வியாழன், 27 ஏப்ரல், 2023

அமித் ஷா கேட்ட 20 இடங்கள்!.. அதிர்ச்சியில் உறைந்த எடப்பாடி பழனிசாமி .. டெல்லியில் நடந்தது என்ன? விபரம்

 மாலைமலர் : அ.தி.மு.க. பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றுக் கொண்டபிறகு நேற்று முதன் முதலாக டெல்லி சென்றதும், அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவானது.
தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையுடன் உரசல் ஏற்பட்டிருந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி-அமித்ஷா சந்திப்பு எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று மற்ற கட்சிகளும் ஆவலுடன் உற்று நோக்கின.


மத்திய மந்திரி அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சுமார் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினார். தமிழக அரசியல் நிலவரம், பாராளுமன்ற தேர்தல், கூட்டணி, தொகுதி பங்கீடு என்று எல்லா விஷயங்களையும் அவர்கள் அலசி ஆராய்ந்தனர்.
இதுபற்றி டெல்லி வட்டாரம் மூலம் சில தகவல்கள் கிடைத்துள்ளன. அதன்படி முதலில் பாராளுமன்ற தேர்தல் கூட்டணி பற்றிதான் பேசப்பட்டது என்பது தெரிய வந்துள்ளது.

அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க. தே.மு.தி.க. உள்பட அனைத்து கட்சிகளையும் இடம்பெற செய்ய வேண்டும் என்பதில் அமித்ஷா உறுதி பட தெரிவித்துள்ளார். இதைக் கேட்டதும் எடப்பாடி பழனிசாமி அதற்கு சம்மதம் தெரிவித்து இருக்கிறார்.

ஆனால் தொகுதி பங்கீடு பற்றி பேச்சு வந்தபோது தான் சற்று நெருடல்கள் ஏற்பட்டு இருக்கிறது. தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் அ.தி.மு.க.வுக்கு பாதி தொகுதியும், மீதமுள்ள கூட்டணி கட்சிகளுக்கு பாதி தொகுதியும் என்று தொகுதி பங்கீடு செய்து கொள்ளலாம் என்று அமித்ஷா தெரிவித்ததாக கூறப்படுகிறது.

ஆனால் எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து இதற்கு சம்மதம் தெரிவிக்கப் படவில்லை. தேர்தல் சமயத்தில் இதுபற்றி விரிவாக பேசலாம் என்று அ.தி.மு.க. தலைவர்கள் தெரிவித்துள்ளனர். என்றாலும், பா.ஜ.க. தலைவர்கள் தங்கள் திட்டத்தை கைவிடவில்லை.

அமித்ஷா தொடர்ந்து பேசுகையில், 'அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு 20 தொகுதிகளை தாருங்கள். அதை நாங்கள் பிரித்து கொள்கிறோம். அதில் பா.ஜ.க. எத்தனை இடங்களில் போட்டியிடும் என்பதையெல்லாம் நாங்கள் தீர்மானித்து கொள்கிறோம்' என்று கூறி இருக்கிறார்.

இதைக் கேட்டதும் அ.தி.மு.க. தலைவர்கள் எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. எனினும் அமித்ஷா தொடர்ந்து பேசுகையில், 'கூட்டணி உறுதியாகிவிட்டது என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் தொகுதிகளை ஒதுக்கீடு செய்வதை விரைந்து முடிக்க வேண்டும். அதில் கவனம் செலுத்துங் கள்' என்று அறிவித்து இருக்கிறார்.

அவர் மேலும் கூறுகையில், 'எந்தெந்த தொகுதிகளை தருவீர்கள் என்பதை முன்கூட்டியே உறுதிபடுத்தினால்தான் அந்த தொகுதிகளில் வேட்பாளர்களை தேர்வு செய்து களப்பணி செய்வதற்கு எங்களுக்கு வசதியாக இருக்கும் என்றும் கூறியதாக தெரிகிறது.

கடந்த 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு 5 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த தடவை குறைந்தபட்சம் 9 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்த வேண்டும் என்பதில் பா.ஜனதா தீவிரமாக உள்ளது.

கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கோவை, வேலூர், ராமநாதபுரம் உள்பட 9 தொகுதிகளை பா.ஜனதா இப்போதே தேர்வு செய்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதை வலியுறுத்தும் வகையில் தான் அமித்ஷா அ.தி.மு.க. கூட்டணியில் தோழமை கட்சிகளுக்கு 20 இடங்கள் வேண்டும் என்று கேட்டு வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

அ.தி.மு.க. தலைவர்கள் இதில் பதில் சொல்ல ஆர்வம் காட்டாத நிலையில் தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையில்தான் கூட்டணி செயல்படும் என்று அமித்ஷாவும், நட்டாவும் உறுதிபடுத்தி இருக்கிறார்கள். அதன் பிறகுதான் அ.தி.மு.க. தலைவர்களுக்கு சற்று நிம்மதி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து தி.மு.க. கூட்டணியின் பலம்-பலவீனம் பற்றி ஆய்வு செய்திருக்கிறார்கள். அடுத்து ஓ.பன்னீர் செல்வம் பிரிவதால் பாதிப்பு ஏற்படுமா? என்றும் விவாதித்து இருக்கிறார்கள். மேலும் பிரசாரம் பற்றியும் ஆய்வு செய்து இருக்கிறார்கள்.

தமிழகத்தில் தற்போது நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனின் ஆடியோ விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில் அதை பிரசாரத்திற்கு கையில் எடுக்கலாமா? என்பது பற்றியும் அவர்கள் விவாதித்ததாக கூறப்படுகிறது.

இந்த விவாதம் நடந்த போது மாநில பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையும் உடன் இருந்துள்ளார். இதுவரை டெல்லி மேலிட தலைவர்களை பார்க்கும் போது மாநில தலைவர் உடன் இருந்ததில்லை.

முதல் முறையாக அண்ணாமலையையும் அருகில் வைத்துக்கொண்டே அமித்ஷா பேசி உள்ளார். எடப்பாடி பழனிசாமி மற்றும் அ.தி.மு.க.வினருடன் சுமூகமான நிலையில் கட்சி பணியாற்ற வேண்டும் என்று அண்ணாமலையிடம் தெரிவித்து அமித்ஷா சமரசம் செய்ததாகவும் கூறப்படுகிறது.

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை சலசலப்பு ஏற்பட்ட பிறகு பா.ஜனதா கட்சி அதிகாரப்பூர்வமாக எந்த அணி பக்கமும் சாயாமல் இருந்தது. தற்போது முதல் முறையாக எடப்பாடி பழனிசாமியை அழைத்து அங்கீகரித்துள்ளனர்.

இது எடப்பாடி பழனிசாமிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக கருதப்படுகிறது. அதே சமயத்தில் அண்ணாமலையும் உடன் இருந்ததால் தமிழக பா.ஜ.க.வுக்கும் சம வெற்றியாக பேசப்படுகிறது.

கருத்துகள் இல்லை: