காவில் உள்ள அவருடைய வழக்கறிஞரையும் பிபிசி தொடர்புகொண்டது.

ஜூலியன் அசாஞ்ச் மற்றும் அவருடைய வழக்கறிஞர்கள், அவருக்கு எதிரான வழக்கு அரசியல் நோக்கம் கொண்டது என நீண்ட காலமாக தெரிவித்து வருகின்றனர்.

அசாஞ்ச்-க்கு எதிரான விசாரணையைக் கைவிடுமாறு ஆஸ்திரேலியாவின் கோரிக்கையைத் தான் பரிசீலித்துவருவதாக, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடந்த ஏப்ரல் மாதம் தெரிவித்திருந்தார்.

அதற்கு அடுத்த மாதமே, தான் அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்படுவதற்கு எதிராக புதிதாக அசாஞ்ச் மேல்முறையீடு செய்யலாம் என, பிரிட்டன் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இது, தன் மீதான விசாரணை எப்படி நடைபெறும் மற்றும் தன்னுடைய பேச்சு சுதந்திரம் மீறப்படுமா என்பது குறித்து அமெரிக்கா அளித்துள்ள உத்தரவாதங்களை அவர் சவால் விடுக்க அனுமதித்தது.

இந்த உத்தரவையடுத்து, அசாஞ்ச்-இன் மனைவி ஸ்டெல்லா, செய்தியாளர்கள் மற்றும் ஆதரவாளர்களிடம் பேசும்போதும் பைடன் நிர்வாகம் “இந்த அவமானகரமான விசாரணையிலிருந்து ஒதுங்கி நிற்க வேண்டும்,” என்று கூறினார்.

ஆப்கானிஸ்தான் மற்றும் இராக்கில் நடைபெற்ற போர்கள் தொடர்பான அமெரிக்காவின் ரகசிய ராணுவ ஆவணங்கள் மற்றும் ராஜதந்திர செய்திகளை வெளியிட்டதற்காக, உளவுச் சட்டத்தின் கீழ் 18 வழக்குகளில் அசாஞ்ச்-ஐ விசாரிக்கவே அமெரிக்க வழக்கறிஞர்கள் முதலில் விரும்பினர்.

சுமார் ஒரு கோடி ஆவணங்களை வெளியிட்டதாக 2006-இல் அசாஞ்ச் நிறுவிய விக்கி லீக்ஸ் நிறுவனம் தெரிவித்தது. இதுகுறித்து பின்னர், “அமெரிக்க வரலாற்றில் பாதுகாக்கப்பட வேண்டிய தகவல்கள் மீது பெரியளவில் நடைபெற்ற சமரசம்,” என அமெரிக்க அரசு கூறியது.

கடந்த 2010-ம் ஆண்டு விக்கிலீக்ஸ் இணையதளம் அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டரில் ராய்ட்டர் செய்தி முகமையின் நிருபர்கள் இரண்டு பேர் உட்பட பத்துக்கும் மேற்பட்ட இராக் மக்கள் பாக்தாத்தில் கொல்லப்பட்ட வீடியோ ஒன்றை வெளியிட்டது.

அசாஞ்ச்சின் அதிகம் அறியப்பட்ட கூட்டாளியான அமெரிக்க ராணுவ உளவு ஆய்வாளரான செல்ஸீ மேன்னிங்-க்கு 35 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது, இதையடுத்து 2017-இல் அப்போதைய அதிபர் பாரக் ஒபாமா அவருடைய தண்டனையை குறைத்தார்.

அசாஞ்ச் மீது சுவீடனில் பாலியல் வன்புணர்வு மற்றும் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு வழக்குகளும் உள்ளன, அக்குற்றச்சாட்டுகளை அவர் மறுத்துள்ளார்.

சுவீடனில் உள்ள இந்த வழக்கு தன்னை அமெரிக்காவுக்கு அனுப்ப வழிவகுக்கும் என்பதால், லண்டனில் உள்ள ஈக்வேடார் தூதரகத்தில் ஏழு ஆண்டுகளாக தஞ்சம் புகுந்தார்.

புகார் அளிக்கப்பட்டதிலிருந்து அதிக காலமானதாகக் கூறி, 2019-ஆம் ஆண்டில் அந்த வழக்கை ஸ்வீடன் நீதித்துறை கைவிட்டது. ஆனால், ஜூலியன் அசாஞ்ச்-ஐ லண்டன் அதிகாரிகள் காவலில் எடுத்தனர். அவர் நீதிமன்றத்தில் சரணடையாததால் சுவீடனுக்கு நாடு கடத்தப்பட்டார்.

நீண்ட கால சட்டப் போராட்டமாக இருந்தாலும், அவர் பொதுவெளியில் மிக அரிதாகவே காணப்பட்டார். பல ஆண்டுகளாக அவருடைய உடல்நிலை மோசமானதாகவும் சிறையில் 2021-ஆம் ஆண்டில் அவருக்கு லேசான பக்கவாதம் ஏற்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.

கருத்துகள் இல்லை: