திங்கள், 24 ஏப்ரல், 2023

12 மணி நேர வேலை சட்டமுன்வடிவு செயலாக்கம் நிறுத்திவைப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

 Kalaignar Seithigal  - Lenin  : நாட்டில் தொழிற்சாலைகள் பெருகுவதற்கு அங்கு தொழில் அமைதி மிக அவசியமானது.
தொழிலாளர் நலன் காக்கப்பட்டால்தான் தொழில் அமைதி நிலவும் என்பதை உணர்ந்து திராவிட முன்னேற்றக் கழக அரசு எப்போதெல்லாம் ஆட்சிப் பொறுப்பிற்கு வருகிறதோ, அப்போதெல்லாம் தொழிலாளர் நலன் பேணும் அரசாகவே செயல்பட்டு வந்துள்ளது.
தற்போது அதே சிந்தனையைத் தாங்கி, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் வகுத்துத் தந்த பாதையில், அதன் அடியொற்றி இந்த அரசு செயல்பட்டு வருகிறது.
திராவிட முன்னேற்றக் கழக அரசு எப்போதுமே தொழிலாளர் சமுதாயத்தின் தோழனாக, தொண்டனாக, காவல் அரணாக என்றென்றும் விளங்கும் என்பதற்கு கீழ்க்காணும் திட்டங்களே சான்றாகும்.


1969-ல் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன் தொழிலாளர் நலனில் தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக, “தொழில், தொழிலாளர் நலம், கூட்டுறவு” என ஒன்றாக இருந்த மூன்று துறைகளிலிருந்து தொழிலாளர் நலனுக்கெனத் தனித்துறையையும், தனி அமைச்சகத்தையும் உருவாக்கியது;

இரத்தம் சிந்திப் போராடி, உயிர்த் தியாகம் செய்து, தொழிலாளர் சமுதாயம் பெற்ற உரிமைகள் குறித்த வரலாற்றை நினைவுபடுத்தும் வகையில், 1969 ஆம் ஆண்டில் மே முதல் நாளைச் சம்பளத்தோடு கூடிய பொது விடுமுறை நாளாக அறிவித்துச் சட்டம் இயற்றி நடைமுறைப்படுத்தியது;

1969-ல் அவசரச் சட்டம் பிறப்பித்து விவசாயத் தொழிலாளர்க்கு நியாயமான கூலி வழங்க வகை செய்தது; பீடித் தொழில், பனியன் நெசவு, தோல் பதனிடும் தொழில், எண்ணெய் ஆலைகள், செங்கற் சூளை, உப்பளம் முதலியவற்றில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்குத் தொழிற்சங்கப் பலம் இல்லாமையால் போதிய ஊதியம் வழங்கப்படாமல் அல்லல்பட்டு வந்த நிலைகண்டு அத்தொழிலாளர்களுக்குத் தொழில் முகவர்களிடம் பேசி, அவர்களுக்கெல்லாம் குறைந்தபட்ச ஊதியம் கிடைக்கச் செய்தது;

தொழிலாளர்கள் ஓய்வு பெறும்போது அரசு ஊழியர்களுக்கு உள்ளது போல் “பணிக்கொடை” வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்தியது;

விபத்துகளால் பாதிக்கப்படும் தொழிலாளர்களின் குடும்பங்களைக் காப்பதற்காகத் தொழில்-விபத்து நிவாரண நிதித் திட்டத்தை உருவாக்கியது;

கட்டுமானத் தொழிலாளர் நலவாரியத்துடன் விவசாயத் தொழிலாளர் நல வாரியம், மீனவர் நலவாரியம், விவசாயத் தொழிலாளர் நலவாரியம், மகளிர் நலவாரியம், மாற்றுத் திறனாளிகள் நலவாரியம், கிராமக் கோயில் பூசாரிகள் நலவாரியம், நரிக்குறவர் நலவாரியம், தூய்மைப் பணிபுரிவோர் நலவாரியம் உள்ளிட்ட 36 அமைப்புசாரா நலவாரியங்களை உருவாக்கி உதவிகள் செய்தது தி.மு.க. அரசு;

1990ஆம் ஆண்டு மேதின நூற்றாண்டு விழாவையொட்டி, சென்னை நேப்பியர் பூங்காவிற்கு “மேதினப் பூங்கா”எனப் பெயரிட்டு, மேதின நினைவுச் சின்னத்தை நிறுவியர் கலைஞர். வேலைவாய்ப்பற்றோர் நிவாரண உதவித் தொகைத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது திமுக அரசு தான்

கருத்துகள் இல்லை: