புதன், 6 செப்டம்பர், 2023

உதயநிதிக்கு கொலை மிரட்டல் விடுத்த அயோத்தி சாமியார் மீது வழக்குப்பதிவு

nakkheeran.in :தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி, “சனாதனம் என்ற பெயரே சமஸ்கிருதத்தில் இருந்து வந்ததுதான்.
இந்த மாநாட்டை பார்க்கின்ற போது சிலருக்கு எரிச்சல் இருக்கும். அவர்களுக்கு முடிந்த வரை எரியட்டும். எல்லா சமூக மக்களையும் ஒரே இடத்தில் குடி வைத்து அந்த இடத்திற்கு சமத்துவபுரம் என்று பெயர் வைத்து சனாதனத்திற்கு சம்மட்டி அடி கொடுத்தவர்தான் கலைஞர்.
டெங்கு, மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது, ஒழித்துக் கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனமும். சொந்த மாநில மக்களை இரண்டு குழுக்களாகப் பிரித்து கலவரத்தை மூட்டி உள்ளார்கள். இதுதான் சனாதனம். சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம்” என்றார்.


அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சு இந்தியா முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பல்வேறு அரசியல் தலைவர்கள் அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனிடையே சனாதனத்திற்கு எதிராக பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் தலைக்கு 10 கோடி ரூபாயை சன்மானமாக அயோத்தியை சேர்ந்த சாமியார் பரமஹம்ஸ ஆச்சாரியா அறிவித்திருந்தார்.

இந்நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்து சர்சைக்குரிய வகையில் பேசிய அயோத்தி சாமியார் பரமஹம்ஸ ஆச்சாரியா மீது மதுரையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திமுக வழக்கறிஞர் அணி சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் சாமியார் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். கொலை மிரட்டல், பொது அமைதியை சீர் குலைத்தல், வகுப்புகள் இடையே பகை வளர்த்தல் உள்ளிட்ட 5  பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சாமியார் பேசிய வீடியோவை வெளியீட்டு அவதூறு கருத்துகளைப் பரப்பிய பியாஸ் ராய் என்பவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
 

கருத்துகள் இல்லை: