வெள்ளி, 8 செப்டம்பர், 2023

இடைத்தேர்தல்களில் இந்தியா கூட்டணி அமோக வெற்றி 7 தொகுதி இடைத்தேர்தல் முடிவு!

மாலைமலர் : 7 தொகுதி இடைத்தேர்தல் முடிவு- அதிக வெற்றிகளை குவித்த "இந்தியா" கூட்டணி
ஆறு மாநிலங்களில் உள்ள ஏழு சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த 5-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இன்று வாக்குகள் எண்ணப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், காலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பகேஷ்வர், உத்தர பிரதேசத்தில் உள்ள கோசி, கேரளாவில் உள்ள புதுபள்ளி, மேற்கு வங்காளத்தில் உள்ள துப்குரி, ஜார்க்கண்டில் உள்ள தும்ரி, திரிபுராவில் உள்ள போக்சாநகர், தன்புர் ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்றது.
இந்நிலையில், இந்த ஏழு தொகுதிகளில் "இந்தியா கூட்டணி" பெரும்பாலான தொகுதிகளில் வெற்றியை குவித்துள்ளது.


கேரள மாநிலம் புதுப்பள்ளி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரும், கேரள முன்னாள் முதல்வருமான உம்மன் சாண்டியின் மகனுமான சாண்டி உம்மன் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
சாண்டி உம்மன் (காங்கிரஸ்) - 80,144 வாக்குகளும், ஜெய்க் சி தாமஸ் (சிபிஐஎம்) 42,425 வாக்குகளும், லிஜின் லால் (பாஜக) - 6,558 வாக்குகளும் பெற்றனர். இதன்மூலம், பா.ஜ.க டெபாசிட்டை இழந்துள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் உள்ள கோசி தொகுதியில் சமாஜ்வாடி முன்னிலையில் உள்ளது.

மேற்கு வங்கத்தில் உள்ள துப்குரி தொகுதியில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் வென்றுள்ளது.

ஜார்க்கண்டில் ஆளும் ஜே.எம்.எம் (ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி) வேட்பாளர் பேபி தேவி 17 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (என்டிஏ) வேட்பாளர் யசோதா தேவியை தோற்கடித்து வெற்றி பெற்றார்.

திரிபுராவில் போக்சாநகர், தன்புர் ஆகிய தொகுதிகளில் பா.ஜ.க. வென்றுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் இடைத்தேர்தல் நடைபெற்ற பகேஷ்வர் தொகுதியில் பா.ஜ.க வெற்றி பெற்றுள்ளது.

விரைவில் ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல், 2024 பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகளின் "இந்தியா" கூட்டணிக்கு இது பரிசோதனையாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி, இடைத்தேர்தல் நடைபெற்ற ஏழு தொகுதிகளில் 4 தொகுதிகளில் "இந்தியா" கூட்டணி வெற்றிப்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

கருத்துகள் இல்லை: