சனி, 15 ஜூலை, 2023

முதலமைச்சர் ஸ்டாலின்THE WEEK ஆங்கில இதழுக்கு அளித்த முழு பேட்டி : ”பாஜகவின் மக்கள் விரோத ஆட்சி வீழ்த்தப்படும்”

Kalaignar Seithigal -  Lenin  : 11. பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் நீங்கள் ஃபரூக் அப்துல்லா அவர்களையும் மெஹபூபா முப்தி அவர்களையும் சந்தித்தீர்கள்.
பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பின்பு, அங்கு நிலவும் சூழ்நிலையைப் பற்றிய உங்கள் கருத்து என்ன?
காஷ்மீரில் இப்போது இருப்பது உண்மையான அமைதி அல்ல. கையையும் காலையும் கட்டிப் போட்டு, வாயைப் பொத்திவிட்டு ஒருவன் அமைதியாக இருக்கிறான் என்பதைப் போன்ற அமைதிதான் அது.
அரசியல் தலைவர்கள் அனைவரையும் வீட்டுச் சிறையில் வைத்துவிட்டு,
370-ஆவது பிரிவை நீக்கினார்கள். ஏதோ காஷ்மீருக்கு மட்டும்தான் சிறப்புரிமை இருப்பதைப் போல பரப்புரை செய்தார்கள்.
வடகிழக்கு மாநிலங்கள் பலவற்றுக்கும் சிறப்புரிமை தரப்பட்டுள்ளதே. அதை நீக்க பா.ஜ.க.வால் முடியுமா? தைரியம் இருக்கிறதா?


370-ஆவது பிரிவை நீக்கியது பா.ஜ.க.வின் சாதனையல்ல. சிறுபான்மை மக்கள் மனதில் விதைக்கப்பட்ட கீறல் ஆகும்.
12. வடக்கு – தெற்கு என்ற வேறுபாடு மேலும் அதிகமாகியிருக்கிறதா? அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வென்றால், பா.ஜ.க. மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பை மேற்கொள்ளுமா?

மக்கள்தொகைக் கட்டுப்பாடு திட்டத்தை முறையாகப் பின்பற்றிய தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்களுக்கு தண்டனை தரத்தக்க வகையில் தொகுதிகளின் எண்ணிக்கை குறையும். மக்கள்தொகை கட்டுப்பாட்டுத் திட்டத்தைச் சரியாக அமல்படுத்தாத வட மாநிலங்களுக்கு நிறைய மக்களவைத் தொகுதிகள் கிடைக்கும்.

தங்களுக்கு வாக்களிக்காத தென்மாநிலங்களைப் பழிவாங்க, இந்தத் திட்டத்தை செயல்படுத்த நினைக்கிறார்கள். தேர்தலில் வென்றால் அதனை அவர்கள் செய்யலாம் என நினைக்கிறார்கள்.

இது மிகப்பெரிய அரசியல் விளைவுகளுக்கு இட்டுச் செல்லும். தென் மாநிலங்கள் முழுமையாகப் புறக்கணிக்கப்படும். ஏற்கனவே, ஜி.எஸ்.டி. மூலமாக மாநிலத்தின் நிதி ஆதாரங்களை முழுமையாகப் பறித்துவிட்டார்கள். கல்வி உரிமையும் பறி போய்விட்டது. எவ்வளவுதான் முதலீடுகளை ஈர்த்து, தமிழ்நாடு செழித்தாலும் எங்கள் சம்பாத்தியம் அனைத்தையும் ஒன்றிய அரசு பறித்துவிடும். இதனை சொல்வதற்கான ஒரே இடம் நாடாளுமன்றம்தான். அங்கும் நமது குரல் எடுபடாமல் போகுமானால் என்ன செய்ய முடியும்? எனவே, இதற்கான மாற்று ஏற்பாட்டை அனைத்து மாநிலக் கட்சிகளுடன் இணைந்து சிந்திக்க வேண்டும்.

13. ஆளுநரின் செயல்பாடுகள் குறித்துப் பல்வேறு மாநிலங்களிலும் புகார் இருக்கிறது. தமிழ்நாட்டிலும் அத்தகைய சூழல் நிலவுகிறதே?

ஆர்.என்.ரவி அவர்கள் ஆளுநராக வந்தது முதல் தமிழ்நாட்டில் ஏதாவது குழப்பம் ஏற்படுத்துவதையே தனது வேலையாக வைத்திருக்கிறார். அவருக்குப் பலமுறை இதனை உணர்த்தியாகி விட்டது. ஆனாலும் அவர் தன்னை மாற்றிக் கொள்வதாகத் தெரியவில்லை.

அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குவதாக ஆளுநர் ரவி அவர்கள் விடுத்த அறிக்கையானது, ஆளுநர் ரவியின் அரசியலமைப்பு நெறிமுறைகளை மீறுவதாகும். இது நிர்வாக ஒழுக்க மீறல் ஆகும்.

ஒரு அமைச்சரை நியமிப்பதும் – அந்த அமைச்சரை நீக்குவதும் முதலமைச்சரின் தனிப்பட்ட விருப்புரிமை சார்ந்ததே தவிர - வேறு யாருக்கும் அந்த அதிகாரம் இல்லை.

ஒரு அமைச்சருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பதால் - அவரைத் தான் நியமிப்பதாகவோ - அதனாலேயே நீக்கி விடலாம் என்றும் பொருள் அல்ல. அந்த அதிகாரம், நியமனப் பதவியில் உட்கார வைக்கப்பட்டு இருக்கும் ஆளுநருக்கு இல்லை. அதனை அவர் முதலில் புரிந்து கொள்ளவேண்டும். அவருக்கான வேலைகளை மட்டும் அவர் பார்க்க வேண்டும்.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்ட மசோதாக்களுக்கு கையெழுத்து போடாமல் வைத்துள்ளார். அதனைப் போட்டு அனுப்ப வேண்டும்.

அதை விட்டுவிட்டு தனக்கு உரிமையில்லாத செய்கைகளில் மூக்கை நுழைத்து மூக்கறுபட்டுக் கொண்டு இருக்கிறார் ஆளுநர்.

தமிழ்நாடு வளர்வது, அமைதியாக இருப்பது அவருக்குப் பிடிக்கவில்லை. குழப்பம் ஏற்படுத்தி, இந்த மாநிலத்தைக் கெடுக்க நினைக்கிறார். அவரிடம் நல்லெண்ணம் இல்லை.

14. ஆளுநர்களால் அடிக்கடி தொல்லைக்கு உள்ளாகும் மாநிலங்கள் இதனை எதிர்கொள்ள ஒரு பொதுவான வழிமுறை வேண்டும் என்று நினைக்கிறீர்களா?

ஆளுநர் பதவியையே நீக்கிவிடுவதுதான் ஒரே வழி!

15. நீண்ட காலமாகத் தமிழ்நாடு தொழில்துறையில் முன்னோடி மாநிலமாக உள்ளது. தற்போது ஒன்றிய அரசு உட்கட்டமைப்புத் திட்டங்களைப் பெரிய அளவில் முன்னெடுத்து வரும் நிலையில், இதன் அடுத்தகட்ட பாய்ச்சலில் தமிழ்நாடு அங்கம் வகிப்பதை எவ்வாறு உறுதி செய்வீர்கள்?

தமிழ்நாட்டினை மேலும் வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்லவும், மாபெரும் பொருளாதார மாற்றத்தை மக்களுக்கு அளிக்கும் வகையிலும் தமிழ்நாடு அரசு புதிய முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றது. அதன் ஒரு பகுதியாக, வரும் 2024-ஆம் ஆண்டு ஜனவரி மாதம், தமிழ்நாட்டில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு ஒன்றை மிகப்பெரிய அளவில் நடத்திட திட்டமிட்டு இருக்கிறோம்.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை வடிவமைத்திடுவதில் முக்கிய பங்காற்றிடும் விதமாக, 2030-2031 நிதியாண்டிற்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக மாறுவதற்கான ஒரு இலட்சிய இலக்கினை நிர்ணயித்து, அந்தப் பாதையில் பயணித்து வருகிறோம்.

இந்த இலக்கினை அடைந்திட, 23 இலட்சம் கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்தாக வேண்டும்.

46 இலட்சம் நபர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கிடவும் வேண்டும். அதற்கான அனைத்து முயற்சிகளையும் நாங்கள் எடுத்து வருகின்றோம்.

தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் நடந்த இந்த இரண்டு ஆண்டுகளில் முதலீடுகளை ஈர்க்கும் மாநிலமாக தமிழ்நாடு முன்னேறி வந்துள்ளது.
 

கருத்துகள் இல்லை: