திங்கள், 4 செப்டம்பர், 2023

உதயநிதிக்கு எதிராக டெல்லி தமிழக அரசு இல்ல ஆணையரிடம் பா.ஜ.க. குழு கடிதம்

maalaimalar :   சென்னை :சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய பேச்சு இந்திய அளவில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
 அவர் பேசும்போது, கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்க கூடாது. ஒழித்துக் கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனம். சனாதனம் என்பதை எதிர்ப்பதை விட ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம் ஆகும் என்று கூறி இருந்தார்.
அமைச்சர் உதயநிதியின் இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பேசுகையில், தமிழக முதலமைச்சரின் மகன் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. தலைவர்கள் சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.


இவர்கள் வாக்கு வங்கி அரசியலுக்காக, சனாதன தர்மம் குறித்து பேசுகின்றனர். சனாதன தர்மத்தை அவமதிக்கின்றனர் என்று கடுமையாக பேசி உள்ளார்.

மத்திய பிரதேச பொதுக் கூட்டத்தில் பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பேசுகையில், வருகிற தேர்தலில் இந்துக்களுக்கான எதிரான வியூகத்தை இந்தியா கூட்டணி பயன்படுத்தப் போகிறதா? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

தி.மு.க.வினர் வெறுப்பு அரசியலை பரப்பி வருவதாகவும் குற்றம் சாட்டி உள்ளார்.

பா.ஜனதாவின் செய்தி தொடர்பாளர் சேஷாக்பூரி வாலா கூறுகையில், உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மத்தை நோயுடன் ஒப்பிட்டு பேசி உள்ளார். சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்பது இந்தியாவில் சனாதனததை பின்பற்றும் 80 சதவீத மக்களை இனப்படுகொலை செய்ய அழைப்பு விடுப்பது போன்றது ஆகும் என்று கண்டனம் தெரிவித்து உள்ளார்.

மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் கூறுகையில், உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்தின் மூலம் தி.மு.க.வினரின் உண்மையான முகம் வெளிப்பட்டுவிட்டது என்று தெரிவித்து உள்ளார்.

சனாதன தர்மம் என்பது நிரந்தரமானது. இது போன்ற அரசியல் கருத்துகளால் எதுவும் மாறி விடாது என்றும் கூறி உள்ளார்.

மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம் சத்திய பிரமாணம் எடுத்துள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், 'கொசுக்களைப் போல' சனாதன தர்மத்தை ஒழிக்க அழைப்பு விடுக்கிறார். இதை இந்து சமய மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு எதிர்க்காமல் மேடையில் இருந்து கேட்டுக் கொண்டிருக்கிறார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூட்டணியின் நோக்கமே சனாதன தர்மத்தை ஒழிப்பது என்கிறார். இந்துக்களுக்கு எதிரானது இந்தியா கூட்டணி என்று கூறி உள்ளார்.

இப்படி பல்வேறு பா.ஜனதா தலைவர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

இதற்கிடையே டெல்லி பா.ஜனதா தலைவர் வீரேந்திர சச்தேவா தலைமையிலான குழுவினர் இன்று டெல்லியில் உள்ள தமிழ்நாடு அரசு இல்ல முதன்மை ஆணையர் ஆஷிஷ் சாட்டர் ஜியிடம் ஒரு கடிதத்தை கொடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கும் படி கூறினர். அந்த கடிதத்தில் சனாதனம் குறித்த அமைச்சர் உதயநிதியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.

கருத்துகள் இல்லை: