புதன், 6 செப்டம்பர், 2023

சனாதனம்... கனிமொழியைத் தொடர்புகொண்ட ராகுல்- பேசியது என்ன?

Kanimozhi, Rahul Gandhi Speech at Parliament | Lok Sabha | VTV Tamil -  YouTube

  மின்னம்பலம் - Aara  :  திமுக இளைஞரணிச் செயலாளரும், தமிழக அமைச்சருமான உதயநிதி, செப்டம்பர் 2ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசிய பேச்சு இந்தியா முழுவதும் அதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது.
பாரதிய ஜனதா கட்சி இந்த விவகாரத்தை தீவிரமாக கையில் எடுத்து, ’இந்துக்களுக்கு எதிரானது திமுக அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணி’ என்று வட மாநிலங்களில் தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.
இந்த அவதூறு பிரச்சாரத்தை எதிர்கொள்ள முடியாமல் காங்கிரஸ் அகில இந்திய பொதுச் செயலாளர் கே. சி. வேணுகோபால் செப்டம்பர் 4 ஆம் தேதி டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து,
காங்கிரஸ் கட்சிக்கு எல்லா மதமும் சமம் தான். அனைவரது நம்பிக்கைகளையும் நாங்கள் மதிக்கிறோம்’ என்று விளக்கம் கொடுத்தார்.


ஒரு படி மேலே போய் மேற்குவங்க முதலமைச்சரும் திருணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, ‘சனாதனத்தை நாங்கள் மதிக்கிறோம். யார் மனதையும் புண்படுத்தும் படி பேச வேண்டாம் என வேண்டிக்கொள்கிறேன்’ என்று தெரிவித்தார்.

இந்த நிலையில்தான் நம்மிடம் பேசிய டெல்லி காங்கிரஸ் பிரமுகர்கள், “சனாதன ஒழிப்பு பற்றி உதயநிதி பேசிய விவகாரத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்கள் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

அதேநேரம் இந்த விவகாரம் வட இந்தியாவில்  அரசியல் ரீதியாக இந்தியா கூட்டணிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் முன்னணி தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி மிகவும் வருத்தத்தில் இருக்கிறார்.

அவர்  திமுக எம்பி கனிமொழியை தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். வட இந்தியாவில் பாஜக செய்துவரும் அவதூறு பிரச்சாரத்தை பற்றி கனிமொழியிடம் தெரிவித்த ராகுல் காந்தி…  ‘இந்தியா கூட்டணியை கட்டியெழுப்பியதோடு, வெற்றி பெற வைக்க திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின்,  அரும்பாடுபட்டு வருகிறார்.

இந்த நேரத்தில் உதயநிதியின் இந்த பேச்சு  அவரது கருத்துரிமை என்றாலும், அரசியல் ரீதியாக இந்தியா கூட்டணிக்கு சற்று பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இது பற்றி ஸ்டாலின் ஜியிடம் தெரிவிக்க வேண்டுகிறேன்’ என  சொல்லியிருக்கிறார்” என்கிறார்கள் டெல்லி காங்கிரஸ் வட்டாரத்தில்.

இதுபோல வட இந்திய தலைவர்கள் சிலர் திமுக டெல்லி புள்ளிகளிடம் தங்கள் வருத்தத்தைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள்.

–வேந்தன்

கருத்துகள் இல்லை: