செவ்வாய், 11 ஜூலை, 2023

கோயிலைச் சுற்றி தீண்டாமை வேலி! வேலூர் மாவட்டம் கெம்மங்குப்பம்

minnambalam.com - avi : பட்டியல் சமூகத்தினர் உள்ளே வரக் கூடாது என்பதற்காக கோயிலைச் சுற்றி அமைத்த தீண்டாமை வேலியைப் பிடுங்கியெறிந்த அதிகாரிகளின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் அடுத்த கெம்மங்குப்பம் கிராமத்திலுள்ள மூன்றரை ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தில் முருகன், முனீஸ்வரர், ஆஞ்சநேயர், கெங்கையம்மன் சந்நிதிகள் அடங்கிய கிராமக் கோயில் அமைந்திருக்கிறது.
அதனருகில், சிறிய விளையாட்டு மைதானம், நெல் களம், காரிய மேடை, குளம், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி போன்றவையும் இருக்கின்றன.
அனைத்துச் சமூக மக்களும், இந்தக் கோயில்களில் ஒன்றுகூடி வழிபட்டு, காரிய மேடை, குளம் போன்றவற்றையும் பயன்படுத்தி வருகின்றனர்.


அதோடு, அங்கு வசிக்கும் பட்டியல் சமூக மக்கள் இந்தக் கோயில் வளாகத்தில் இருக்கும் குடிநீர்க் குழாயிலிருந்துதான் தண்ணீர் பிடித்துச் செல்ல வேண்டும்; கோயிலையொட்டிய பொதுப் பாதை வழியாகத்தான் அவர்களது விவசாய நிலத்துக்கும் செல்ல வேண்டும்.

இந்த நிலையில் சமீபத்தில் மாற்றுச் சமூகங்களைச் சேர்ந்த சிலர் கோயில் அமைந்திருக்கும் மூன்றரை ஏக்கர் இடத்தைச் சுற்றிலும் திடீரென தடுப்பு வேலி அமைத்து, பட்டியல் சமூகத்தினரை உள்ளே அனுமதிக்காமல் தடுத்திருக்கிறார்கள்.

‘‘கோயில் அமைந்திருக்கும் இந்த இடத்துக்குள் பட்டியல் சமூகத்தினர் நுழைவதையும், அங்குள்ள காரிய மேடை, நீர்த்தேக்கத் தொட்டியை அவர்கள் பயன்படுத்துவதையும், குடிநீர் பிடித்துச் செல்வதையும் விரும்பாத காரணத்தினால்தான் மாற்றுச் சமூக நபர்கள், தீண்டாமை வேலியை அமைத்திருக்கிறார்கள்’’ என்ற புகார் எழுந்தது.

இதுகுறித்து, நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி குடியாத்தம் வருவாய்க் கோட்டாட்சியர் வெங்கட்ராமனிடம், பட்டியல் சமூகத்தினர் புகார் அளித்தனர்.

இதையடுத்து, இரு தரப்பினரையும் அழைத்து கோட்டாட்சியர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

Untouchable fence in temple near Vellore

அதில், ‘‘அரசுக்குச் சொந்தமான இடத்தில் உரிய அனுமதியின்றி, தடுப்பு வேலி அமைத்தது மிகவும் தவறான செயல். வேலியை உடனே அகற்ற வேண்டும்.

இனிவரும் காலங்களில், பிரச்சினைக்குரிய இடத்தில் சட்டவிரோதச் செயல்களில் யாரேனும் ஈடுபட்டால் அவர்கள்மீது காவல்துறையினர் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என உத்தரவிட்டார்.

தொடர்ந்து பிரச்சினைக்குரிய கோயில் இடத்தில் அமைக்கப்பட்டிருந்த அந்தத் தடுப்பு வேலியை அதிகாரிகள் அதிரடியாகப் பிடுங்கியெறிந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுபற்றி பேசியுள்ள கெம்மங்குப்பம் பட்டியல் சமூக மக்கள்,

‘‘இதுநாள் வரை கோயில் வழிபாட்டு உரிமையில் எங்களுக்குப் பிரச்சினையே இருந்ததில்லை. மாற்றுச் சமூகத்தினருடன் இணக்கமாகத்தான் வாழ்ந்து வருகிறோம்.

வேண்டுமென்றே ஒருசிலர் கம்பி வேலி அமைத்து, எங்களை உள்ளே நுழையவிடாமல் தடுக்கப் பார்க்கிறார்கள்.

ஏற்கெனவே, கோயில் வளாகத்துக்குள் நுழைந்து தண்ணீர் பிடித்துச் செல்ல தடை போட்டுவிட்டனர். காரணம் கேட்டால், ‘நீங்கள் சுத்தமாக இல்லை. அதனால், உள்ளே வரக் கூடாது’ என்கிறார்கள். ஒருசிலரால், அமைதி சீர்குலைகிறது.

எதிர்கால சந்ததியராவது, சாதிப் பாகுபாடின்றி சுமுகமாக இணைந்து வாழ வேண்டும் என்பதே எங்களின் விருப்பம்’’ என்கின்றனர் வேதனையோடு.

இந்தப் பிரச்சினை இதோடு முடிந்துவிடுமா… மேலும் தொடருமா என்கிற கவலை அங்கு வசிக்கிற அனைத்து சமூகத்தினரிடையே நிலவுகிறது.

ராஜ்

கருத்துகள் இல்லை: